Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 07-10-2021

இன்றைய தியானம்(Tamil) 07-10-2021

 

நயங்காட்டினாலும் சம்மதியாதே! 

 

“என் மகனே, பாவிகள் உனக்கு நயங்காட்டினாலும் நீ சம்மதியாதே.” - நீதி.1:10

 

அழகான அரண்மனை ஒன்றில் எட்டு கால்களைக் கொண்ட பூச்சி மிக நேர்த்தியாக ஒரு வலையை பின்னி, தான் அந்த வலையின் நடுவில் சிங்காரமாக படுத்துக் கொண்டிருந்தது. இதைப் பார்த்த ஈ, “நானும் இப்படி உல்லாசமாக இருந்து ஆட எனக்கு இப்படிப்பட்ட வலை இல்லையே” என்று சொன்னது. இதைக் கேட்ட எட்டுக்கால் பூச்சி, “நீயும் வா, நாம் ஜாலியாக இருக்கலாம்” என்றது. ஈ இந்த ஆசையான வார்த்தையைக் கேட்டு, வலையில் சிக்கிக் கொண்டது. எத்தனை முயற்சி செய்து போராடியும் ஈ-யால் தன்னை விடுவித்து கொள்ளமுடியவில்லை. சற்று நேரத்தில் எட்டுக்கால் பூச்சிக்கு அந்த ஈ உணவாக மாறிவிட்டது. 

 

இன்றைய உலகில் பாவம் செய்வதற்கு தூண்டும் காட்சிகளையும், வாய்ப்பையும் பிசாசு உள்ளங்கையிலேயே கொண்டு வந்துவிட்டான். “இதெல்லாம் தவறல்ல மச்சி” என்று கூறி பாவத்துக்கு நம்மை விற்றுப்போட வைக்கும் friendship கூட்டம் உண்டு. வேலை செய்யும் இடத்தில், படிக்கிற இடத்தில் உன் நண்பர்கள் கூறலாம், “கொஞ்சம் குடி, இதெல்லாம் பாவம் அல்ல” என்று சொல்லி நயவசனிப்பினால் உன்னிடம் பேசலாம். பரஸ்திரீயின் உதடுகள் தேன்கூடு போல ஒழுகும், அவள் வாய் எண்ணெயிலும் மிருதுவாயிருக்கும் என்று வேதாகமம் சொல்கிறது. பாவத்தினால் வரும் சம்பளம் மரணம். அது நாளடைவில் எட்டியைப் போலக் கசக்கும். நீ விடுதலை பெற நினைத்தாலும் உன்னால் முடியாமல் போய்விடும். அப்போது உன் மனம் நினைக்கும். “ஐயோ! போதகத்தை நான் கேட்கவில்லையே. தகப்பனும், தாயும் கடிந்து கொள்ளும்போது, அதை அலட்சியம் பண்ணி விட்டேனே! இப்போது இதிலிருந்து எப்படி விடுதலை அடைய முடியும். யார் என்னை இந்த பாவத்திலிருந்து தூக்கி விட முடியும்?” என்று யோசிக்கத் தோன்றும். 

 

பாவத்தை தண்ணீரைப் போன்று பருகும் வாலிபரே! உங்களுக்கு வேதம் சொல்லும் அறிவுரை என்ன? என் மகனே, நீ அவர்களோடே வழிநடவாமல் உன் காலை அவர்கள் பாதைக்கு விலக்கிடுவாயாக. துன்மார்க்கர்களின் ஆலோசனையில் நீ நடவாமல், பாவிகளின் வழியில் நில்லாமல், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராதே என்று! ஆம், இப்படி சரியாய் நமது நினைவுகளையும், யோசனைகளையும், இருதயத்தின் எண்ணங்களையும் சுட்டிக் காட்டும் வேதம் என்ற கண்ணாடி முன் நின்று உன்னை சுத்தவானாய் காத்துக் கொண்டால், நீ வசிக்கும் இவ்வுலகிலும், உன்னைக் காண்கிற தேவனுடைய பார்வையிலும் விசேஷித்தவனாய், ஆசீர்வதிக்கப்பட்டவனாய் இருப்பாய்.

- D. பிலிப் பாலமுருகன் 

 

ஜெபக்குறிப்பு: 

சமூக வலைதளங்களில் வெளிவரும் தேவ செய்திகள் மூலம் அநேகர் உயிர்ப்பிக்கப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250


Comment As:

Comment (0)