Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 28-08-2021

இன்றைய தியானம்(Tamil) 28-08-2021

 

முடிவு பரியந்தம் 

 

“என் நாமத்தினிமித்தம் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள். முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.” – மாற்கு 13:13

 

அன்றைய ருமேனிய அரசு கிறிஸ்தவர்களுக்கு அனேக நெருக்கடிகளை கொடுத்து வந்தது. இந்த சமயத்தில் ஒரு திருச்சபையின் போதகரையும் அவரது சபையின் இரு விசுவாசிகளையும் ருமேனிய அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. அங்கே அவர்களை எவ்வளவு கொடுமை செய்ய முடியுமோ அவ்வளவு கொடுமை செய்தார்கள். போதகரும், 2 விசுவாசிகளும் மிகவும் வேதனை அடைந்தார்கள். அவர்களால் இந்த கொடுமைகளை சகித்துக் கொள்ளவே முடியவில்லை. ஆனாலும் போதகர் பிரசங்கித்த வைராக்கியம் மிகுந்த தேவ வார்த்தைகள் காதில் கேட்டுக்கொண்டே இருந்தது. ஆகவே அவர்கள் எவ்வளவு கொடுமை செய்தாலும் அதைத் தாங்கிக் கொண்டார்கள். 

 

ஒரு நாள் போதகரிடம் அதிகாரிகள் வந்து இனி நாங்கள் உன்னை எப்படி எல்லாம் கொடுமைப்படுத்த போகிறோம் என்பதை கூறினார்கள். இந்த கொடுமையை நீ சகிக்க போகிறாயா? அல்லது நாங்கள் சொல்லுகிற காரியத்தை நீ செய்கிறாயா? நாங்கள் சொல்வதை செய்தால் உனக்கு விடுதலை! என்று சொன்னார்கள். உடனே அந்த போதகரின் மனம் பதைபதைத்தது, அவர்களிடத்தில் “சரி நீங்கள் என்ன சொல்லுகிறீர்களோ அதை நான் செய்கிறேன்” என்று சொன்னார். அதற்கு அவர்கள் உன்னோடு வந்த 2 பேரையும் நீ துப்பாக்கியால் சுடவேண்டும் என்று சொன்னார்கள். மறுநாள் அவரோடு கூட கைது செய்த விசுவாசிகளை அவருக்கு முன்பதாக நிறுத்தினார்கள். அவரைப் பார்த்த விசுவாசிகள், “போதகரே, நீங்கள் செய்த பிரசங்கத்தை நாங்கள் கேட்டு இவ்வளவு வைராக்கியமாய் ஆண்டவருக்காக நிற்கிறோம். நீங்கள் தயவுசெய்து யோசித்துப் பாருங்கள்” என்றனர். அவரோ மனம் உடைந்தார். சரி, உங்களை சுட்ட பிறகு விடுதலையாகி, நான் என்னை சரிப்படுத்திக் கொள்கிறேன் என்று சொன்னார். விசுவாசிகளோ இவர்களை நம்பாதீர்கள் என்று சொன்னாலும் அவர் கேட்கவில்லை, மாறாக அவர் இவர்கள் இருவரையும் சுட்டுவிட்டார். அடுத்த நொடியே அதிகாரிகள் இவரை சுட்டுக் கொன்றனர். அவர் ஆண்டவரிடத்தில் பிறகு மன்னிப்பு கேட்டுக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தார், ஆனால் அதற்கு நேரமில்லை, இப்பொழுது மரித்துவிட்டார். வேதம் சொல்லுகிறது முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான். 

 

ஆம், சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ பொற்சிலையை வணங்கிவிட்டு பின்பு தேவனிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்ளலாம் என்றெல்லாம் அவர்கள் தங்களுடைய தேவ வைராக்கியத்தை விட்டுக் கொடுக்கவில்லை. மாறாக தேவனுடைய கட்டளையை மீறி பூமியில் சுகபோகமாய் வாழ்வதைவிட, அக்கினி சூளையையே தெரிந்துகொண்டார்கள். இன்றும் நம்மிலுள்ள பாவங்களை விடச் சொல்லி தேவன் நம்முடன் பேசிக் கொண்டேயிருக்கலாம். இது என்னுடைய பெலவீனம், பிறகு நான் தேவனிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்வேன் என்று சொல்லி அடிக்கடி அதே தவறை செய்கிறீர்களோ? அதை விட்டுவிட முயற்சி செய்யுங்கள். முடிவு, அதாவது மரணம் ஒரு மனிதனுக்கு எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம். நமக்கு கொடுக்கப்பட்ட காலம் எவ்வளவு என்பது நமக்கு தெரியாது. எனவே இதை நாம் நினைவில் வைத்து ஒவ்வொரு நாளும் கிறிஸ்துவுக்காக வாழ்வோம். நமக்கு வருகிற பாடுகளில், உபத்திரவங்களில், பாவ போராட்டங்களில் நாம் கிறிஸ்துவுக்காக உறுதியாய் நிற்போம். ஆமென்.

- P.V. வில்லியம்ஸ் 

 

ஜெபக்குறிப்பு:

New life Home ல் இருக்கும் பிள்ளைகளின் படிப்பு மற்றும் எதிர்காலம் ஆசீர்வதிக்கப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250


Comment As:

Comment (0)