Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil)  03-02-2021

இன்றைய தியானம்(Tamil)  03-02-2021

சீஷனுக்கு எது தேவை? 

“…அவள் நற்கிரியைகளையும் தருமங்களையும் மிகுதியாய்ச் செய்து கொண்டுவந்தாள்.” – அப். 9:36

கிறிஸ்தவ வாலிபர்கள் மூவர் படகில் பயணம் செய்து கொண்டிருந்தனர். மூவருக்குள்ளும் ஒரு விவாதம் தொடங்கியது. நாம் தேவனுக்குப் பயந்து நடந்தால் மட்டும் போதுமானது, மற்றபடி பிறருக்கு உதவுவதெல்லாம் தேவையில்லை. நாம் தேவபக்தியுடன் வாழ்ந்தால் போதும் என்றான் ஒருவன். ஆனால் மற்றொரு வாலிபனோ தேவபக்தியைவிட பிறருக்கு உதவுவதே முக்கியம் என்றான். மூவரும் மாறி மாறி வாதிட்டார்கள். இதைக் கேட்டுக்கொண்டே இருந்த படகோட்டி தன் கையில் இருந்த ஒரு துடுப்பை படகினுள் வைத்துவிட்டு படகை ஒரு துடுப்புக் கொண்டு வலித்தார், படகு முன்னேறவேயில்லை. இதை கவனித்த ஒருவன் ஐயா படகோட்டியே இரண்டு துடுப்பை வைத்து வலியுங்கள். அப்பொழுதுதான் படகு சரியாகச் செல்லும் என்றான். உடனே படகோட்டி தம்பிகளே இதைப்போலத்தான் கிறிஸ்தவனாய், சீஷனாய் வாழ வேண்டுமென்றால் தேவபக்தியும் வேண்டும், நற்கிரியைகளும் வேண்டும் என்று கூறினார்.

வேதத்திலும் தொற்காள் என்னும் தேவ பக்தியாய் வாழ்ந்த சீஷியைப் பற்றி பார்க்கிறோம். அவளைக் குறித்து எல்லோரும் கூறிய சாட்சி என்ன தெரியுமா? அவள் மிகுந்த நற்கிரியைகளையும், தருமங்களையும் செய்து வந்தாள் என்பதே! அவள் அநேக நற்காரியங்களோடு, தேவனையும் பற்றி அறிவித்து வந்தாள். தொற்காள் மரித்த போது அவள் மூலம் நற்காரியங்களைப் பெற்றவர்கள் அனைவரும் சூழ்ந்து வந்து பேதுருவை அழைத்தனுப்பினர். பேதுரு வந்து ஜெபித்து தபீத்தாளே, எழுந்திரு என்றதும் தொற்காள் உயிர் பெற்றாள். அநேகர் இதனால் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள். 

அன்பானவர்களே, சீஷனாய் வாழும் நம்முடைய வாழ்விலும் தேவ பக்தி எவ்வளவு அவசியமோ அதைப் போலவே பிறருக்கு உதவுதலும் மிகவும் அவசியம். ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் தேவ பக்தியும், நற்கிரியையும் நாணயத்தின் இருபக்கங்கள் போன்றது. நற்கிரியைகள் மூலமே நாம் தேவ அன்பை வெளிக்காட்ட முடியும். அவ்வாறு இருந்தால் தொற்காள் உயிர்ப்பிக்கப்பட்டது போல, நம் வாழ்விலும் மரித்து இருக்கும் பகுதிகள் உயிர்ப்பிக்கப்பட, நம் வாழ்வின் மூலம் அநேகர் விசுவாசத்திற்குள் வர ஏதுவாகும். நாம் இயேசுவை பின்பற்றும் உண்மை சீஷனென்றால் இயேசுவையும் பின்பற்றுவோம்! நற்கிரியைகளும் செய்து இயேசு கிறிஸ்துவை உலகிற்கு காட்டுவோம். 
-    Mrs. ஜாஸ்மின் சாமுவேல் 

ஜெபக்குறிப்பு:
7000 மிஷனெரிகளின் மூலம் ஒரு லட்சம் கிராமங்களை சந்திக்க அர்ப்பணிக்கப்பட்ட மிஷனெரிகள் நம்மோடு இணைய ஜெபியுங்கள்.

இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app: 
தமிழில் பெற -  +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.vmmorg.template.msmapp

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250


Comment As:

Comment (0)