Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 18-10-2021

இன்றைய தியானம்(Tamil) 18-10-2021

 

அன்பும் கடிந்து கொள்ளுதலும்

 

“பிரம்பும் கடிந்துகொள்ளுதலும் ஞானத்தைக் கொடுக்கும்;...” – நீதி 29:15

 

இன்று அநேக குடும்பங்களில் பெற்றோருக்கு எழும் கேள்வி “ பிள்ளையை அடித்து வளர்ப்பது சரியா? தவறா? இதனால் கணவன் மனைவிக்கிடையே சண்டை வருகிறதே” என்று கூறுகிறார்கள். இந்த கேள்விக்கான பதிலை வேதத்தில் தேடுவதே மிகச் சிறந்தது. வேதம் கூறுவதென்ன? பிள்ளை தவறு செய்யும் போது பிரம்பை கையாளலாம். அது அவனை பாதாளத்திற்கு தப்புவிக்கும், ஞானத்தை கொடுக்கும் என்று கூறுகிறது. 

 

ஆனால் சிறு பிள்ளைகளை விவரம் தெரியும் முன்பே பெற்றோர் அடிப்பர். பிள்ளை அழுவதற்கு கூட அடிவிழும். ஒரு வேளை அது வியாதியினால் அழலாம், பயந்து அழலாம், ஏதாவது பூச்சி கடித்து அழலாம். எனவே சிறுபிள்ளை அழுவது எதற்கு என்று தெரியாமல் அடிக்கக் கூடாது. மூன்று வயதிற்கு மேல்தான் நாம் செய்வது தவறு என்று குழந்தைகளுக்கே தெரியும். அப்பொழுது தவறு என்று தெரிந்தும் செய்யும்போது முதலாவது அன்புடன் கண்டித்து பேசவேண்டும். அதில் திருந்தாவிட்டால் அடி கொடுக்க வேண்டும். 

 

வாலிப வயது வந்தபின் மகனையோ, மகளையோ அடிப்பது நல்லதல்ல. கண்டிப்பதே போதுமானது. வாலிபர்களை அடிப்பதினால் திருந்த வாய்ப்பில்லை, தாங்கள் அவமானமடைந்ததாகவே உணருவார்கள். இன்னும் இருதயம் கடினப்பட்டு கோபமும், மூர்க்கமும் அதிகமாகும். ஆகவே அவர்களை கண்டித்து விட்டு, தேவனிடம் அவர்களை மாற்றும்படி ஜெபியுங்கள். தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை. 

 

வெளிநாடுகளில் பிள்ளைகள் கெட்டுப்போவதற்கு காரணம், பிள்ளைகளை கண்டித்து வளர்க்காததே! அரசின் சட்டங்களும் அதற்கேற்றாற் போலவே உள்ளது. நம் இந்திய தேச கலாச்சாரம் இந்த விஷயத்தில் உயர்வானது. ஆனாலும் நமது கண்டிப்பு கண்மூடித்தனமாக இருக்கக் கூடாது. நமது பெற்றோர் நம்மை நேசிப்பதால்தான் கண்டிக்கிறார்கள் என்ற நம்பிக்கையை பிள்ளைகளிடமிருந்து பெறவேண்டும்.

 

கணவன் பிள்ளையை தண்டிக்கும்போது மனைவி பிள்ளைக்கு வக்காலத்து வாங்ககூடாது. ஒருவர் கண்டிக்கும் முறை மற்றொருவருக்கு பிடிக்கவில்லையென்றால் இருவரும் தனியே இதைக் குறித்துப் பேசி முடிவெடுக்க வேண்டும். பிள்ளையின் முன் தகப்பனின் செயலைக் குற்றப்படுத்தினால், எந்த விஷயத்திலும் பிள்ளைக்கு தகப்பனின் மேல் நம்பிக்கை வராது. ஒருவர் கண்டிக்கும்போது மற்றவர் அமைதியுடன் அதை ஆமோதிக்க வேண்டும். இதன் மூலம் அம்மாவும், அப்பாவும் எல்லா காரியத்திலும் ஒன்றாக செயல்படுவதைப் பிள்ளை புரிந்து கொள்ளட்டும். இப்படி பிள்ளைகளை கண்டிக்கும் காரியத்தில் பெற்றோர் கவனமாயிருப்போமானால் ஒரு நல்ல தலைமுறையை உருவாக்க முடியும்.

- J. சந்தோஷ்     

 

ஜெபக்குறிப்பு: 

மோட்சப் பயணம் மாத இதழில் எழுதும் நபர்களை தேவன் விசேஷித்த ஞானத்தினால் நிரப்ப ஜெபியுங்கள்.  

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250


Comment As:

Comment (0)