இன்றைய தியானம்(Tamil) 03.02.2025
இன்றைய தியானம்(Tamil) 03.02.2025
ஓநாய்கள்
"கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ...உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்" - மத்தேயு 7:15
வேதத்திலே, ஓநாயைக் குறித்து கூறப்பட்டுள்ள காரியங்கள் என்ன தெரியுமா? ஓநாய்கள் கொடிதானது, பட்சிக்கிறவைகள், தீவிரமாய் ஓடும், மந்தைக்குள் வரும். இரை கவ்வுகிற ஓநாய்கள் என்று பல இடங்களில் உள்ளது. விலங்கியல் ஆய்வாளர்கள் தரும் தகவல்கள் என்ன தெரியுமா? இவை ஓடும் வேகம் மணிக்கு 50-60 கிலோமீட்டர். கூட்டமாக சென்று இரையை தாக்கிக் கொல்லும். ஓநாய்களில் 38 வகைகள் உண்டு. பாருங்கள் மேற்காணும் வேதாகம குறிப்புகளும் பிற தகவல்களும் ஓநாய் ஒரு கொடிய விலங்கு என்பதை திட்டவட்டமாக காட்டுகிறது. யோவான் 10 :12 ல் பீறி சிதறடிக்கும் ஓநாய்கள் குறித்து கூறப்பட்டுள்ளது. பீறுகிற என்பது 'காயப்படுத்துகிற' என்று பொருள் கொள்ளலாம். ஆயுதம் ஏதுமின்றி சிறுமையானவர்களைத் தம் வார்த்தையாலேயே காயப்படுத்துபவர் அநேகர். இதைப் பயன்படுத்தி பிறரை மனமடிவாக்கி விடுவதைப் பார்க்கலாம். இந்த செயல் பீறுகிற ஓநாயின் குணமேயன்றி வேறல்ல. நாவு நெருப்பு என்றும், சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததாயும் இருக்கிறது என்று அப்போஸ்தலனாகிய யாக்கோபு கூறுகிறார்.
சிறுமைப்பட்டவரை, எளியவரை, அற்பமாய் எண்ணாமலும், அவர்களை மனமடிவான வார்த்தையினால் காயப்படுத்தாமல் (பீறிவிடாமல்) இருக்க, நம் நாவை கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்போம். ஆபகூக் 1:8ல், "சாயங்காலத்தில் திரிகிற ஓநாய்களிலும்" என்று எழுதப்பட்டுள்ள வசனம், மாலை மயங்கும் சாயங்கால வேளையில் சாத்தானின் அந்தகார வல்லமை கிரியை செய்யும் காலத்தைக் குறிப்பிட்டுக் காட்டுவதாய் உள்ளது. ஆம், மனுஷகொலை பாதகன், களவு, விபச்சாரம் போன்ற இச்சையின் கிரியைகள் செயல்படுவது யாவும் இருள் சூழும் வேளைகளிலே அதிகமாகக் காணப்படுவதை நாம் அறிவோம். ஓநாயும் கூட தன் இரையைத் தேடி, மாலை மயங்கும் வேளையிலே, அதாவது இருள் சூழப் போகும் அந்த மாலை வேளையில் தான் தீவிரமாய் புறப்படும் என்று எழுதப்பட்டுள்ளது. ஓநாயைப் போன்றே பிசாசும் கூட, கெர்ச்சிக்கிற சிங்கம் போல எவனை விழுங்கலாமோ, என்று வகை தேடிச் சுற்றித் திரிகிறான். ஆகவே அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள், சாட்சியின் வசனத்தினால் அந்த பொல்லாங்கனை ஜெயித்துக் காட்டுங்கள். ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தினாலும் அவனை வீழ்த்தி, காலடியில் மிதியுங்கள்.
பிரியமானவர்களே! வேதாகமத்தில் இந்த கொடிய விலங்கு இடம்பெற்று இருப்பதன் நோக்கம் என்ன? நிர்விசாரமும், மந்த புத்தியும், மதி கெட்டவராயும், பேதைகளாயும் இருக்கும் நமக்கு எச்சரிப்பைக் கொடுத்து விழிப்படையச் செய்கிறது. கர்த்தரை நாம் தெய்வமாகக் கொண்ட பின், வழுவிப் போகாதபடி, முடிவு பரியந்தம் நிலை நிற்க வேண்டுமே! அசதியாயிராமல், ஜாக்கிரதையாயிருங்கள். விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள். இதோ! உலகத்தை ஜெயித்தேன் என்றவர் நம்மோடு இருக்கிறார். ஆமென்.
- Mrs. எமீமா சௌந்தர்ராஜன்
ஜெபக்குறிப்பு:
1000 வீட்டு ஜெபக்குழுக்கள் எழும்ப ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864