இன்றைய தியானம்(Tamil) 05.09.2024
இன்றைய தியானம்(Tamil) 05.09.2024
கிரியை
"நீயே எல்லாவற்றிலும் உன்னை நற்கிரியைகளுக்கு மாதிரியாகக் காண்பித்து" - தீத்து 2:7
சீன தேசத்திற்கு சென்ற மிஷனெரியான ஹட்சன் டெய்லர் ஒரு முறை நடு இரவில் பட்டினியால் வாடிக் கொண்டிருக்கும் குடும்பத்திற்காக ஜெபிக்க அழைக்கப்பட்டார். அவர் ஜெபிக்க ஆரம்பித்தபோது வார்த்தைகள் வெளிவராமல் தொண்டை அடைத்தது. ஏனெனில் அவர் பையில் இருந்த வெள்ளிப் பணம் அக்குடும்பத்தின் பசியை போக்கப் போதுமானது. அவருடைய இருதயத்தில் "மக்களுக்காக பரிதபிக்கும் தேவனை ஆராதிக்கிறாய், அறிவிக்கிறாய். ஆனால் உன்னிடமுள்ள பணத்தை கொடுத்துவிட்டு என்னை விசுவாசிக்கத் தயாராக இல்லையே" என ஆண்டவர் உணர்த்தினார். உடனே ஹட்சன் அந்த வெள்ளி நாணயத்தை அக்குடும்பத்தினரிடம் கொடுத்து ஜெபித்துச் சென்றார். அது அவரிடம் இருந்த கடைசி நாணயம் என்பதால் தயக்கம் மனதில் இருந்தது. மறுநாள் காலையில் தபாலில் ஒரு தங்க நாணயம் வந்தது. அதைப் பார்த்தவுடன் "தேவனுடைய வங்கியில் செலுத்திய பணம், 12 மணி நேரத்தில் 10 மடங்கு அதிகமாகக் கிடைக்கும்" என்றார்.
இன்று உலகத்தில் இது போல் கிரியை செய்பவர்கள் இல்லை. ஜெபிப்பவர்கள் தான் அதிகம் உள்ளனர். ஆனால் தேவன் நம் ஜெபத்தில் மட்டும் பிரியப்படுகிற தேவன் அல்ல. நம்முடைய கிரியைகளிலும் பிரியப்படுகிறவராய் இருக்கிறார். தொற்காள் என்னும் சீஷி நற்கிரியைகள் செய்து வந்தாள். அவருடைய ஜீவன் பிரிந்த போதும் அதனை திரும்ப பெற தேவன் கிருபை செய்தார். பேதுரு ஜெபித்த ஜெபம் மாத்திரமல்ல தொற்காள் செய்த நற்கிரியை தேவனுக்கு முன்பாக வந்து அவளை உயிரோடு எழும்பச் செய்தது. தேவன் நம்மை நற்கிரியைகளை செய்வதற்கு சிருஷ்டித்து இருக்கிறார் என்று எபேசியர்2:10 ல் வாசிக்கிறோம். மேலும் நம் விசுவாசம் கூட கிரியையுடன் இருக்க வேண்டும். இல்லையெனில் இது செத்ததாய் இருக்கும் என யாக்கோபு 2:26 ல் பார்க்கிறோம். சோர்ந்து போகாமல் நற்கிரியைகளைச் செய்யும் போது தேவன் நித்திய ஜீவனை அளிப்பார் எனவும் வேதத்தில் காண்கிறோம். தேவன் நம் உள்ளத்திலிருந்து செய்யும் நற்கிரியைகளைக் கண்டு அதற்கான பலனை இம்மையிலும் மறுமையிலும் தர வல்லவர்.
பிரியமானவர்களே, நீங்கள் செய்யும் நற்கிரியையே உங்கள் வெளிச்சம் என இயேசு கிறிஸ்து சொல்லுகிறார். மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு பரலோகத்தில் இருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாக பிரகாசிக்கக்கடவது என்கிறார். நீங்கள் இனியும் வெறும் பேச்சில் அல்லது ஜெபத்திலல்லாமல் கிரியை செய்கிறவர்களாயும் இருங்கள். ஏனெனில் உங்கள் நற்கிரியைகள் மூலமே மனிதர்கள் உங்களுக்குள்ளிருக்கும் கிறிஸ்துவை காண முடிகிறது. இயேசுவுக்கும் கடன் கொடுக்கிறவர்களாய் இருக்கிறீர்கள். அவர் அவருடைய வல்லமையின் படி ஹட்சன் டெய்லருக்கு பத்து மடங்காய் கொடுத்தது போல நீங்களும் மனப்பூர்வமாய் நற்கிரியை செய்யும் போது ஆயிரம் மடங்காய் தரவல்லவர். கிரியையை கூட்டுவோம். நம் வெளிச்சம் இருளில் இருக்கும் மக்கள் மத்தியில் பிரகாசிக்கட்டும்.
- Mrs. அன்புஜோதி ஸ்டாலின்
ஜெபக்குறிப்பு:
25 ஆயிரம் கிராமங்களில் சுவிசேஷம் அறிவிப்பதற்கான கைப்பிரதிகள், பைபிள் தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864