Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 12.07.2024

இன்றைய தியானம்(Tamil) 12.07.2024

 

பெருமையுள்ளவன்

 

“…தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார்,…" - யாக்கோபு 4:6

 

டைட்டானிக் என்னும் பெயர் கொண்ட கப்பல் மிகவும் பிரம்மாண்டமாகவும் அதிக பொருட்செலவிலும், அனைத்து பாதுகாப்புடனும் ஒயிட் ஸ்டார் லைன் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. எவ்வளவு பெரிய பனிப்பாறையையும் உடைத்து நொறுக்கும் தன்மை கொண்டது எனவும் எல்லா தட்பவெப்ப சூழ்நிலையையும் கையாளும் திறமை கொண்டது என்றும் புகழ்ந்தனர். கப்பல் புறப்பட தயாரான போது 2224 பணக்காரப் பயணிகளின் முன்னிலையில் அதன் நிறுவனர் இவ்வாறு கூறினார், "கடவுளே நினைத்தாலும் இந்த கப்பலை ஒன்றும் செய்ய முடியாது" என்று! ஆனால் தனது முதல் பயணத்திலேயே ஏப்ரல் 15 ஆம் தேதி 1912 ஆம் வருடம் வடக்கு அட்லாண்டிக்கடல் பகுதியில் மூழ்கியது. அந்த விபத்தில் 1500 பேர் மரித்துவிட்டார்கள். காரணம் கப்பலின் முன் பகுதியில் மட்டுமே பனிப்பாறையை உடைக்கும் கருவியுடன் தயாரித்து இருந்தனர். ஆனால் கப்பலின் பக்கவாட்டில் பனிப்பாறை மோதி கப்பல் இரண்டாக உடைந்தது. இதனை வடிவமைத்த நிறுவனத்தின் பெருமை என்னமாய் முடிந்தது.

 

வேதத்தில் ஆதியாகமம் புஸ்தகத்தில் கோபுரத்தை கட்டி நமக்கு பேர் உண்டாக்குவோம் வாருங்கள் என்று சொன்னார்கள். இவர்கள் கட்டின கோபுரத்தைக் குறித்த பெருமையை உடைக்க கர்த்தர் அவர்களின் செயல்களை தாறுமாறாக பண்ணினார். இவர்கள் தங்களின் பெயர் பிரஸ்தாபத்தை அதிகமாக்கவும், அதனை நிலைநாட்டவும் விரும்பினார்கள். ஆனால் கர்த்தருடைய பார்வைக்கு அது ஆகாதவையாக இருந்தது.

 

பிரியமானவர்களே! தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார். தேவனே எதிர்த்து நிற்கிற ஒரே காரியம் இதுதான். பெருமைக்கு எதிர்ச்சொல் தாழ்மை. நாமும் இயேசுவைப்போல் ஒவ்வொரு நாளும் தாழ்மையை தரித்துக் கொள்வோம். நமக்கு உண்டானதெல்லாம் தேவக்கிருபையால் நமக்கு கிடைக்கப்பெற்றவை. எதிலும் நமக்கு பெருமை கொள்வதற்கு உரிமை கிடையாது. வேதம் இப்படியாக நம் ஒவ்வொருவரையும் எச்சரிக்கிறது, "என் சாமார்த்தியமும் என் கைப் பெலனும் இந்த ஐஸ்வரியத்தை எனக்குச் சம்பாதித்தது என்று உன் இருதயத்தில் சொல்லிக் கொள்ளாமலும் இரு." (உபா.8:17) ஆம், நம்முடைய ஜீவன் அவருக்கு சொந்தம். அப்படியிருக்கும்போது நாம் செய்தததைக் குறித்து மேன்மை பாராட்டலாமா? எனவே நமக்கு கிடைக்கப்பெற்ற எல்லா ஈவுக்காகவும் ஸ்தோத்திரம் செலுத்தி, பெருமையை நம்மை விட்டு அகற்றுவோம்.

- Mrs. ரூபி அருண்

 

ஜெபக்குறிப்பு: 

குஜராத் மாநில ஊழியத்தின் எல்லைகள் விரிவாக்கம் செய்யப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864


Comment As:

Comment (0)