Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 04-10-2021

இன்றைய தியானம்(Tamil) 04-10-2021

 

சிங்கம் 

 

“ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்துபோவாயானால், உன் பெலன் குறுகினது.” - நீதிமொழிகள் 24:10

 

டிஸ்கவரி சேனல் ஒன்றில் காட்டு மிருகங்களின் இராஜாவாம் சிங்கத்தைப் பற்றிய தொகுப்பொன்றை ஒளிபரப்பினார்கள். மற்ற எல்லா மிருகங்களிலும் இல்லாத தனித்துவம் வாய்ந்த அநேக சிறப்புகள் சிங்கத்திடம் உண்டு. உடல் ரீதியாக மட்டுமல்ல, இருதயத்திலும் அசுர பலம் கொண்டது இதின் தனித்துவம் ஆகும். சிங்கம் தன் கூட்டத்தில் இருக்கும்போது மட்டுமல்ல, தனியாக இருக்கும்போதும் எதைக் கண்டும் பயப்படாது. பயம், பின்வாங்குதல், சோர்வடைதல் மற்றும் சரணடைவது போன்ற எந்தவொரு தோற்றுப்போகக் கூடிய சுபாவத்தையும் சிங்கத்திடம் காணமுடியாது. பத்து மிருகங்கள் ஒன்று சேர்ந்து எதிர்த்தாலும் தனியொரு சிங்கமாக அத்தனையையும் எதிர்த்து நிற்கும். பரி. வேதாகமமும் சிங்கத்தைக் குறித்து அருமையான வார்த்தைகளை சொல்லியிருக்கிறது. “மிருகங்களில் சவுரியமானதும், ஒன்றுக்கும் பின்னிடையாததுமாகிய சிங்கமும்” என தமது வார்த்தைகளினால் மேன்மைப்படுத்தியுள்ளது. 

 

இன்று நீங்கள் ஏதோ ஒரு காரியத்தினால் சோர்ந்து போயுள்ளீர்களோ? தமது சிருஷ்டிப்பில் உள்ள சிங்கத்தைப் பற்றி இன்று தேவன் பேசினதை வாசித்தீர்கள் அல்லவா? ஒரு மிருகத்துக்கே விசேஷமான தைரியத்தையும், கம்பீரத்தையும் ஆண்டவர் கொடுத்திருப்பாரென்றால், தமது சாயலாக படைக்கப்பட்டிருக்கிற மனுஷனுக்கு எவ்வளவு அதிகமாய் பெலனை கொடுத்திருப்பார் என்பதை சிந்தித்துப் பாருங்கள். ஆகவேதான் அப்.பவுல் இப்படியாக கூறினார், “என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு” (பிலி. 4:13) என்றார். தன்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கையில் தான் பலவீனப்பட்டுப் போனதாக பவுல் ஒருபோதும் அதைரியப்பட்டு பேசினதே இல்லை. மாறாக தன் பலவீனத்தில் தேவனுடைய பலம் பூரணமாய் விளங்கினது என்கிறார். ஆகவே இதை வாசிக்கின்ற ஒருவராகிலும் எதைக் குறித்தும் சோர்ந்து போகாதிருங்கள். 

 

இன்றைய தியான வசனத்தில், ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்து போவாயானால் உன் பெலன் குறுகினது என்று வாசித்தோம். நாம் எதிர்பாராத நிலையில் சில ஆபத்துக்களையும், இழப்புகளையும் கண்டு மனதளவில் மிகவும் துவண்டு போய் விடுகிறோம். 1சாமு.30 ஆம் அதிகாரத்தில் தாவீது மிக மோசமான பிரச்சனையொன்றை சந்திக்கின்றார். இங்கு தாவீது அதைரியப்படாமல் தன் தேவனாகிய கர்த்தருக்குள் தன்னைத் திடப்படுத்திக் கொள்கிறதை வாசிக்கின்றோம். ஆபத்துகளில் சோர்ந்துவிட வேண்டாம். வேத வசனங்களை வாசியுங்கள், தியானியுங்கள், நம் ஆண்டவர் தருகின்ற பெலனில் உங்களை புதுப்பித்துக் கொள்ளுங்கள். 

- P. ஜேக்கப் சங்கர் 

 

ஜெபக்குறிப்பு:

You tube, twitter, WhatsApp மூலம் வெளிவரும் தேவ செய்திகள் மூலம் கிறிஸ்துவை அறியாத ஜனங்கள் இரட்சிக்கப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250


Comment As:

Comment (0)