Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 22-10-2021

இன்றைய தியானம்(Tamil) 22-10-2021

 

தடை வயதல்ல 

 

“...ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக் கொள்ளுகிறவன் ஞானமுள்ளவன்.” - நீதி. 11:30

 

கேன்சர் வியாதியிலிருந்து சுகம் கொடுத்த கர்த்தருக்கு ஏதாகிலும் செய்ய வேண்டுமென்று ஒரு வயதான தாயார் நினைத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது சபையில் ஊழியர் ஆத்தும ஆதாயத்தின் முக்கியத்துவத்தைக் குறித்து செய்தி கொடுத்தார். இதைக் கேட்ட அவர் தன்னால் இயன்ற அளவுக்கு ஆத்துமாக்களை ஆண்டவருக்காக ஆதாயப்படுத்த முயற்சி எடுப்பேன் என்று மனதில் தீர்மானித்தார். வீட்டிற்குச் சென்று ஒரு மரப்பலகையை எடுத்து அதில் “சமாதானம் இல்லாதவர்கள், வியாதியுள்ளவர்கள் இங்கே வரலாம் அவர்களுக்கு ஜெபிக்கப்படும்” என்று எழுதினார். அதை தன் வீட்டின் முன்னே இருந்த மரத்திலே மாட்டி வைத்தார். அவர்கள் வீட்டின் அருகே கல்லூரியும், மருத்துவமனையும் இருந்தது. அநேக மாணவிகள் தங்கள் படிப்பிற்காகவும், மன சமாதானத்திற்காகவும் தாயாரிடம் வந்து ஜெபித்து விட்டு செல்வார்கள். மருத்துவர்களால் கைவிடப்பட்டவர்களும் வந்து அந்த தாயாரிடம் ஜெபித்து அற்புத சுகம் பெற்றுச் செல்வார்கள். இதனால் அநேக வாலிபர்களும் நோயாளிகளும் இரட்சிக்கப்பட்டு சபையில் சேர்க்கப்பட்டனர்.

 

நாகமான் என்னும் படைத்தலைவன் குஷ்டரோகத்தால் வேதனையாக இருந்த போது அவனால் இஸ்ரவேல் தேசத்திலிருந்து கடத்திக் கொண்டுவரப்பட்ட ஒரு சிறுபெண் அவனுடைய விடுதலைக்கு வழி சொன்னாள். அவனும் அவள் சொன்னபடியே தேவனுடைய மனுஷனாகிய எலிசாவிடம் வந்து யோர்தானில் 7 முறை முழுகி சுகம்பெற்று இரட்சிக்கப்பட்டு புறப்பட்டுப் போனான். அந்தச் சிறுபெண் தன்னை அடிமையாக கடத்திக் கொண்டு வந்தவன் வேதனை அடைவதைப் பார்த்து சந்தோஷப்படாமல், அவன் துன்பம் நீங்க வழி சொன்னாள். அவனைக் கர்த்தருக்கென்று ஆதாயம் செய்தாள். அவன் மூலமாய் சீரியா தேசம் முழுவதும் தேவன் இரட்சிப்பைக் கட்டளையிட்டார். 

 

மேற்கண்ட இரு சம்பவங்களின் மூலம் கர்த்தருக்காக ஆத்தும ஆதாயம் செய்ய வயது ஒரு தடையில்லை என்பதை உணரமுடியும். ஆம்! சிறியவர்-பெரியவர், வாலிபர்-முதியவர் என எவரும் ஆத்தும ஆதாயம் செய்ய முடியும். அறிவுக் குறைவு, பொருளாதாரக் குறைவு, உடல்நலக் குறைவு, சொந்தப் பிரச்சனைகள் என இவைகளில் ஏதும் ஆத்தும ஆதாயத்துக்கு தடையாக இருக்காது. ஆனால் ஒன்று மட்டும் தடையாக அமையும், அதுதான் சாட்சியில்லாத வாழ்க்கை. அடிமையாகிய சிறுபெண்ணின் வார்த்தையை படைத்தளபதியாகிய நாகமானே கேட்டான். அந்த அளவுக்கு அவளின் சாட்சி வாழ்க்கை இருந்தது. இன்று உங்களைக் குறித்து என்ன? இயேசுவைப் போல் சரியான சாட்சி வாழ்க்கை இருந்தால் நீங்களும் ஆத்தும ஆதாயம் செய்யலாம். 

- S. மனோஜ்குமார்

 

ஜெபக்குறிப்பு:

இரண்டாவது, நான்காவது வாரங்களில் சுவிசேஷம் அறிவிக்க திட்டமிட்டுள்ளபடி ஊழியம் நடைபெற ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250


Comment As:

Comment (0)