Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 05-11-2021

இன்றைய தியானம்(Tamil) 05-11-2021

 

நினைப்பு பிழைப்பைக் கெடுக்கும் 

 

“நன்மை செய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக;…” - கலா. 6:9 

 

தனிமையான, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் உள்ள ஒரு கால்வாயில் கார் ஒன்று சிக்கிக் கொண்டது. அதிர்ஷ்டவசமாக அந்த வழியாக சென்ற குதிரைக்காரர் ஒருவர் தன் “தானி” என்ற குதிரையை கொண்டு வந்து, உதவி செய்ய முன்வந்தார். குதிரையை காரில் கட்டிவிட்டு “நல்லி காரை இழு” என்று சத்தமிட்டார். தானி நகரவில்லை. பின், “லானி காரை இழு” என்று சத்தமிட்டு கூப்பிட்டார். அப்போதும் தானி நகரவில்லை. அதன்பின் “சானோ காரை இழு” என்று சத்தமிட்டார். அப்போதும் ஒன்றும் நடக்கவில்லை. கடைசியில் “தானி காரை இழு” என்று சொன்ன பின் “தானி” காரைப் பிடித்து இழுக்க கார் வெளியே வந்தது. 

 

அதைக் கண்ட கார் ஓட்டுநர், “நீர் என்னென்னவோ பெயர்களை சொல்லி அழைத்தும் குதிரை நகரவில்லையே” என்று கேட்டார். அப்போது குதிரையின் சொந்தக்காரர், “ஐயா, இந்த குதிரைக்கு கண் தெரியாது. நான் மற்ற குதிரைகளின் பெயர்களை சொல்லி அழைத்தபோது, இந்த குதிரை தான் மட்டும் தனியாக இழுக்கவில்லை. இன்னும் நாலுபேர் கூட இருக்கிறார்கள் என்ற தைரியத்தில் காரை இழுத்தது. ஆனால் தான் மட்டும்தான் இழுக்கிறோம் என்று தெரிந்தால் இது காரை இழுத்திருக்காது” என்று கூறினார். இன்றும் நம்மில் அநேகர் இந்த தானி என்ற குதிரையைப் போலத்தான் இருக்கிறோம். நாம் மட்டும்தான் அந்த வேலை செய்கிறோம் என்று தெரிந்தால் நாம் அதில் ஈடுபடவே மாட்டோம். உதாரணத்திற்கு, “ஆலயத்தில் வேறு யாரும் எந்த வேலையையும் செய்வதில்லை. நான் மட்டும் ஏன், என் நேரத்தையும், முயற்சியையும் செலவழித்து அந்த காரியத்தை செய்ய வேண்டும்” என்று நம்மில் அநேகர் எந்த காரியத்தையும் ஆலயத்திற்கென்று செய்வதில்லை. 

 

எலியா தீர்க்கதரிசி யேசபேலுக்கு பயந்து ஓரேப் பர்வதத்தில் ஒளிந்து கொண்டிருக்கையில், தேவனிடம் “நான் ஒருவன் மாத்திரம் மீதியாயிருக்கிறேன்” என்றார். ஆண்டவர், “இன்னும் ஏழாயிரம் பேர் இருக்கிறார்கள்” என்று கூறினார். 

 

நாம் செய்ய வேண்டிய காரியங்களை செய்யாமல், “நான் மாத்திரம்தான் தனியாக இருக்கிறேன், வேறு யாரும் என்னோடு இல்லை, எத்தனை காலம் நானே செய்வது” என்று தேவனிடம் முறையிட்டுக் கொண்டிருக்கிறோம். எலியா தீர்க்கதரிசியைப் போல மற்றவர்கள் செய்து கொண்டிருக்கிற காரியங்களை அறியாதபடி நம் கண்கள் மறைக்கப்பட்டு இருக்கலாம். ஒருவேளை நாம் மாத்திரம்தான் கர்த்தருக்காக செய்து கொண்டிருக்கிறோம் என்று வைத்து கொண்டாலும், எது நன்மையானதோ அதை தொடர்ந்து செய்ய வேண்டும். சோர்ந்து போகக் கூடாது. நாம் தளர்ந்து போகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம். ஒருவேளை நீங்கள் தேவனுக்காக செய்கிறதை யாரும் பார்க்கவில்லை அல்லது யாரும் பாராட்டவில்லை என்று நினைக்கிறீர்களா? மனிதன் பார்க்காவிட்டாலும் எல்லாம் அறிந்த எல்ரோயீ நம்மை காண்கிற தேவன், அவருக்காக நீங்கள் படும்பாடுகளை, எடுக்கும் முயற்சிகளை அறிந்தவராயிருக்கிறார். அவர் ஒருபோதும் கண்சாடையாய் விட்டுவிடுகிறவரல்ல. நீங்கள் கர்த்தருக்காக செய்யும் காரியங்களுக்கு நிச்சயமான பலனை தேவன் ஏற்ற வேளையில் தருவார். ஆமென்! 

- Bro. ஹனீஷ் சாமுவேல் 

 

ஜெபக்குறிப்பு:

நமது சிறுவர் இல்ல பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250


Comment As:

Comment (0)