![](https://vmm.org.in/uploads/1632969106.jpg)
இன்றைய தியானம்(Tamil) 30-09-2021
இன்றைய தியானம்(Tamil) 30-09-2021
குறைவுள்ள வழிகாட்டி
“உமது நாமத்தினிமித்தம் எனக்கு வழிகாட்டி என்னை நடத்தியருளும்.” – சங்கீதம் 31:3
சகோ. பகத்சிங் கனடா நாட்டில் வின்னிபெக் என்ற நகரிலுள்ள ஒரு ஆராதனையில் கலந்து கொண்டு வெளியேறிய சமயத்தில் முன்பின் தெரியாத ஒருவர் அவசரமாக ஓடி வந்து, அவருடைய கரத்தை கெட்டியாக பிடித்து கொண்டார். “சகோதரனே நீர் ஏன் இந்தியாவிற்கு சென்று அங்கே சுவிசேஷத்தை பிரசங்கிக்க கூடாது ?” என்று கேட்டார். அதற்கு பகத்சிங், “நான் ஒரு பொறியாளர், பொறியியலை கற்பதற்காக பல ஆண்டுகள் பயின்றிருக்கிறேன். மேலும் எனக்கு கொன்னலும், திக்குவாயும் உண்டு. ஒரு சிறிய கூட்டத்திற்கு முன்பாக கூட நின்று பேசுவற்கு என்னால் முடியாது. மேடை பயமும், சபை கூச்சமும் என்னை போல ஒரு தொடை நடுங்கியும், திக்குவாயும் உடையவன் எப்படி பிரசங்கியாக முடியும்?” என்று கூறினார். ஆனால், இறுதியில் இந்தியாவில் தேவன் இவரை அநேக இலட்சக்கணக்கான மக்களுக்கு ஆசீர்வாதமாகவும் கர்த்தருக்குள் அநேகரை வழிநடத்தின பரிசுத்த வழிகாட்டியாகவும் மாற்றி வல்லமையாய் பயன்படுத்தினார்.
பரிசுத்த வேதாகமத்தில் மோசே என்ற தேவ மனிதர் திக்குவாயும், மந்த நாவும் உடைய குறைவுள்ளவர். ஆனால் கர்த்தரோ இவரை பல்லாயிரக்கணக்கான இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்தி செல்வதற்கான தலைவனும், வழிகாட்டியாகவும், ஒரு ஆசானாகவும் தெரிந்துகொள்கிறார். மோசேயின் கையினால் கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்கள் முன்பாக பலவிதமான அற்புத, அதிசய நிகழ்வுகளை நிகழ்த்தினார். மோசே தேவனால் சாந்தகுணமுள்ளவன் என்று பட்டம் பெற்றிருந்தும் இறுதியில் கானான் தேசத்தை சுதந்தரிக்க முடியவில்லை. காரணம், மோசேயிடம் கர்த்தர் கன்மலையை பார்த்து பேசு என்று சொல்கிறார். ஆனால் அவரோ கன்மலையை தன் கோலினால் இரண்டு தரம் அடிக்கிறார். எனவே மோசே தன்னுடைய பொறுமையை இழந்து கோபத்தை வெளிப்படுத்தினபடியால் கானானுக்குள் அவரால் பிரவேசிக்க முடியவில்லை.
இதை வாசிக்கின்ற நீங்கள் உங்கள் குடும்பத்தை நடத்தி செல்வதற்கான வழிகாட்டியாகவும், குருவாகவும், தலைவனாகவும் இருக்கலாம். நாமும், நமக்குள் கோபம், கசப்பு, பகை ஏற்படும் போது, அவ்வப்போதே சரிசெய்வோம். இல்லையென்றால், பெரிய ஆசீர்வாதத்தை இழக்க நேரிடும். மேலும் தேவன் நம் ஒவ்வொருவரையும் இந்த உலகத்தின் வழிகாட்டியாகவும், குருவாகவும் ஏற்படுத்தியுள்ளார். இருளிலும், பாவத்திலும் வாழ்கின்ற ஜனங்களை மீட்டெடுக்கிற வழிகாட்டியாகவும், அவருடைய நாமத்தை அறிவிக்கிற குருவாகவும் நம்மை வைத்துள்ளார். நாம் குறைவுள்ள வழிகாட்டியாக இருந்தாலும் தேவன் நம்மை நல்ல நிறைவுள்ள வழிகாட்டியாக வாழ நமக்கு நிச்சயம் உதவி செய்வார்.
- Mrs. சக்தி சங்கர்ராஜ்
ஜெபக்குறிப்பு:
நமது ஊழியத்தில் புதிதாக இணைந்துள்ள ஊழியர்களுக்கு தேவன் ஒத்த தரிசனத்தை கட்டளையிட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250