![](https://vmm.org.in/uploads/1629772234.jpg)
இன்றைய தியானம்(Tamil) 24-08-2021
இன்றைய தியானம்(Tamil) 24-08-2021
தேனிட்ட பணியாரம்
“...மன்னா என்று பேரிட்டார்கள்;… அதின் ருசி தேனிட்ட பணிகாரத்திற்கு ஒப்பாயிருந்தது.” – யாத்திராகமம் 16:31
இனிப்பு பலகாரம் என்று சொன்னாலே அநேகருக்கு நாவில் எச்சில் ஊறும். வீடுகளில் இனிப்பு பலகாரம் செய்தால் குழந்தைகளிலிருந்து வயோதிபர் வரை எல்லாருக்கும் இஷ்டம். அதிலும் பணியாரம் தமிழ் மக்களுக்கே உரிய ஒரு விசேஷ பலகாரம். பணியாரம் செய்தால் வீடுகளில் அதைக் காலி செய்துவிட்டு இன்னும் இல்லையா? என்று கேட்பவர்கள் அநேகர். அந்த அளவிற்கு அதின் ருசி இருக்கும். ருசி அப்படி இருப்பதினால் அனைத்து தரப்பினரும் விரும்பி சாப்பிடுவர். அதிலும் தேனிட்ட பணியாரம் என்றால் கற்பனை செய்தாவது பார்க்க முடிகிறதா? கற்பனை செய்துதான் பாருங்களேன்!
பரிசுத்த வேதாகமத்தில் பழைய ஏற்பாட்டின் யாத்திராகமம் 16-ம் அதிகாரத்தில் இஸ்ரவேல் வம்சத்தாராகிய தேவனுடைய ஜனங்களுக்கு மன்னா என்ற ஒரு உணவுப் பொருள் கிடைப்பதைப் பார்க்க முடிகிறது. அதின் ருசி தேனிட்ட பணிகாரம் போல இருந்தது என்று வாசிக்கிறோம். அவர்கள் அதை அதிகாலையில் எழுந்து தங்களுக்குத் தேவையான அளவு சேர்த்துக் கொண்டார்கள். அது அவர்களுக்கு மிகுந்த ருசியைக் கொடுத்தது. மேலும் அந்தக் காரியம் நடந்ததின் மூலம் இஸ்ரவேல் ஜனங்கள் தேவனுடைய அன்பையும் அவருடைய கரிசனையையும் அதிகமாக அறிந்து கொண்டனர்.
நண்பர்களே! இந்த நாட்களிலே வாழ்க்கை அநேகருக்கு கசப்பாகத் தெரிகிறது. காரணம், எல்லாவற்றிலும் அவசரம், எல்லாம் உடனுக்குடன் நடக்க வேண்டுமென்ற எண்ணம். இதினிமித்தம் பல நேரங்களில் மனச்சோர்வுகள். நம் வாழ்வின் கசப்பை மாற்றி நம் வாழ்வை ருசிகரமாக்கும் மன்னா வேதவசனமே! அதை நாம் நேரமெடுத்து வாசித்து, தியானிக்கப் பழக வேண்டும். இந்த பழக்கம் நமது யோசனை, எண்ணம், சிந்தனை, செயல் அனைத்தையும் புதிதாக்கும். தேவனுடைய வசனம்தான் நமக்கு வாழ்வில் ருசிதரக்கூடியது. “...அவைகள்.... தெளிதேனிலும் மதுரமுள்ளதுமாய் இருக்கிறது...” (சங். 19:10) இதை நாம் நாட வேண்டும், தேட வேண்டும். ஆகவே ஆசையோடு வேதாகமத்தை கையில் எடுங்கள்! தியானியுங்கள்! அதின்படி வாழுங்கள்! நமது வாழ்வு இனிமையாயிருக்கும்!
- T. சங்கர்ராஜ்
ஜெபக்குறிப்பு:
Media ஊழியங்களில் பணி செய்யும் ஊழியர்களை தேவன் ஞானத்தினால் நிரப்பி பயன்படுத்த ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250