இன்றைய தியானம் 01-11-2021
இன்றைய தியானம் 01-11-2021
என்னைப் போலாகுங்கள்
“...அவரைப் பார்க்கும்படி ஒரு காட்டத்தி மரத்தில் ஏறினான்.” – லூக்கா 19:4
எரிகோ என்பது ஒரு அழகிய பட்டணம். இஸ்ரவேல் தேசத்திலுள்ள இந்த பட்டணம் ரோம ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. பழமை வாய்ந்த அப்பட்டணத்தின் தெருவை விரிவாக்க, பாதைக்காக, இப்படி இன்னும் சில தேவைக்காக அங்குள்ள மரங்கள் வெட்டப்பட்டன. ஆனாலும் இவை எதிலும் சிக்காமல் ஒரு காட்டத்தி மரம் மட்டும் பல ஆண்டுகளாக நின்று கொண்டிருந்தது. இனி அந்த மரமே பேசக் கேட்போமா?
ஒருநாள் அவ்வழியே இயேசு வருகிறார் என்ற செய்தி பரபரப்பாக பேசப்பட்டது. நான் நினைத்தேன், இன்று என் நிழலில் அநேகர் இளைப்பாறுவார்கள் என்று! அப்போது ஒரு குள்ளமான மனுஷன் ஜனக்கூட்டத்தின் மத்தியில் இயேசுவை காணமுடியாமல் தவித்துக் கொண்டிருந்தார். திடீரென்று அவர் குடுகுடுவென்று ஓடிவந்து என்மேல் ஏற முயன்றார். அவர் அநியாயமாய் வரிவசூல் செய்பவர் என்பதை அறிந்திருந்தேன். ஆனாலும் அவர் என்மீது ஏறும்படி அமைதியாய் என்னை விட்டுக்கொடுத்தேன். இயேசுவை காணும்படி அவரை உயர்த்தி காண்பித்தேன். கொஞ்ச நேரம் அவரை சுமந்து நின்றேன். பெரிய அற்புதம் நிகழ்ந்தது. இயேசு என் அருகே வந்த உடன், அண்ணாந்து பார்த்து, “சகேயுவே இறங்கி வா நான் உன் வீட்டில் தங்க வேண்டும்” என்றார். ஒரு பாவியான மனுஷனின் வீட்டிற்கு இயேசு செல்லுகிறாரே என்று எல்லோருக்கும் எரிச்சல்! ஆனால் எனக்கோ மிகுந்த சந்தோஷம்! கொஞ்ச நேரத்தில் ஏழை எளியவர்கள் கையிலெல்லாம் பணம்! அவர்கள் பேசிக்கொண்டு வந்ததை கவனித்தேன். “சகேயு அநியாயமாய் வாங்கினதை எல்லாம் நாலத்தனையாய் கொடுக்கிறார். சில நிமிடத்தில் இயேசு அவரை இப்படி மாற்றிவிட்டாரே” எனக் கூறினர். எனது மகிழ்ச்சிக்கு அளவேயில்லை!
அன்பானவர்களே! ஒரு வேளை உங்களுக்கு சகேயுவைப் போல பணத்தை திரும்ப கொடுப்பது கஷ்டமாகவோ முடியாமலோ இருக்கலாம். ஆனால் என்னைப் போல வாழ்வது ரொம்ப ஈஸி. நான் சகேயு என்மீது ஏற அனுமதித்தது போல நீங்களும் பாவிகளை ஏற்றுக்கொள்ளுங்கள். நான் கொஞ்ச நேரம் அவரை சுமந்ததுபோல நீங்கள் அவர்களின் பெலவீனங்களை தாங்குங்கள், உங்களுக்கு தெரிந்ததை கற்றுக்கொடுங்கள். இயேசுவை அவர்கள் கண்டுகொள்ளும்படி எல்லா உதவிகளையும் செய்யுங்கள். நான் ஒருநாள் தான் பயன்பட்டேன். ஆனால் என்மீது ஏறிய சகேயுவோ ஆயிரமாயிரமான ஆண்டுகளாக பேசப்பட்டுக் கொண்டேயிருக்கிறார். நீங்கள் வழிநடத்தும் நபர்கூட அப்படி வரலாமே! பிறர் இயேசு கிறிஸ்துவை கண்டுகொள்ளும்படி உங்களால் இயன்ற சிறு சிறு காரியங்கள் செய்யுங்கள். நிச்சயமாய் அது அநேகருடைய வாழ்வை ஆசீர்வாதமாக்கும். நமக்காகவே வாழ்ந்து மரிப்பதில் என்ன சந்தோஷம் இருக்கிறது? பிறரின் வாழ்வு மாற, அவர்கள் ஆசீர்வதிக்கப்பட வாழ்வதில்தானே நமது மகிழ்ச்சி உள்ளது உண்மைதானே!
-K. டேவிட் கணேசன்
ஜெபக்குறிப்பு:
இம்மாதம் முழுவதும் நடைபெறும் ஊழியங்களில் தேவகரம் உடனிருந்து நடத்த ஜெபியுங்கள்.
இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app:
தமிழில் பெற - +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம்
(Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு:
+91 94873 67663, +91 94424 93250