![](https://vmm.org.in/uploads/1633994593.jpg)
இன்றைய தியானம்(Tamil) 12-10-2021
இன்றைய தியானம்(Tamil) 12-10-2021
சொத்துக்குவிப்பு
“கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு; அவன் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும்.” – நீதிமொழிகள் 14:26
நம்முடைய வாழ்க்கையில் நமது பிள்ளைகள் மிகவும் முக்கியமானவர்கள். பெற்றோர் பிள்ளைகளுக்கு ஆஸ்தியை சேர்த்து வைக்க வேண்டும் என்பது உண்மைதான். ஆனாலும் அதைவிட ஒரு முக்கியமான காரியம் குடும்பத்தில் காணப்பட வேண்டும். அது என்னவென்றால், கர்த்தருக்குப் பயப்படுகிற பயம்! நாம் கர்த்தருக்குப் பயந்து, அவருடைய வழிகளில் நடந்து, ஒரு நல்ல வாழ்க்கை வாழ்ந்தால் நமது பிள்ளைகளுக்கு அதுவே அடைக்கலமாக மாறிவிடும். கோடி கோடியாய்ப் பணமும், அடுக்குமாடி வீடும், விலையுயர்ந்த துப்பாக்கிகளும் கொடுக்க முடியாத பாதுகாப்பை தேவன் தருகின்ற அடைக்கலம் கொடுத்து விடும். இந்த பாதுகாப்பு ஆயிரம் தலைமுறை மட்டும் தொடரும். தேவனுடைய அடைக்கலத்தினால் நமது பிள்ளைகள் பாக்கியவான்களாயிருப்பார்கள். அனுதின உணவு, உடுத்த உடை, தேவையான கல்வி, நோயற்ற வாழ்வு, நல்ல மகிழ்ச்சியான குடும்ப வாழ்வு என அவர்கள் ஆசீர்வாதமாய் இருப்பார்கள்.
பரிசுத்த வேதாகமத்தில் ரூத்தைக் குறித்து நாம் வாசிக்கும்போது அவள் மாமியாரை கனப்படுத்தி வாழ்ந்தாள் என்று பார்க்கிறோம். கர்த்தரை அறியாத குடும்பத்தில் பிறந்தாலும், தன் செய்கையால் கர்த்தருக்குப் பிரியமாக நடந்து, விதவையான தன் மாமியாரை ஆதரித்து, அவருடன் வாழ்ந்து, அவளையும் பராமரித்து வந்தாள். இந்த நற்குணம் போவாஸ்-க்குத் தெரிவிக்கப்பட்டது. ஆகவே போவாஸ், “உன் செய்கைக்குத்தக்க பலனை கர்த்தர் உனக்குக் கட்டளையிடுவாராக” என ஆசீர்வதித்தான். ரூத்துக்கும்-போவாஸ்-க்கும் பிறந்த ஓபேதின் வம்சத்தில்தான் தாவீதும், இயேசு கிறிஸ்துவும் பிறந்தார். என்ன ஒரு அருமையான வாழ்க்கை! ரூத்திற்கு மிகப் பெரிய மேன்மை கிடைத்தது!
நண்பர்களே! இன்று நாம் கர்த்தருடைய கற்பனைக்கும் வசனத்திற்கும் பயந்து நம் வீட்டிலுள்ள பெரியவர்களை ஆதரிக்கிறோமா? “தகப்பனையும் தாயையும் கனம்பண்ணுவாயாக” என்ற கற்பனையைப் பின்பற்றுகிறோமா? அவர்களை எப்படி நடத்துகிறோம். நாம் எப்படி செய்கிறோமோ அப்படியே நமக்கும் செய்யப்படும். நமது பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைப்பது யாரால்? பக்தியுள்ள பெற்றோரால்தான் என்று ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். நாமும் தேவனுக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்து நமக்குப் பின்வரும் சந்ததிகளுக்கும் ஆசீர்வாதத்தைப் பின் வைத்துப் போவோமாக! ஆமென்!
- Mrs. புவனா தனபாலன்
ஜெபக்குறிப்பு:
7000 ஊழியர்கள் மூலம் 1 இலட்சம் கிராமங்கள் சந்திக்கப்படும் திட்டத்தில் எல்லா மாநிலங்களில் இருந்தும் 12 பேர் முதற்கட்டமாக நம்முடன் இணைய ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250