Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil)  24-11-2020 (Romans Special)

இன்றைய தியானம்(Tamil)  24-11-2020 (Romans Special)

பலனும் முடிவும் 

“இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன்.” – ரோமர் 6: 22

நைட்ரஜன் சத்து குறைந்த நிலத்தில் வாழும் சில தாவரங்கள் பூச்சிகளைப் பிடித்து உட்கொண்டு, தங்களால் தயாரிக்கமுடியாத புரதச்சத்தைப் பெற்றுக்கொள்கின்றன. பூச்சிகளைப் பிடிக்க, தங்கள் இதழ்களில் பல கவர்ச்சிகரமான அமைப்புகளையும், பளபளக்கும் தேன் போன்ற திரவங்களையும் சுரக்கின்றன. இதனால் கவரப்பட்ட பூச்சிகள் அதன் இலைகளின் மேல் வந்து அமர்ந்தவுடன் இலைகள் மூடிக்கொள்ளும். பூச்சிகள் ஜீரணிக்கப்பட்டு அத்தாவரங்களுக்கு உணவாகிவிடுகின்றன. இப்படித்தான் சாத்தான் ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த உலகில் பல கவர்ச்சிகரமான பாவக்கண்ணிகளை வைத்து, தன்வசப்படுத்திக்கொண்டு அவனை நித்திய மரணத்துக்குள் தள்ளிவிடுகிறான். 

மாறாக ஒரு மனிதன் இரட்சிக்கப்பட்டு, தேவனுக்கு அடிமையாகும்போது, பரிசுத்தமாகிக்கொண்டே போகிறான். முடிவில் நித்திய ஜீவனையும் பெற்றுக்கொள்கிறான். நான் உங்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர் என்று சொல்கிற நம் தேவன் நம்மை எப்படி பரிசுத்தமாக்குகிறார்? மகிழ்ச்சிகரமான- துக்ககரமான சந்தர்ப்ப சூழ்நிலைகளை நம் வாழ்வில் அனுமதித்து, அவர் விரும்பும் பரிசுத்த சாயலில் நாம் வளரும்படி செய்கிறார். நம்முடைய பாடுகள், வேதனைகள், அவமானங்கள், நமக்கு நேர்ந்த தீமைகள் எல்லாவற்றையும் நாம் அவரோடு நெருங்கவும், நம்மைப் பரிசுத்தப்படுத்தவும் பயன்படுத்துகிறார். அன்பு, தாழ்மை, பொறுமை, விட்டுக்கொடுத்தல் போன்ற கிறிஸ்துவின் சுபாவங்கள் நம்மில் உருவாகும் சூழ்நிலைகளில் நம்மை வழி நடத்திச் செல்கிறார். உதாரணமாக, பொறுமையற்றவர்களை பொறுமையைக் கற்றுக் கொள்ள, கடினமான மேலதிகாரிகளின் கீழ் பணியாற்றும்படி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில் முறுமுறுக்காமல், பின்வாங்காமல், ஆண்டவரே இந்த சூழ்நிலையில் உம்மைப்போல நான் மன்னிக்க, பொறுமையாயிருக்க கிருபை, பெலன் தாரும் என்று ஜெபிக்கும்போது கர்த்தர் நமக்கு உதவி செய்வார். 

தேவன் திட்டமிட்ட சாயலில் நம்மை உருவாக்க உங்களையும், என்னையும் அவரைப்போல மாற்ற, நம்மிலுள்ள வேண்டாத சுபாவங்களை செதுக்கி எறிந்துவிடத் தீர்மானித்து, நம்மை உடைத்து உருவாக்குகிறார். இவ்வாறு நம்மை உருவாக்க நாம் தேவனை அனுமதிக்க வேண்டும். இப்படி நாம் தேவனுக்கு அடிமைகள் ஆகும்போது தேவன் நமக்கு பரிசுத்தத்தின் மேல் வாஞ்சையை ஏற்படுத்துகிறார். நம்மைப் பரிசுத்தப்படுத்துவதில் தேவனுக்கும் பங்கு உண்டு. நமக்கும் பங்கு உண்டு. ஒரு கண்ணாடி நம்முடைய சாயலை நமக்குக் காட்டுவதுபோல், வேதவசனங்கள் நம்முடைய உள்ளான மனிதனின் சாயலை நமக்குக் காட்டுகின்றன. தேவன் விரும்பும் நபர்களாக மாறுவோம். பரிசுத்தத்தின் மேல் பரிசுத்தம் அடைந்து கொண்டே செல்வோம். அல்லேலூயா!
-    Mrs. கீதா ரிச்சர்ட் 

ஜெபக்குறிப்பு:
அனைத்து மாநிலங்களிலும் அர்ப்பணிப்போடு ஊழியம் செய்யும் 500 மிஷனெரிகளை தேவன் நம்மோடு இணைக்க ஜெபியுங்கள்.  

இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app: 
தமிழில் பெற -  +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.vmmorg.template.msmapp

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250


Comment As:

Comment (0)