இன்றைய தியானம்(Tamil) 06-09-2021
இன்றைய தியானம்(Tamil) 06-09-2021
வாழ்ந்து காட்டுதலே கிறிஸ்தவம்
“இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.” -மத்தேயு 5:16
அந்தியோகியாவிலுள்ள சீஷர்களே முதன்முதலில் கிறிஸ்தவர்கள் என அழைக்கப்பட்டனர். நம் முன்னோரான ஆதிகிறிஸ்தவ தலைமுறையினரும் “வேதக்காரர்கள்” என அழைக்கப்பட்டனர். இன்று நமக்கிருக்கும் சத்திய வேத போதனைகளோ ஆரவார எழுப்புதல் ஆராதனைகளோ அன்று அவர்களுக்கு இல்லை. ஆனால் அவர்களிடம் காணப்பட்ட தேவ அன்பு, தாழ்மை, பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை, பரிவுடன் கூடிய கரிசனை, உண்மை, நேர்மை, ஒழுக்கம், இந்த நற்குணங்களால் வித்தியாசமாக “பளிச்”சென காணப்பட்டு “வேதக்காரர்கள்” என அழைக்கப்பட்டனர். நற்குணம் நிறைந்த ஆவியின் கனிகளினாலேயே அவர்கள் அறியப்பட்டனர். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து பூமியெங்கும் நன்மை செய்கிறவராய், மனதுருக்கத்துடன் இருளிலிருந்த ஜனங்களுக்கு ஒளிவிளக்காய் திகழ்ந்தார். இன்றோ உலகில் பலவிதமான பாவ இருள்களான கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் பலாத்காரங்கள், விபச்சாரம், விவாகரத்துக்கள் மலிந்து காணப்படுகின்றன. சில கிறிஸ்தவர்களும் இதற்கு விதிவிலக்கில்லாமல் பாவச்செயல்களில் ஈடுபட்டு, கிறிஸ்துவை மறந்து வாழ்கிறார்கள். கிறிஸ்தவர்களாகிய நம்மிடத்திலேயே நீதி என்னும் ஒளி இல்லாதபோது நாம் எப்படி உலகிற்கு ஒளியாக வாழ முடியும்?
பாவ இருளிலும், அறியாமையிலும், மூட நம்பிக்கையிலும் வாழும் மக்களுக்கு இயேசுவை காட்டும் பிரதிநிதிகளாக வாழ தேவன் நம்மை அழைக்கிறார். அதாவது மக்கள் நம்மிலே இயேசுவின் குணங்களான நற்சுபாவங்களின் வெளிச்சத்தைக் காணவேண்டும். சுயநலம், பெருமை, மேட்டிமை, பிறர்நலம் பேணாமை போன்ற குணங்களை தேவன் அருவருக்கிறார். ஆப்பிரிக்க மக்களிடையே ஊழியம் செய்துவந்த டேவிட் லிவிங்ஸ்டனை காண ஸ்டான்லி என்பவர் ஒரு சமயம் சென்றிருந்தார். பெயர் கிறிஸ்தவரான இவரை டேவிட் லிவிங்ஸ்டனின் ஒழுங்கான ஆவிக்குரிய வாழ்க்கை, ஜெபஜீவியம், முரட்டுத்தனமான அந்த மக்களிடையே இவர் காட்டிய அன்பும், பரிவுடன் கூடிய சேவையும் ஸ்டான்லியை மிகவும் கவர்ந்தது. அவர் காட்டிய தேவ அன்பு ஸ்டான்லியை இயேசுவை இரட்சகராக ஏற்றுக் கொள்ளச்செய்தது.
எனக்கன்பானவர்களே! நம்மிடையே வாழ்ந்து காட்டி, கிறிஸ்துவின் ஒளி வீசிய ஏமிகார்மைக்கேல், அன்னை தெரசா, டாக்டர் ஐடா ஸ்கடர், வில்லியம்கேரி இவர்களையெல்லாம் நம் கண்முன் கொண்டு வருவோம். இன்று நம் ஊழியம், சாட்சியின் ஜீவியம் எப்படி உள்ளது? நம்மைத் திருத்திக் கொள்வோம். இயேசுவின் ஒளியை உலகிற்கு காண்பித்து இருளை அகற்ற ஜெபத்துடன் பிரயாசப்படுவோம்.
- Mrs. சரோஜா மோகன்தாஸ்
ஜெபக்குறிப்பு:
1000 கிராமங்களில் சுவிசேஷம் அறிவிக்கத் தேவையான உணவு, தங்குமிடம், வாகனம் ஆகிய தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250