Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 12.09.2024

இன்றைய தியானம்(Tamil) 12.09.2024

 

எப்படி நிலை நிற்பது?

 

"…என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது" - யோவான் 15:5

 

ஊல்விச் ( Woolwich) என்ற நகரத்தின் ரெயில்வே ஸ்டேஷனிலே ஒரு ரயில்வண்டி புறப்பட ஆயத்தமாக நின்றது. ராம்ஸ்டோக் என்ற தேவ ஊழியர் ஒரு கூட்டத்தில் பேசி முடித்துவிட்டு, அந்த ரயிலில் ஏறினார். திடீரென அங்கு ஓடி வந்த இளம் ராணுவ அதிகாரி ராம்ஸ்டோக்கிடம் கேட்டார், "ஐயா, நான் உங்கள் பிரசங்கத்தைக் கேட்டேன். ஆனால் ஒரு மனிதனால் ஆண்டவரின் வழியில் எப்படி நிலை நிற்க முடியும்?" என்றார். ராம்ஸ்டோக் உடனே தனது சட்டைப் பையில் இருந்து ஒரு பென்சிலை எடுத்தார். அதை செங்குத்தாக தன்னுடைய உள்ளங்கையில் அப்படியே நிற்கச் செய்தார். ஆனால் மேல் பகுதியில் பிடிமானம் இல்லாததால் விழுந்தது. பின் அதன் நடுப்பகுதியைப் பிடித்துக் கொண்டார். பென்சில் நின்றது. உடனே சொன்னார், "நமது வாழ்வும் இந்த பென்சிலை போலதான், ஆண்டவரின் கரம் நம்மை பிடித்துக் கொண்டால் மட்டுமே நாம் நிலைநிற்க முடியும். இல்லாவிட்டால் பிடிமானம் இல்லாமல் பென்சில் விழுந்தது போல நாமும் விழுந்து விடுவோம்" என்றார். அந்த வாலிபன் நம் சுயபெலனால் அல்ல, தேவகரத்தாலே நாம் நிலைநிற்க முடியும் என்பதை உணர்ந்து கொண்டான்.

 

வேதத்தில் ஆபிரகாம் தன் வாழ்வின் கஷ்ட நேரங்களிலெல்லாம் வானத்தை அண்ணாந்து பார்த்து தேவனின் உதவியை நாடினார். தேவனை முழுவதுமாக பற்றிக் கொண்டார். தேவனை தன் துணையாக கொண்டார். அதனால் "விசுவாசிகளின் தகப்பன்" என அழைக்கப்பட்டார். தேவனின் கரம் நம்மைப் பிடிக்கவில்லை என்றால் இந்த உலகில் நம்மால் நிலைத்து நிற்க முடியாமல் விழுந்து விடுவோம். தேவனைப் பற்றிக் கொள்ளும் போது மிகப்பெரிய காரியங்களை நம் வாழ்வில் செய்வார். நெகேமியாவோடு தேவனின் தயவுள்ள கரம் இருந்தபடியினாலே அவர் துவக்கின காரியத்தை இறுதிவரை நேர்த்தியாய் செய்து முடிக்க முடிந்தது. இதே போலத்தான் தேவகரம் நம்மை பிடித்துக்கொண்டு நம்முடன் இருந்தால் உலகம், மாமிசம், பிசாசு அனைத்தையும் நாம் ஜெயிக்க முடியும்.

 

பிரியமானவர்களே, உலகத்தில் உபத்திரவம் உண்டு என வேதம் கூறுகிறது. அந்த உபத்திரவத்தில் நிலை நின்று ஜெயம் பெற உலகத்தை ஜெயித்த அவரின் துணையில்லாமல் முடியாது. உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு ஆனாலும் திடன் கொள்ளுங்கள். நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார் (யோவான் 16 :33). திடன் கொள்ளுங்கள் என்று சொல்லி, உங்களுக்கு துணை நிற்க, உபத்திரவத்தில் உங்களை நிலை நிற்கச் செய்ய, தேவன் ஆயத்தமாய் உங்கள் அருகில் வந்துள்ளார். அவரைப் பற்றிக் கொள்ளுங்கள். எல்லா சோதனைகள், வேதனைகள், பாடுகள், கஷ்டங்களின் மத்தியிலும் நம்மை விடுவிக்க நம்மை நிலை நிற்கச் செய்ய வல்லவராய் தேவன் இருக்கிறார். எந்த சூழலிலும் அவர் நம்மை கைவிட மாட்டார். நீங்களும் விடாது அவரையே பற்றிக் கொள்ளுங்கள். தேவனை மாத்திரமே பற்றிக் கொண்டு இவ்வுலகில் அவருக்காக நிலைத்து நின்று ஜெயம் பெறுவோம்.

- Mrs. பேபி காமராஜ்

 

ஜெபக்குறிப்பு:

தெபொராள் இல்லாத ஒவ்வொரு தாலுகாவிலும் இரண்டு தெபொராள்கள் எழும்ப ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864


Comment As:

Comment (0)