![](https://vmm.org.in/uploads/1630549482.jpg)
இன்றைய தியானம்(Tamil) 02-09-2021
இன்றைய தியானம்(Tamil) 02-09-2021
கனம் பெற்றவர்கள்
“ஞானவான்களுடைய போதகம் ஜீவஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்.” – நீதி. 13:14
ரஷ்யாவில் நடந்த ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் அதிபர் புடினைப் பார்த்து ஒருவர் கேட்டார், “ஏன் முதலாவது டாக்டர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி போடணும்னு சொல்றீங்க. மீதமுள்ள 30 கோடி பொதுமக்களை பற்றி கவலைப்படவில்லையா?” என்று கேள்வி எழுப்பினார். உடனே புடின், “ஒரு மருத்துவர் இறந்துவிட்டால் மற்றொரு மருத்துவரை உருவாக்க 30 ஆண்டுகள் தேவைப்படுகிறது. மேலும் பலகோடி பொதுப்பணத்தை செலவு செய்ய வேண்டியுள்ளது. இந்தக் காலத்தில் மருத்துவர்களுடைய சேவை மிகவும் தேவை. இதேபோல்தான் ஆசிரியர்களும்! ஆசிரியர் இறந்தால் மருத்துவர்களை உருவாக்குவது எப்படி? மருத்துவர்களும், ஆசிரியர்களும் தேசத்தின் பெரிய சொத்துக்கள். அவர்களை பாதுகாத்தால்தான் நாடும், பொதுமக்களும் சந்தோஷமாக இருக்க முடியும்” என்றார்.
ஆசிரியர்களே! உங்கள் மீது எவ்வளவு மதிப்பு வைத்துள்ளார் புடின். புடின் மாத்திரமல்ல, இந்த சமுதாயமே ஆசிரியர் மீது மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளது. “ஒவ்வொரு ஆசிரியரும் மாணவரின் இரண்டாவது தாய்” என சொல்லுவர். ஆசிரியர்கள் நாட்டின் தலையெழுத்தை மாற்றுகிறவர்கள். ஏனெனில் அவர்கள் புதிய தலைமுறையை வலுவாய் உருவாக்குகிறவர்கள். மாணவர்களை மணியாக, பதராக பிரிப்பவர்கள் அல்ல; பதரை பறக்கவிடாமல் பக்குவப்படுத்தி அறிவொளி வீசி நிலைநிறுத்துபவர்கள். படிப்பில் தோற்றாலும் வாழ்வில் சாதித்து காட்டமுடியும் என உத்வேகத்தை சொல்பவர்கள். ஆசிரியர்களின் போதனை அநேக மாணவர்களின் வாழ்வை உற்சாகமூட்டுகிறதாய், கட்டுகிறதாய் அமையும்போது சமுதாயத்திற்கே ஆசீர்வாதம். இந்த ஆசிரியப்பணி பரலோகத்திலிருந்து தேவன் தந்தது. அதை அவருக்கென்று உண்மையாய், கர்த்தருக்கு பயப்படும் பயத்தோடு செய்யும்போது மாணவர்களின் வாழ்வு உயிரூட்டப்படும், நட்சத்திரங்களாய் ஜொலிப்பார்கள். நீங்கள் உங்கள் பள்ளி அல்லது கல்லூரியின் பணியாளர் மட்டுமல்ல, பரலோகின் பணியாளர்கள். தேவன் உங்களைக் கொண்டே ஒவ்வொரு பிள்ளைகளின் வாழ்வையும் உருவாக்குகிறார். நீங்கள் கடமை தவறினால் ஒரு தலைமுறையே பாதிக்கப்படும், தேசத்தின் நிலையே சீர்கெட்டுப்போகும். இந்த பெருந்தொற்றுக் காலத்திலும் பல சிரமத்தின் மத்தியிலும் நீங்கள் செய்யும் பணி பாராட்டுதலுக்குரியது!
பிரியமானவர்களே! ஏதோ சொற்ப சம்பளத்திற்கு ஒரு சிறு நிறுவனத்தில் அடிமையைப் போல் உள்ளேனே என எண்ணுகிறீர்களா? தேவன் பயன்படுத்தும் பாத்திரம் நீங்கள் என்பதை உணர்ந்து தேவனிடம் அர்ப்பணித்து, மனப்பூர்வமாய், சந்தோஷமாய் உங்கள் பணியைச் செய்யுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பார். உங்கள் பணியின் மதிப்பறிந்து கர்த்தருக்கென்று அர்ப்பணித்து செயல்படுங்கள். தேவன்தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.
- Mrs. அன்புஜோதி ஸ்டாலின்
ஜெபக்குறிப்பு:
இம்மாதம் இரண்டாவது மற்றும் நான்காவது புதன் முதல் ஞாயிறு வரை ஐந்து நாட்கள் நடைபெறும் சுவிசேஷ ஊழியங்களுக்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250