இன்றைய தியானம்(Tamil) 02-10-2021
இன்றைய தியானம்(Tamil) 02-10-2021
குப்பை வண்டி
“மதிகெட்டவன் பிறனை அவமதிக்கிறான்; புத்திமானோ தன் வாயை அடக்கிக்கொண்டிருக்கிறான்.” – நீதிமொழிகள் 11:12
ஒருமுறை பிலிப் வாடகை டாக்ஸியில் ஏறி அமர்ந்து, தன் பயணத்தை தொடர்ந்த வேளையில், வண்டி சரியான பாதையில் சென்று கொண்டிருந்தபோதும் திடீரென்று ஒரு கறுப்பு நிற கார் வேகமாக குறுக்கே வந்தது. பிலிப்பின் டிரைவர் லாவகமாக வண்டியை ஓட்டி, ஒரு சிறு இடைவெளியில் விபத்திலிருந்து தப்ப வைத்தார். ஆனால் கருப்புநிற காரிலிருந்த மனிதனோ டிரைவரை நோக்கி சத்தமிட ஆரம்பித்தான். ஆனால் டிரைவரோ புன்னகைத்து விட்டு, கைகளை காட்டி விட்டு தன்னுடைய பாதையை தொடர்ந்தார். பிலிப் டிரைவரிடம், “ஏன் அந்த ஆளை சும்மா விட்டீர்கள்? அந்த ஆள்தானே தவறாக வந்தது? நீங்கள் ஏன் சத்தம் போடாமல் விட்டீர்கள்? எனக்கே இரத்தம் கொதிக்கிறது” என்று சராமரியாக கேள்விகள் கேட்டதற்கு அந்த டிரைவர், “அநேக மக்கள் குப்பைகளை ஏற்றிச் செல்லும் லாரிகளைப் போன்று உள்ளனர். அவர்கள் இருதயம் முழுவதும் நிறைய ஏமாற்றங்களும், கோபங்களும், விரக்திகளும் காணப்படுகின்றது. குப்பை வண்டி ஏதாவது ஓரிடத்தில் அந்த குப்பைகளைக் கொட்டுவது போல் இவர்கள் இந்த குப்பைகளை தங்கள் இருதயத்தில் சுமந்துகொண்டு யாரிடம் கொட்டுவது என்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சில நேரம் நம் மீது கொட்டுகிறார்கள். அதை எல்லாம் மனதில் ஏற்றுக்கொள்ளக்கூடாது. அந்தக் குப்பைகளை சுமந்துகொண்டு அதை உங்கள் வீடு, ஆபீஸ் போன்ற இடங்களுக்குச் சென்று பரப்பக்கூடாது. அந்த குப்பைகளை அந்த நேரமே மறந்துவிடுவது நல்லது” என்று கூறினார்.
தாவீது ராஜா தன் ஜன மக்களுடனும், பாதுகாவலர்களுடனும் நடந்து வருகையில் சவுல் வம்சத்தைச் சேர்ந்தவனாகிய சீமேயி தாவீதை ராஜாவாக ஏற்றுக்கொள்ள மனமில்லாததினால் தூஷித்தும், கற்களை எறிந்தும், மண்ணை வாரி தூற்றிக்கொண்டும் வந்தான். உடனிருந்தவர்கள் கோபப்பட்டு அவன் தலையை வெட்டி வரட்டுமா என்று கேட்டதற்கு, அவன் தூஷித்தால் தூஷிக்கட்டும், கர்த்தருடைய அனுமதியில்லாமல் எதுவுமே நடக்காது என்று எதையும் மனதில் வைத்துக் கவலைப்பட்டுக் கொள்ளாமல் சொன்னார்.
எத்தனையோ முறை நாம் வேலை செய்யும் இடங்களில் எத்தனை முறை அவைகளைக் கேட்டு சோர்ந்து போயிருக்கிறோம். நான் ஒரு தப்புமே பண்ணலை, ஆனால் என்னை இப்படி சொல்லி விட்டார்களே என்று இரவெல்லாம் தூங்காமல் அதையே யோசித்துக் கொண்டிருக்கின்றோம்! அந்த டிரைவர் சொன்னதைப் போல தங்களது குப்பையை யார் மேலோ கொட்ட வேண்டும் என்று தேடிக்கொண்டிருக்கும்போது நாம் மாட்டியிருப்போம். கவலையை விடுங்கள். இது உங்களுக்கு மட்டும் ஏற்பட்ட தனிப்பட்ட அனுபவமல்ல! “மதிகெட்டவன் பிறனை அவமதிக்கிறான்; புத்திமானோ தன் வாயை அடக்கிக்கொண்டிருக்கிறான்.” என்று வேதம் சொல்கிறது. யாராவது சத்தமிட்டால், தாவீதைப் போல ஒரு புன்னகையோடு ஏற்றுக்கொண்டு அப்படியே விட்டுவிடுங்கள். அதையே நினைத்து குமுறிக்கொண்டிருக்காதீர்கள்! அவருக்காக ஜெபியுங்கள். உங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றால் சண்டை போட்டு நாளை வீணாக்காமல், அவர்களை மன்னித்து, நேசியுங்கள்! கர்த்தர் கொடுத்த அருமையான நாளை ஆணந்தமாய் அனுபவியுங்கள்.
- Bro. ஹனீஷ் சாமுவேல்
ஜெபக்குறிப்பு:
நம்பிக்கை டிவியில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளை காணும் அநேகர் தேவ அன்பைக் கண்டு கொள்ள ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250