இன்றைய தியானம்(Tamil) 01.03.2024
இன்றைய தியானம்(Tamil) 01.03.2024
சுப்பாண்டி சாகஸம்
"பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து,… எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்…" - அப். 1:8
"சுப்பாண்டி சாகஸம்" எனும் வேடிக்கை கதைகளை என் சிறு வயதில் படித்திருக்கிறேன். இந்த சுப்பாண்டி எதைச் செய்தாலும் தலைகீழாக, தப்பாகத்தான் செய்வான். ஒருமுறை ஒரு கிராமத்து நண்பர் சுப்பாண்டியிடம், "காளை மாடு உன் வீட்டில் இருக்கிறதா?" என்று கேட்டார். சுப்பாண்டி இல்லை என்றவுடன் அந்த நண்பன் காளைமாடு எவ்வளவு முக்கியமானதென்றும், நம் கிராமத்தில் காளைமாடு இல்லாத வீடே இல்லை என்றும் கூறினார். இதைக் கேட்ட சுப்பாண்டி உடனடியாக ஒரு காளைமாட்டை வாங்கிவிட்டான். வெகுநாள் கழித்து அந்த நண்பன் சுப்பாண்டி வீட்டில் மாடு கட்டியிருப்பதைக் கண்டு, இந்த காளைமாட்டை எப்படியெல்லாம் பயன்படுத்துகிறாய் என்று கேட்டான். அதற்கு சுப்பாண்டி இது விலை உயர்ந்ததானதால் அதை வெயிலில் விடாமல் வீட்டில் கட்டிவைத்து மிக பத்திரமாக பராமரிப்பதாக கூறினான். நண்பன் இதைக் கேட்டு தலையில் அடித்துக்கொண்டு, காளைமாட்டை வாங்குவது அதை வைத்து வயலை உழவும், வண்டிமாடு இழுக்கவும்தானே என்றான்.
மேற்கண்ட சுப்பாண்டி கதைக்கும் இன்றைய சபைகளில் அந்நிய பாஷை வரத்தை பயன்படுத்தும் முறைக்கும் ஓர் ஒற்றுமையைக் காணலாம். அப்போஸ்தலர் நடபடிகளில் 2ம் அதிகாரத்தில் பரிசுத்த ஆவியானவர் முதன்முதலில் ஊற்றப்பட்டவுடன் சீஷர்கள் எல்லோரும் அந்நிய பாஷைகளில் பேசினார்கள் என்று பார்க்கிறோம். அதைத் தொடர்ந்து உடனே அவர்கள் சுவிசேஷத்தை அறிவிக்க ஆரம்பித்தார்கள் என்றும் காண்கிறோம். பேதுரு பதினோரு பேருடன் எழுந்து நின்று சுற்றி நின்றவர்களுக்கு சுவிசேஷத்தை அறிவிக்க ஆரம்பித்துவிட்டார் என இன்றைய வேதபகுதியில் வாசிக்கிறோம். ஆனால் இன்றைய நாட்களில் அநேக சபைகளில் அந்நிய பாஷை பேச வலியுறுத்தப்படுகிறது. அது நல்லதே! ஆனால் அதே முக்கியத்துவம் சுவிசேஷம் அறிவிக்க காண்பிக்கப்படுவதில்லை. எப்படி சுப்பாண்டி வயலில் காளைமாட்டை பயன்படுத்தாமல் வீட்டில் வைத்திருந்தானோ அதே போல இன்று சபைகளில் அந்நிய பாஷை பேசுகிறோம். ஆனால் அதைப் பெற்றுக் கொண்ட நோக்கத்தை மறந்துவிடுகிறோம்.
1 கொரிந்தியர் 14:4ல், அந்நிய பாஷை பேசும்போது நமக்கு பக்திவிருத்தி உண்டாகிறது என்று வாசிக்கிறோம். ஆம், நாம் கர்த்தருக்குள் பெலப்பட, ஆவியில் அனலாக தேவன் கொடுத்திருக்கிற அருமையான வரம் அந்நிய பாஷை. இவ்வனுபவம் ஒருவேளை உங்களுக்கு இல்லையென்றால் ஜெபித்து, வாஞ்சித்து பெற்றுக் கொள்ளுங்கள். அதே வேளையில் நாம் பக்தி விருத்தியடைவது நமக்காக மட்டும் அல்ல; அப்பக்திவிருத்தி உலகெங்கும் சுவிசேஷம் அறிவியுங்கள் என்கிற ஆண்டவரின் கட்டளைக்கு நேராக நம்மை நடத்தவேண்டும். அந்நிய பாஷை பேசுவோம். அதே நேரத்தில் நரகத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிற மனிதர்களுக்கு சுவிசேஷம் அறிவிக்க புறப்பட்டுப் போவோம்.
- J. சந்தோஷ்
ஜெபக்குறிப்பு:
இம்மாதம் நடைபெறும் ஊழியங்களில் தேவகரம் உடனிருந்து நடத்த ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864