Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 16-10-2021

இன்றைய தியானம்(Tamil) 16-10-2021

 

பயமென்னும் கண்ணி 

 

“மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்; கர்த்தரை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான்.” - நீதிமொழிகள் 29:25

 

இது ஒரு வேடிக்கையான கதை. ஒரு மனைவி தன் கணவரை கூட்டம் நிறைந்த மிருகக்காட்சி சாலையில் துரத்திக்கொண்டு சென்று கொண்டிருந்தாள். கையில் குடையையும், வாயில் பயங்கரமான வார்த்தைகளையும் சொல்லி துரத்தினாள். அவளுக்கு பயந்து போன கணவர் வேர்த்து விறுவிறுத்து, எங்கு செல்வது என்று தெரியாமல், சிங்கம் இருந்த அந்த கூண்டு பூட்டு தொங்கவிடப்பட்டும், பூட்டப்படாமல் இருந்ததை கண்டு, அதை திறந்து அதற்குள்ளே குதித்து, தனக்குப் பின்னே கூண்டின் கதவை சாத்தினார். அதைக் கண்டு பயந்த சிங்கம் கூண்டின் கம்பிகளுக்கிடையில் சாய்ந்தபடி அவரை பார்த்தது. அதற்குள் அங்கு வந்து, அவர் சிங்கத்தின் கூண்டிற்குள் இருப்பதைக் கண்ட அவரது மனைவி மிகவும் கோபத்துடன் “யோவ், கோழையே! தில்லிருந்தா வெளியே வாய்யா!” என்று கத்தினாள். சிங்கத்தின் கூண்டில் இருந்த அந்த மனிதனே கோழை என்றால் அவள் சிங்கத்தை விட எத்தனை பயங்கரமானவளாக இருந்திருப்பாள்! 

 

இஸ்ரவேலர் யாருக்கு பயப்பட வேண்டும் என்பதில் குழப்பமடைந்திருந்தனர். கர்த்தர் அவர்களுக்கு வாக்குத்தத்தம் செய்த கானான் தேசத்திற்கு வேவு பார்க்க சென்றிருந்த பன்னிரண்டு பேரில் பத்துப் பேர் அப்படித்தான் அந்த நாட்டின் இராட்சதர்களுக்கு முன்பு தாங்கள் வெட்டுக்கிளிகளைப் போல இருந்ததாகக் கூறினர். அவர்கள் பார்த்த மனிதர்களைக் குறித்து அவர்களுக்கு அத்தனை பயம் இருந்தது. உருவத்தில் அவர்கள் பெரியவர்களாக இருந்தபடியால் தங்களால் அவர்களை மேற்கொள்ளமுடியாது என்று தாங்களாகவே தீர்மானித்துக் கொண்டனர். அவர்களுடைய பெலன் கர்த்தர் என்பதை அவர்கள் மறந்துபோய் விட்டனர். அவர்களுடைய அவிசுவாசத்தின் விளைவாக மொத்த இஸ்ரவேலரையும் அவர்கள் கதிகலங்க செய்ததுமன்றி, அந்த சந்ததியே கானான் தேசத்தை சுதந்தரிக்க முடியாமற்போக செய்துவிட்டனர். ஆனால் அவர்களை எளிதில் மேற்கொள்ளலாம் என்று கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்து யோசுவாவும், காலேபும் அறிக்கை செய்து அந்த கானானை சுதந்தரித்தனர். 

 

மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும். கர்த்தரை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான் என்ற வசனத்தின்படி மனிதனுக்கு நாம் பயந்தோமானால் நமக்கு கர்த்தர் மேல் நம்பிக்கை இருக்காது. அவருடைய வாக்குத்தத்தங்கள், அவருடைய திட்டங்கள், அவருடைய வல்லமை எதன் மேலும் நம்பிக்கையும் விசுவாசமும் இருக்காது. மனிதனுக்கு பயப்படும் பயம் கண்ணியைத்தான் வருவிக்கும். ஆனால் கர்த்தரோ எல்லாரைக் காட்டிலும் பயப்படத்தக்கவர். அவர் சித்தமில்லாமல் எதுவும் நடக்காது என்பதை மறந்து போகிறோம். கர்த்தரை நம்பினால் நாம் வேறு யாருக்கும் பயப்படத் தேவையில்லை. அவர் ஒருவரே நம்பத்தக்கவர், அவரை மட்டுமே நாம் நம்பி கீழ்ப்படிய வேண்டும். அப்போது நாம் உயர்ந்த அடைக்கலத்தில் வைக்கப்படுவோம். 

- Mrs. வசந்தி ராஜமோகன்

 

ஜெபக்குறிப்பு:

மோட்சப் பயணம் மாத இதழ் அச்சடிப்பதற்கான பொருளாதாரத் தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250


Comment As:

Comment (0)