இன்றைய தியானம்(Tamil) 07.09.2024
இன்றைய தியானம்(Tamil) 07.09.2024
கண்காணிக்கும் தேவன்
“…நீர் என்னைக் காண்கிற தேவன்” - ஆதியாகமம் 16:13
குற்றங்கள் பெருகிவிட்ட இன்றைய சூழ்நிலையில் கண்காணிப்பு கேமரா மிக அவசியமாகி வருகிறது. மக்கள் கூடும் இடங்களான விமானநிலையம், ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள், தெருக்கள், சாலைகள், ஏன் வீடுகளிலும் கூட கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. நடந்த நிகழ்வுகளின் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு எளிதில் தீர்வு காண முடிகிறது. அனுதினமும் நிறைய சம்பவங்கள் முக்கிய சாட்சியாகி காவல்துறை செயலாற்ற பயன்படுகிறது. நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஒரு சமயம் மக்கள் காணிக்கை பெட்டியில் காணிக்கை போடுவதை கருத்தாய் கவனிக்கிறார். ஐசுவரியவான்களைக் காட்டிலும் ஒரு ஏழை விதவைப் பெண் போட்ட காணிக்கையைக் கண்டு, அவளின் மனப்பூர்வமான, உற்சாகம், உண்மை, மனவிருப்பம் எல்லாவற்றையும் அறிந்து அவள் தேவனுக்கென்று கொடுத்த காணிக்கையைக் குறித்து பாராட்டுகிறார். பழைய ஏற்பாட்டில் ஆபிரகாமின் மறுமனையாட்டியான ஆகார் தான் கர்ப்பவதியானதினால் தன் நாச்சியாராகிய சாராளால் ஏற்பட்ட கொடுமையினால் வனாந்தரத்திற்கு ஓடிப் போனாள். தேவன் அவள் அங்கலாய்ப்பைக் கேட்டு, கண்ணீரைக் கண்டு, அவளுடன் பேசுகிறார். தன்னுடன் பேசின கர்த்தருக்கு "நீர் என்னைக் காண்கிற தேவன்" என பெயரிட்டு அவர் சொற்படி கீழ்ப்படிந்து தன் நாச்சியாரண்டை சென்றாள்.
நான் பியூசி முடித்து TELC விடுதியில் பணிபுரிந்து கொண்டிருந்த போது 1978 ஆம் ஆண்டு மனை இயல் (Home science) கல்லூரியில் பயிலும் வாய்ப்பை தேவன் எனக்குத் தந்தார். முதல் வருடம் படித்துக் கொண்டிருக்கும் போது கல்லூரி முதல்வர் ஒரு பொதுக்கூடுகையில் என்னை முன்னால் அழைத்து எனக்காக எல்லோரையும் கைதட்டச் சொன்னார்கள். காரணம் மூன்றாவது மாடியில் தங்கியிருந்த எங்கள் முதல்வர் மேலிருந்து என்னைக் கவனித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். கல்லூரி வளாகத்தில் கிடக்கும் சிறிய குப்பையானாலும் அதை உடனடியாக எடுத்து குப்பைக் கூடையில் போடுவதையும், மாலையில் நான் நடத்தும் பிரேயர் செல்லையும் அடிக்கடி கவனித்திருக்கிறார்கள். விடுதியில் தங்கி படித்துக் கொண்டிருந்த என்னுடைய சில செய்கைகளைக் குறிப்பிட்டு பாராட்டினார்கள். அன்று இரவு என் டைரியில் இவ்வாறு எழுதினேன் “என் தேவனே என்னை நீர் ஒவ்வொரு வினாடியும் கண்காணித்துக் கொண்டிருக்கிறீர், என் செயல்கள் மனிதர்களை மட்டுமல்ல உம்மையும் பிரியப்படுத்துவதாகவே அமைய என் வாழ்நாள் முழுவதும் உதவி செய்யும்”என்று. இப்போது எனக்கு 71 வயதாகிறது. இன்றுவரை அதை முயற்சிக்கிறேன், சில சமயங்களில் தோல்வியுற்று மன்னிப்பு கோரி என்னை சீர்படுத்த தேவனிடம் அர்ப்பணிக்கிறேன். ஆம், நம்மை கண்காணிக்கும் கேமரா கர்த்தரின் கண்களே!
உமக்குப் பிரியமானதை செய்ய எனக்கு போதித்தருளும். நீரே என் தேவன் உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான பாதையில் நடத்துவீராக! ஆமென்.
- Mrs. சரோஜா மோகன்தாஸ்
ஜெபக்குறிப்பு:
ஆகஸ்ட் 15ஆம் தேதி வாலிபர் முகாமில் வாலிபர்கள் எடுத்த தீர்மானத்தில் நிலைத்து நிற்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864