Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 05.02.2025

இன்றைய தியானம்(Tamil) 05.02.2025

 

ஒட்டகம்

 

"ஒட்டகங்களின் ஏராளமும், மீதியான் ஏப்பாத் தேசங்களின் வேகமான ஒட்டகங்களும் உன்னை மூடும்;..." - ஏசாயா 60:6

 

பாலைவனக் கப்பல் என்று அழைக்கப்படும் ஒட்டகம் சுடு மணலில் நடக்கத்தக்க உறுதியான அகன்ற பாதங்களை பெற்றிருக்கும். பாலைவனத்தில் ஏற்படும் கடினமான சூழ்நிலைகளை தாக்குபிடிக்கும்படி தேவன் அதை படைத்துள்ளார். அதற்கு ஆகாரம் கிடைக்காத நாட்களில் முதுகிலுள்ள திமிலிலுள்ள கொழுப்பு முழுவதும் உருகி ஒட்டகத்திற்கு சக்தி கொடுக்கும். தண்ணீர் கிடைக்கும் இடத்தில் 10 நிமிடத்தில் 100 லிட்டர் தண்ணீரைக் குடித்துவிடும். எட்டு நாட்களுக்குரிய தண்ணீரை ஒரேநாளில் குடிக்கும். பாலைவனத்தில் வீசும் சூறாவளி காற்றினால் கண், மூக்கு துவாரங்கள் பாதிக்கப்படாதபடி சிறப்பான பாதுகாப்பு பட்டைகள் அதற்கு உண்டு. இன்று ஒட்டகத்தின் மிகச் சிறப்பான ஒரு காரியத்தைக் குறித்து தான் பார்க்கப் போகிறோம்.

         

ஒட்டகம் மணலில் படுக்கும் போதும் தரையிலிருந்து எழும்பும் போதும் தனது முழங்காலை ஊன்றி நின்ற பிறகே அடுத்த நிலைக்கு வருமாம். இப்படி அதிகமாக முழங்கால் உபயோகப்படுத்தப் பட்டு சரீரத்தின் எடையை தாங்கி தாங்கி, அதனுடைய முழங்கால்கள் தடித்ததாய் சற்று விகாரமாய் காணப்படும். இதேப்போன்ற முழங்கால்கள் உடைய ஒருவர் உண்டு. அவரை "ஒட்டக முழங்கால் ஜெபவீரர்" என்று சரித்திரம் கூறுகிறது. அவர் தான் யாக்கோபு. இயேசு கிறிஸ்துவின் சகோதரனும் அப்போஸ்தலனுமாகிய யாக்கோபின் ஜெப வாழ்வு அவருடைய முழங்காலில் தெரியுமாம். முழங்காலில் நின்று ஜெபித்து ஜெபித்து அவரது முழங்கால்கள், ஒட்டகத்தின் கடினமான வெளிப்புறத் தோலைப் போல சொரசொரப்பாய், காய்ப்பு பிடித்ததாய் தன் நிலையைக் காட்டிலும் விகாரமாய் காணப்படுமாம். இக்காரியம் நமக்குக் கற்றுக் கொடுப்பதென்ன? நம்முடைய முழங்கால் அனுபவம், ஜெப நேரம் எப்படிப்பட்டது? 

        

இந்நாட்களில், ஜெப ஜீவியம் இல்லாத நிலையில் தான் அநேக கிறிஸ்தவர்களின் வாழ்வு காணப்படுகிறது. ஜெபிக்க வேண்டுமென்ற வாஞ்சையோ, ஜெபத்திற்கு ஒரு நேரம் ஒதுக்கி ஜெபிக்க வேண்டுமென்ற ஆசையோ இல்லாமல், தங்களது ஜெபக்குறிப்புகளை ஊழியர்களுக்கு அனுப்பி விடுவதில் திருப்தி கொள்கின்றனர். இன்று ஒட்டகம் மூலம் தேவன் நம் ஜெப வாழ்வைக் குறித்து சிந்திக்கும்படி அழைக்கிறார்.

      

தேவனுக்கு முன்பாக முழங்காலில் நிற்பவர்கள் மனிதனுக்கு முன்பாக தலை நிமிர்ந்து நிற்பார்கள். தேவசமுகத்தில் முழங்கால் படியிடும் நபரா நீங்கள்? சிந்திப்பீர்!!

- Mrs. பாத்திமா செல்வராஜ்

 

ஜெபக்குறிப்பு:

நம்மோடு இணைந்துள்ள பைபிள் அம்மாக்களின் சுகத்திற்காக ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864


Comment As:

Comment (0)