Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 31-10-2021

இன்றைய தியானம்(Tamil) 31-10-2021

 

கேட்டதைக் கொடுப்பார் 

 

“நாம் எதைக் கேட்டாலும், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்று நாம் அறிந்திருந்தோமானால், அவரிடத்தில் நாம் கேட்டவைகளைப் பெற்றுக்கொண்டோமென்றும் அறிந்திருக்கிறோம்.” – 1யோவான் 5:15 

 

குளிரில் நடுங்கிக்கொண்டிருந்த தன் பிள்ளைகளைப் பார்க்க வேதனையாக இருந்தது தாய் நிர்மலாவிற்கு. ஒழுகிக்கொண்டிருக்கும் வீட்டினுள், தங்களிடமிருந்த ஒரு பெட்ஷீட்டை பிள்ளைகள் இருவரும் சுற்றிக்கொண்டு அமர்ந்திருந்தனர். தன் தவிப்பை யாரிடம் சொல்வதென அமர்ந்திருந்தாள். கணவன் வேலை பார்த்த கம்பெனியை மூடிவிட்டதால் வேறு எங்கோ வேலை கேட்டு வர சென்றிருக்கிறார். ரேஷனில் வாங்கிய மண்ணெண்ணெய் முடியப்போகிறது. காலையில் சமைத்த சில்லென்ற உணவைப் பிள்ளைகள் சாப்பிட்டாயிற்று. கணவனுக்காகக் காத்திருப்பதால் பசி வேறு வயிற்றைக் கிள்ளியது. “அம்மா, ஏன் இயேசப்பா நமக்கு இப்படி கஷ்டம் கொடுக்கிறார்?” என்று கேட்டான் ஏழு வயது மகன் டேவிட். “இயேசப்பா கஷ்டம் கொடுக்கமாட்டார். அப்படி கஷ்டங்கள் நமக்கு வந்தாலும் நல்லதுக்காகத்தான் இருக்கும். சீக்கிரத்தில் நமக்கு நல்ல வீட்டை இயேசப்பா கொடுப்பார்” என்றாள் ஐந்து வயது தங்கை ரோசி. “இயேசப்பாவை குறை சொல்லக்கூடாது. ஞாயிறு பள்ளி வகுப்பில் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள் இல்லையா டேவிட்? நாம் ஜெபம் பண்ணலாம், இயேசப்பா வீடு கொடுப்பார்” என்றாள் ரோசி. “வீடெல்லாம் கொடுக்க வேண்டாம், இந்த ஓட்டு வீட்டை வீட்டின் சொந்தக்காரர் சரிபண்ணிக் கொடுத்தால் போதும்” என்று வெறுப்புடன் சொன்னான் டேவிட். மகளுக்கு இருக்கும் விசுவாசம் தனக்கில்லையே என்று தாய் நினைத்தவளாய், “சரி வாங்க நாம் ஜெபம் பண்ணலாம்” என்று சொல்லி முடிப்பதற்குள் முதல் ஆளாய் முழங்காலிட்டாள் ரோசி. “அம்மா, நான் ஜெபம் பண்ணட்டா?” என்று கேட்ட மகளை வியப்புடன் பார்த்தாள் நிர்மலா. விசுவாசமில்லாமல் தான் ஜெபிப்பதைவிட, விசுவாசமுள்ள மகள் ஜெபிப்பது மேல் என்று அவள் ஜெபிக்க தடை சொல்லவில்லை. குட்டி கரங்களை கூப்பி, குட்டிப் பெண் அருமையாய் ஜெபித்தாள். 

 

கதவு தட்டப்படும் ஓசை! திறந்தால் நிர்மலாவின் கணவன் குமார் நின்றிருந்தார். “இன்னுமா பிள்ளைகள் தூங்கவில்லை?” என்று கேட்டார். “அப்பா, அந்த மூலையில் உள்ள ஓடுகள் காற்றில் உடைந்து போயிற்று மழைத்தண்ணீர் வீட்டினுள் விழுவதால் குளிருது” என்று சொல்லியபடி ஓடிவந்து தந்தையின் கால்களைக் கட்டிக்கொண்டான் டேவிட். “நிர்மலா, எனக்கு ராஜதுரை அண்ணாச்சி வேலை போட்டுக் கொடுத்திருக்கார். அவர் துணிக்கடைக்குப் பின்னால் ஒரு சின்ன அழகான வீடு இருக்கிறது. அதில் தங்கும்படி சொன்னார். நாளைக்கே வேலைக்கு வரச் சொல்லிவிட்டார்.” நிர்மலா மகள் முகத்தைப் பார்த்தாள். “எனக்குத்தான் தெரியுமே இயேசப்பா வீடு கொடுப்பார்” என்று சொல்வது போலிருந்தது பிள்ளையின் முகம். ஓடு இல்லாத அந்த ஓட்டையிலிருந்து வந்த நிலா வெளிச்சத்தால் வீடே பிரகாசித்தது. குட்டீஸ், நீயும் எந்த கஷ்டமானாலும் இயேசப்பாவிடம் ஜெபி. இயேசப்பா பதில் கொடுப்பார். 

- Mrs. ஜீவா விஜய்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250


Comment As:

Comment (0)