Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 14-09-2021

இன்றைய தியானம்(Tamil) 14-09-2021

 

சீத்திம் மரம்

 

“பெசலெயேல் சீத்திம் மரத்தினால் பெட்டியை உண்டுபண்ணினான்.” – யாத். 37:1

 

சீத்திம் மரம் இஸ்ரவேல் தேசத்தில் காணப்படும் ஒரு வகை மரம். இம்மரத்தின் அனைத்து பகுதியிலும் நீண்ட முட்கள் காணப்படும். காற்றில் அசையும் போதெல்லாம் இக்கிளைகளில் உள்ள முட்கள் அசைந்து அம்மரத்தையே குத்தி கிழித்து அதிலிருந்து பிசின் வழியும். அந்த மரம் இருப்பதோ வனாந்திரமான இடம். ஏற்கனவே தண்ணீரில்லாமல் போராடி வளர்கிறது. இந்த சூழலில் தன்னுடைய முட்களால் குத்திக் கிழிக்கப்பட்டு இருந்த தண்ணீரும் வெளியேறுகிறது. இப்படி வெளியேற வெளியேற அம்மரம் தன்னை இறுக்க ஆரம்பிக்கும். முடிவில் இறுகி இறுகி மரம் வலுவடைந்து அதன் முட்கள் உதிர ஆரம்பிக்கும். இம்மரத்தினால் செய்யப்பட்ட பொருட்கள் சுமார் 4000 ஆண்டுகளுக்கும் அதிகமாய் பயன்படுத்தப்படுகிறது. யாருக்கும் வேண்டாத ஒரு உபயோகமற்ற முள்மரம், இதனையும் நம் தேவன் நினைவு கூர்ந்தார். 

யாத். 25:8 ல் ஆசரிப்புக் கூடாரத்தில் பயன்படுத்தப்படும் உடன்படிக்கைப் பெட்டி, தண்டுகள், மேஜை, பலகைகள் ஆகிய மரவேலைகள் அனைத்தும் இம்மரத்தாலேயே செய்யப்பட்டன. தேவன் ஆசரிப்புக் கூடாரத்துக்காக கொடுக்க சொன்ன காணிக்கைகளில் சீத்திம் மரமும் ஒன்று. 

 

இதே போன்று வேதத்தில் மாற்கு 5:5ல் தன்னைத்தான் கல்லுகளால் குத்தி தன்னைக் காயப்படுத்திக் கொண்டிருந்த அநேக பிசாசுகள் பிடித்திருந்த மனிதனைத் தேடி இயேசு வந்தார். அவனிடம் இருந்த நூற்றுக்கணக்கான பிசாசுகளைத் துரத்தினார். அவன் ஆடை அணிந்தவனாய் புத்தி தெளிந்தபின் அவருக்கு பின்வருகிறேன் என சொல்ல, இயேசுவோ அவனைப் பார்த்து, “நீ உன் வீட்டுக்குத் திரும்பிப் போய் தேவன் உனக்கு செய்தவைகளையெல்லாம் அறிவி” என்று சொல்லி அவனை அனுப்பி விட்டார். லூக்கா 7:39ன்படி அவனும் போய் ஊரெங்கும் அவரை பற்றியும் அவர் செய்த அற்புதங்களையும் அறிவித்தான். அதுவரையில் இயேசுவை ஏற்றுக்கொள்ளாத அவ்வூரார், அவனது சாட்சியை கேட்டபின் இயேசுவுக்காய் காத்திருந்து சந்தோஷமாய் அவரை ஏற்றுக்கொண்டார்கள். 

 

வாழ்க்கையில் நெடுநாளாய் ஏற்பட்ட காயங்களால் உங்களில் யாரேனும் சோர்ந்து போனீர்களோ? சீத்திம் என்ற முள் மரத்தை தேவன் மறவாமல் தன்னுடைய கனமான வேலைக்காக பயன்படுத்திக் கொண்டார். அதேபோல தன்னைத்தான் காயப்படுத்திக் கொண்டிருந்த அந்த கல்லறை மனிதனையும் கூட தேவன் மறக்கவில்லையே! அவனையும் தம் நாம மகிமைக்கென பயன்படுத்தினாரே. அந்த நல்ல தேவன் காயப்பட்ட உங்கள் இருதயத்தையும் நிச்சயமாய் தேற்றுவார். அவரே காயங்கட்டுகிற தேவன்; உங்கள் வேதனைகளை நீக்கி சுகமாய் வாழச் செய்வார். ஆமென்! 

- Mrs. மஞ்சுளா 

 

ஜெபக்குறிப்பு: 

நமது மீடியா ஊழியங்களில் பணிபுரிய திறமையான அர்ப்பணிக்கப்பட்ட ஊழியர்கள் கிடைக்க ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250


Comment As:

Comment (0)