![](https://vmm.org.in/uploads/1630031793.jpg)
இன்றைய தியானம்(Tamil) 27-08-2021
இன்றைய தியானம்(Tamil) 27-08-2021
விலகாதவர் – கைவிடாதவர்
“...நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.” - யோசுவா 1:5
பாலத்தில் நடந்து கொண்டிருந்தார்கள் தந்தையும், அவரது சிறிய மகளும். கீழே ஆறு ஓடிக்கொண்டிருந்தது. தந்தை மகளிடம் சொன்னார், “மகளே எனது கையைப் பிடித்துக்கொள். அப்போது விழமாட்டாய்” என்று. மகள் சொன்னாள், “இல்லை அப்பா நீங்கள் என் கையைப் பிடித்துக்கொள்ளுங்கள்” என்று. தந்தைக்கு ஆச்சரியம், “இதில் என்ன வித்தியாசம் இருக்கிறது? நீ பிடித்தால் என்ன? நான் பிடித்தால் என்ன?” ஆச்சரியத்தோடு தந்தை கேட்டார். “நான் உங்கள் கையைப் பிடித்தால், ஒருவேளை நான் கையை விட்டுவிடும் வாய்ப்பு உண்டு. பாதை வழுக்கினால் கூட நான் கையை விட்டுவிடுவேன். ஆனால் நீங்கள் என் கையைப் பிடித்தால் என்ன தான் நடந்தாலும் நீங்கள் என் கையை விடமாட்டீர்கள்” என்று மகள் சொன்னாள். தந்தை நெகிழ்ந்து மகளைத் தூக்கி மார்போடு அணைத்துக் கொண்டு நடந்தார்.
பரிசுத்த வேதாகமத்தில் இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்தி செல்வதற்காக கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்டவர் யோசுவா என்ற தேவ மனிதர். இவரைப் பார்த்து கர்த்தர் சொல்கிறார், “நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” என்று. அப்படியாகவே இஸ்ரவேல் ஜனங்களை முடிவுபரியந்தயம் வழிநடத்தி செல்வதில் கர்த்தர் அவர்களை விட்டு விலகவும் இல்லை, கைவிடவும் இல்லை. காரணம் என்னவென்றால் யோசுவாவும் தேவன் கையை விடாமல் பிடித்துக்கொண்டார்.
ஆம், பிரியமானவர்களே! இயேசு நமது கைகளை இறுகப் பிடித்து நடக்கிறார். நாமோ அநேக நேரங்களில் அவருடைய கையை உதறிவிட்டு ஓடி விடுகிறோம். எதையும் தனியாய் செய்யும் துணிச்சலும், வீராப்பும் இருக்கும்வரை இயேசுவின் கையை உதறித் தள்ளுவதையே அனைவரும் விரும்புவோம். ஆனால் அவரோ உலகத்தின் முடிவு பரியந்தம் நம்மோடு இருந்து நம்மை வழிநடத்தவே விரும்புகிறார். ஆம், குறிப்பாக இந்த வருடத்தின் ஏழு மாதங்களிலும் நம்மோடு இருந்து, நம்மை கைவிடாமலும், விட்டுவிலகாமலும் இருந்தவர் நம் கர்த்தர். பலவிதமான சோதனைகளிலும், இக்கட்டுகளிலும், வியாதியின் நேரங்களிலும் கூட நம்மை விட்டு விலகாமலும் கைவிடாமலும் இருந்த ஆண்டவருடைய கரத்தையே நாம் பற்றிக்கொள்வோம்! இனிவரும் நாட்களிலும் அவர் நம்மை விட்டுவிலகாமலும், கைவிடாமலும் நம்மோடு இருந்து நம்மை வழிநடத்த வல்லமையுள்ளவராயிருக்கிறார்! அல்லேலூயா.
- Mrs. சக்தி சங்கர்ராஜ்
ஜெபக்குறிப்பு:
ஜெபக்கூடாரத்தின் ஒலி மற்றும் ஒளி சம்பந்தப்பட்ட உபகரணங்கள் வாங்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250