Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 08-07-2022

இன்றைய தியானம்(Tamil) 08-07-2022

 

தலையெழுத்து மாறிப்போச்சு

 

“…இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின்கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக…” - ரூத் 2:12

 

பிரசித்தி பெற்ற ஊழியர் ஒருவர், தன் ஆரம்ப நாட்களில் கடன் பிரச்சனையால் அவதியுற்றும், தன் தகப்பன் வாங்கின கடனைத் திருப்பிச் செலுத்த வழி தெரியாமலும், இயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக் கொண்டதினால், ஏமாற்ற மனதில்லாமல், காகிதம் ஒன்றை எடுத்து, “ஐயா நான் தங்களுக்குச் செலுத்த வேண்டிய பணத்தை உடனடியாக திருப்பிச் செலுத்த முடியவில்லை. ஆகையால் தாங்கள் சற்றுப் பொறுத்துக் கொண்டு எனக்குச் சற்று கால அவகாசம் கொடுங்கள். தங்களுடைய பணத்தை விரைவில் திரும்பச் செலுத்துகிறேன்” என்றெழுதி கடன் கொடுத்த நபரிடம் கொடுத்தார். அதை வாங்கிப் படித்தவர் கசக்கிக் கீழே தூக்கி வீசியபடி “தம்பி உன் கையெழுத்து நல்லாயிருக்கு, ஆனா உன் தலையெழுத்து அந்தக் கையெழுத்தைப் போல நல்லாயில்லையே. பணத்தை முதலில் கொடுங்க” என்று மிகவும் பரியாசமாக கூறினார். இதைக் கேட்டு மனமுடைந்தவராய் தேவ சமூகத்தில் சென்று, “இயேசப்பா, நான் உம்மை மட்டும் நம்புகிறேன். என் தலையெழுத்தை மாற்றுங்க” என்று கதறியழுதார். தேவ கிருபையால் ஏளனப் பார்வையும் கடன் சுமையும் அகன்று, அன்று அற்பமாக பேசப்பட்ட அதே கையெழுத்தால், இன்று நூற்றுக்கணக்கான புத்தகங்களை எழுதி, மிகப்பெரிய சபையின் போதகராகவும் இருந்து, கர்த்தரால் வல்லமையாக பயன்படுத்தப்பட்டு வரும் பாத்திரமாகத் திகழ்கின்றார்.

 

வேதாகமத்திலே, மோவாபிய பெண்ணான ரூத்தினுடைய வாழ்க்கை என்ற படகு கவிழ்ந்தது. கணவனை இழந்த சூழ்நிலையில் தன் இனத்தையும், தன் தேசத்தையும் தன் தேவனையும் விட்டுவிட்டு, மாமியாரைப் பின்தொடர்ந்தது மட்டுமல்ல, அவரின் தேவனாகிய கர்த்தரையே பற்றிக்கொண்டாள். வயல்வெளியில் கதிர் பொறுக்கப் போன இடத்தில் போவாஸைக் காணச் செய்து, அவரின் கண்களில் ரூத்திற்கு தயவு கிடைக்கவும் கர்த்தர் உதவினார். எல்லாவற்றையும் இழந்த சூழ்நிலையில் போவாஸைத் தேடி வந்த ரூத்திற்கு, அவரால் ஆறுதலும், நல்ல ஆலோசனையும், அங்கீகாரமும், ஆசீர்வாதமும், மனைவி என்ற உரிமையும் கிடைத்தன. கதிர் பொறுக்க வந்தவள், வயலுக்கு சொந்தமானாள்.

 

உலகப் போவாஸிடம் அடைக்கலமாய் வந்த ரூத்தின் தலையெழுத்தே இவ்வளவாய் மாறுமென்றால் நம்மைத் தேடி வந்த பரம போவாஸாகிய இயேசுவிடம் அடைக்கலமாய் நாம் வரும்போது, அவருடைய வார்த்தையினால் நம்மைத் தேற்றி, இரட்சித்து பிள்ளையாக மாற்றி, நடக்க வேண்டிய வழியைக் கற்றுக் கொடுத்து சகலவித ஆசீர்வாதத்தினாலும் நம்மை நிரப்பி, அவரோடு கூட இருக்கவும், அவரோடு கூட ஆளுகை செய்யவும் தக்கதான அதிகாரத்தையும் கொடுக்கிறார். இதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன? தூரத்திலிருந்த நாம் அருகில் வந்து தேவ வார்த்தையை (கதிரை) உட்கொள்பவர்களாய் காணப்பட்டு, அவரின் பாதமே தஞ்சமென்று இருப்போமென்றால் தலையாகிய கிறிஸ்துவினால் நம் தலையெழுத்து மாற்றப்பட்டு தலை நிமிர்ந்து நடக்கிறவர்களாகக் காணப்படுவோம்.

- Mrs.வசந்தி ராஜமோகன் 

 

ஜெபக்குறிப்பு:

கெத்செமனே வளாகத்தில் அறைக்கு 2 பேர் வீதம் தங்கிப் பயிற்சிபெற 60 மிஷனெரிப் பயிற்சி அறைகள் கட்டப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250


Comment As:

Comment (0)