இன்றைய தியானம்(Tamil) 01.02.2025
இன்றைய தியானம்(Tamil) 01.02.2025
திருப்தியாகும் திமிங்கலம்
"(சமுத்திரம்) அதிலே கப்பல்கள் ஓடும்; அதிலே விளையாடும்படி நீர் உண்டாக்கின திமிங்கிலங்களும் உண்டு" - சங்கீதம் 104:26
104 ஆம், சங்கீதம் முழுவதுமே கடவுள் தன்னுடைய படைப்புகளை, எவ்வளவு நேர்த்தியாக படைத்திருக்கிறார், அவைகளின் செயல்பாடுகளை எப்படி கவனித்துக் கொண்டிருக்கிறார் என்பதை நமக்கு தெளிவுபடுத்தி விளக்குகிறது. பறவைகள், விலங்குகள், சூரியன், சந்திரன், சமுத்திரம் என ஒவ்வொன்றுக்குமான பணிகள், அவைகளுக்கான உணவுகள், பறவை மற்றும் விலங்கினத்துக்கான வாழ்விடங்கள் அனைத்தும் ஆண்டவரால் அருளப்படுகின்றன. ஒவ்வொரு படைப்புக்கும் ஒரு முக்கியத்துவம் உண்டு, எனினும் திமிங்கிலங்கள் சிறப்பிடம் பிடிக்கின்றன. காரணம் அவைகள் படைக்கப்பட்ட நோக்கம் சமுத்திரத்தில் விளையாடுவதற்காக!
ஆண்டவரை நாம் அப்பாவாக, அம்மாவாக, படைத்தவராக, மீட்பராக, நியாயாதிபதியாக பார்க்கிறோம். ஆனால் நம் ஆண்டவர், ஒரு உயிரினத்தை மகிழ்வுடன் விளையாட மட்டுமே படைத்திருக்கிறார். தொடர்ந்து வரும் வசனங்களில் "ஏற்ற வேளையில் ஆகாரத்தைத் தருவீர் என்று அவைகளெல்லாம் உம்மை நோக்கிக் காத்திருக்கும். நீர்கொடுக்க, அவைகள் வாங்கிக் கொள்ளும்; நீர் உம்முடைய கையைத் திறக்க, அவைகள் நன்மையால் திருப்தியாகும்."
இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது! என்று சிந்திக்கும் நண்பரே, ஒரு திமிங்கிலத்தின் ஒரு வேளை உணவு 3,500 கிலோ. அப்படியென்றால் எத்தனை திமிங்கிலங்கள் சமுத்திரத்தில் காணப்படுகின்றன. எத்தனை இனங்கள், கூட்டங்கள், எல்லாவற்றையும் போஷிக்க ஆண்டவரால் முடியும் என்றால், உங்களுடைய சிறிய தேவைகளும் கூட ஆண்டவருக்கு தெரியும் அல்லவா? சகோதரனே, சகோதரியே, நான் இந்த மாதத்தில் என்ன செய்யப் போகிறேன். கடன் இருக்கிறதே, என் மகளுடைய திருமணம், அதற்கான செலவுகளுக்கு என்ன செய்வேன்? என் பிள்ளை இந்த வருடம் கல்லூரிக்கு போக வேண்டுமே, எப்படி என்னுடைய தேவைகள் சந்திக்கப்படும் என்று எண்ணி சோர்ந்து போனீர்களோ? யோசித்துப் பாருங்கள். இதைவிட பெரிய பிரச்சனைகள் உங்கள் வாழ்வில் வந்தபோது கர்த்தர் நடத்தினாரே, நீங்கள் தடுமாறும் போது, உங்கள் கால்கள் இடறாதபடி காத்துக் கொண்டாரே. நீங்கள் துவண்ட போது தூக்கி சுமந்தாரே. அதை நினைத்து, ஆண்டவருக்கு நன்றி சொல்ல ஆரம்பியுங்கள். திமிங்கிலங்களை விளையாடும்படி உண்டாக்கின கர்த்தர், நாம் அவரை துதிக்கும்படியாக, ஆராதிக்கும்படியாக படைத்திருக்கிறார். திமிங்கிலத்தை திருப்திபடுத்தும் ஆண்டவர் நம்மையும் திருப்தியாக்கி நடத்துவார், தேவைகளைச் சந்திப்பார், மீதம் எடுக்கச் செய்வார். உச்சிதமான கோதுமையினாலும், கன்மலையின் தேனினாலும் திருப்தியாக்குவார். உன்னைப் போஷிப்பேன் என்கிற ஆண்டவர் நம்முடன் இருக்க எதற்கும் கலங்க வேண்டாம். "நாங்கள் எங்கள் வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படி, காலையிலே எங்களை உமது கிருபையால் திருப்தியாக்கும்."(சங்கீதம் 90 :14)
- Rev. எலிசபெத்
ஜெபக்குறிப்பு:
இம்மாத ஊழியங்களுக்காக, ஊழியர்களின் சுகத்திற்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864