![](https://vmm.org.in/uploads/1631334033.jpg)
இன்றைய தியானம்(Tamil) 11-09-2021
இன்றைய தியானம்(Tamil) 11-09-2021
பின்பற்றும் நல்ல மாதிரி
“...நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.” - யோவான் 8:12
ஒரு புகழ்பெற்ற நடிகர் தன்னை பின்பற்றுபவர்களுக்கு அநேக காரியங்களை செய்வேன் என்று சொன்னார். “நான் அதை சாதிப்பேன் இதை சாதிப்பேன்” என்றும், “இந்த காரியத்திலே மாற்றத்தைக் கொண்டு வந்து விடுவேன்” என்றும் பல வாக்குறுதிகளை கொடுத்தார். அவர் சினிமாவில் செய்த சாதனைகளைப் பார்த்து உண்மை என்று நம்பி அநேகர் அவரைப் பின்பற்றினார்கள். ஆனால் அவர் தனது முடிவை மாற்றிக்கொண்டு தான் ஏற்படுத்திய எல்லா மன்றங்களையும் கலைத்துவிட்டார். எத்தனையோ வருடங்கள் அவரை பின்பற்றின அநேகருக்கு ஏமாற்றம் தான் வந்தது. இன்றைக்கும் ஏமாற்றப்பட்டவர்கள், தோல்வியுற்றோர்கள் அநேகர்.
இதைப்போல் இன்றைக்கும் பலர் சினிமா நடிகர்களின் அல்லது தலைவர்களின் வெளியரங்கமான வாழ்க்கையைப் பார்த்து அவர்களைப் பின்பற்றி ஏமாந்து போனவர்கள் அநேகர். அவர்களுடைய உண்மையான வாழ்க்கையை உற்றுப் பார்ப்போமானால் அவர்கள் சொல்வதுபோல் எதையுமே செய்வது இல்லை. இவர்கள் சொல்வதை நம்பி இன்றைக்கும் அநேக வாலிபர்கள் தங்கள் வாழ்க்கையை கெடுத்துக் கொள்கிறார்கள். ஒரு இருளான வாழ்க்கைக்கு சென்றுவிடுகிறார்கள். வழி தெரியாமல் திசை தெரியாமல் அலைகின்ற ஒரு பெரிய வாலிபர் கூட்டம் உண்டு. ஒருவேளை நீங்கள் உலகத்தில் உள்ள எந்த மனிதனை நீங்கள் பின்பற்றினாலும் ஏமாந்து போக வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் இயேசு சொல்கிறார், “என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான்” என்றார்.
யோவான் 8:12ல் இயேசு வார்த்தையால் சொல்லுகிறவர் மாத்திரமல்ல, இந்த உலகத்தில் வாழ்ந்து மாதிரியாய் செய்து காண்பித்தவர். சிறுவயதிலிருந்தே சுமார் 30 வயது வரைக்கும் தகப்பனுக்கும், தாய்க்கும் கீழ்ப்படிந்து நடந்தார். தன்னுடைய சீஷர்களின் கால்களை கழுவினார். பிசாசு பிடித்து இருளில் இருந்த அநேகரை விடுதலை ஆக்கினார். குருடரின் கண்களை திறந்தார். முடவரை குணமாக்கினார். எத்தனையோ பேர் அவரை இகழ்ந்தார்கள், கன்னத்தில் அடித்தார்கள், முகத்தில் உமிழ்ந்தார்கள், கடைசியாக சிலுவையில் அடிக்கப்பட்டார். நம்முடைய பாவங்களிலிருந்து விடுதலை தரும்படியாக இரத்தம் சிந்தி மரித்து மூன்றாம் நாள் உயிர்த்தார். இன்றைக்கும் ஜீவிக்கிறார். அவரை யார் பின்பற்றினாலும் அவர்களுடைய எல்லா இருளையும் நீக்கி அவருடைய பரிசுத்த இரத்தத்தினால் கழுவி விடுதலை தருவார். நம்முடைய வாழ்க்கையை பிரகாசமாக மாற்றி உங்களை ஆசீர்வதிப்பார்.
- P.V.வில்லியம்ஸ்
ஜெபக்குறிப்பு:
மிஷனெரிகளின் பிள்ளைகளுக்கு கல்விக்கட்டணம் செலுத்தப்பட தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250