Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 21-07-2022

இன்றைய தியானம்(Tamil) 21-07-2022

 

சோம்பேறி

 

“சோம்பேறியின் கைகள் வேலைசெய்யச் சம்மதியாததினால் அவன் ஆசை அவனைக் கொல்லும்” – நீதிமொழிகள் 21:25

 

உலகப் புகழ்பெற்ற அறிஞர் லியோ டால்ஸ்டாய் வாழ்ந்த காலத்தில் முதல் தரமான சோம்பேறி ஒருவன் காணப்பட்டான். அவன் டால்ஸ்டாயை சந்திக்க வந்து “ஐயா, என் தகப்பனாருக்குக் கால்கள் இல்லை, ஆகவே எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்” என்றான். கட்டுமஸ்தான வாலிபனாய் இருந்த அவனைப் பார்த்து “தற்காலிக உதவி வேண்டுமா? அல்லது நிரந்தர உதவி வேண்டுமா?” என்று கேட்டார். அவன் மனதிற்குள் சந்தோஷமடைந்து, நிரந்தர உதவியைக் கேட்போமென்று, “ஐயா, தயவு கூர்ந்து நிரந்தரமான உதவிகளைச் செய்யுங்கள்” என்றான். 

 

“உனது வலதுகையை வெட்டிக்கொடு, ரூ.500 தருகிறேன்” என்றார். சோம்பேறிக்குக் கடுங்கோபம் வந்தது. “வெறும் ரூ.500 மட்டுந்தானா என் கையின் மதிப்பு?” என்றான் “சரி, உன் கண்ணைப் பிடுங்கிக் கொடு, ரூ.1000 தருகிறேன்” என்றார். மீண்டும் சோம்பேறியின் கோபம் பற்றியெரிந்தது. அவனுக்கு டால்ஸ்டாய் காரியத்தை விளக்க ஆரம்பித்தார். “உன் விலையேறப்பெற்ற சரீரத்தை வைத்து வேலைசெய்து பிழைத்துக்கொள்” என்று தெளிவாகப் புரியப் பண்ணினார். வாலிபனுடைய கண்கள் திறக்கப்பட்டது, தன்னிடம் எவ்வளவு பெலமிருந்தும் இதையறியாது சோம்பேறியாகக் காணப்பட்டதைக் குறித்து வெட்கப்பட்டான். அன்றிலிருந்து அவனுடைய சோம்பேறித்தனம் மாறி சுறுசுறுப்புள்ள வாலிபனாகச் செயல்பட ஆரம்பித்தான். உலகப்புகழ்பெற்ற நூல்களை எழுதிய அறிஞர் டால்ஸ்டாயின் மூலம் சோம்பேறி ஒருவன் மாற்றப்பட்டது விசேஷமாய்ப் பார்க்கப்படுகிறது. 

 

கிறிஸ்துவில் பிரியமானவர்களே! சாலொமோன் ஞானி மூலம் இன்றைக்கும் அநேக சோம்பேறிகளுக்கு செய்தி சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கின்றது. சோம்பல் ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் எவ்வவளவு தரித்திரத்தையும், கந்தைகளையும் கொண்டு வருமென்று நீதிமொழிகளில் வாசிக்கின்றோம். இன்றைக்குச் செய்யவேண்டியதை நாளைக்கு என்று தள்ளிப்போடுவது சோம்பேறித்தனத்தின் பிரதான அறிகுறியாகும். அன்றன்றைக்கு, அவ்வப்போது, அந்தந்த வேலைகளை சீராய்ச் செய்வோமென்றால், சோம்பேறித்தனத்திற்கு அங்கே வேலை இல்லை. சோம்பேறிகளுடைய – முடிவு புறம்பான இருள் என்று மத்தேயு சுவிசேஷத்தில் இயேசு கூறுகிறார். மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு என்று சொல்வது போல சோம்பேறியானவன் வீட்டிற்கும் நாட்டிற்கும் பெரும் பாரமாக இருப்பான். ஜெபியுங்கள், சோம்பேறித்தனத்திலிருந்து வெளியே வர இயேசு உங்களுக்கு உதவி செய்வார். 

- P.ஜேக்கப் சங்கர்

 

ஜெபக்குறிப்பு:

ஒவ்வொரு மாதமும் பத்திரிக்கைகள் அச்சடிப்பதற்கும், வெளியிடுவதற்குமான தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250


Comment As:

Comment (0)