இன்றைய தியானம்(Tamil) 21-08-2021
இன்றைய தியானம்(Tamil) 21-08-2021
இயல்பு மாறாதிருப்போம்
“...இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல்,…” – ரோமர் 12:2
ஒரு ஆசிரியர் தன் கையில் 500 ரூபாய் தாளோடு வகுப்பறைக்குள் நுழைந்தார். மாணவர்களிடம் அதனை காட்டி இது என்ன? என்றார். அனைவரும் 500 ரூபாய் என்றனர். ஆசிரியர் அதனை கசக்கி விட்டு இது என்ன? என்றார். மாணவர்கள் 500 ரூபாய் என்றனர். அதனை குப்பையில் போட்டு விட்டு இது என்ன? என்றார். மாணவர்கள் 500 ரூபாய் என்றனர். ராஜா ஓடிச் சென்று குப்பையில் இருந்த ரூபாயை எடுத்து ஆசிரியரிடம் கொடுத்தான். ஆசிரியர் அதனை வாங்கி அதனை நேராக விரித்து கசங்கிய பகுதிகளை கையினால் அழுத்தி விரித்துவிட்டு இப்போதும் இது 500 ரூபாய் தான். இது குப்பையில் இருந்தாலும், நம் பையில் இருந்தாலும் எப்படி அதன் மதிப்பு மாறவில்லையோ அது போல மாணவர்களாகிய நீங்களும் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் உங்களுடைய நற்குணங்களை விட்டுவிடக் கூடாது என்றார்.
யோசேப்பு தன் தகப்பனுக்கு பிரியமான பிள்ளையாய் தன் குடும்பத்தினரோடு இருந்த போதும் அவர்களோடு அன்புள்ளவனாயிருந்தான். தன் சொப்பனத்தை சொன்ன போது சகோதரர்கள் அவனை பகைத்து குழியில் போட்ட போதும், இஸ்மவேலரிடத்தில் அவனை அடிமையாக விற்ற போதும் அரவணைக்கிறவனாக இருந்தான். மேலும் செய்யாத தவறுக்காக சிறையிலடைக்கப்பட்ட போதும் தன் உடன் சிறையிலடைக்கப்பட்டவர்களிடம் அன்போடு விசாரிக்கிறவனாக இருந்தான். தான் இராஜாவுக்கு அடுத்தபடியாக உயர்த்தப்பட்டபோதும் தன் சகோதரர்களை மன்னித்து அன்பு செலுத்துகிறவனாகவே இருந்தான். தகப்பன் இறந்த பின் சகோதரர்கள் பயந்த போதிலும் கூட அன்புள்ளவனாகவே இருந்தான். தன் நெருக்கத்தில், கஷ்டத்தில் கூட சகோதரரை பகைக்கவோ, வெறுக்கவோ இல்லை. தன்னை சுற்றியுள்ளவர்கள் எப்படி நடந்து கொண்டாலும் தன் இயல்பு நிலை மாறாமல் அன்பு செலுத்துகிறவனாகவே இருந்தான்.
பிரியமானவர்களே, நம்மைக் குறித்து என்ன? நாம் சந்திக்கும் எல்லா சூழ்நிலைகளிலும், சோதனைகளிலும் நம் இயல்பு மாறாமல், நற்பண்புகள் மாறாமல் இருக்கிறோமா? அல்லது நெருக்கத்தில், சோதனையில் முறுமுறுக்கிறவர்களாக இருக்கிறோமா? சிந்திப்போம். யோசேப்பைப் போல் நம் இயல்பு மாறாமல், நற்குணங்கள் மாறாமல் எல்லா சூழலிலும், எவ்விடத்திலும் இருக்க முடிவெடுப்போம்.
- Bro. கோபி திவாகர்
ஜெபக்குறிப்பு:
ஒவ்வொரு நாளும் தியான செய்தியை எழுதிக் கொடுக்கும் தேவப்பிள்ளைகளை தேவன் தமது அபிஷேகத்தால் நிரப்ப ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250