![](https://vmm.org.in/uploads/1631758956.jpg)
இன்றைய தியானம்(Tamil) 16-09-2021
இன்றைய தியானம்(Tamil) 16-09-2021
முரண்பாடான தலைமைத்துவம்
“வருகிறவர் நீர்தானா, அல்லது வேறொருவர் வரக்காத்திருக்கவேண்டுமா? என்று அவரிடத்தில் கேட்கும்படி அனுப்பினான்.” – மத்தேயு 11:3
கன்வென்ஷன் கூட்டமொன்றில் போதகர் ஒருவர் பிரசங்கம் பண்ணிக் கொண்டிருந்தார். ஊழியமானாலும் சரி, குடும்பமானாலும் சரி முரண்பாடுகள் அவசியமே என பேசினார். புதிதாய் இரட்சிக்கப்பட்டிருந்த எனக்கு இது சற்று முரண்பாடாகவே இருந்தது. குடும்பமோ, ஊழியமோ காரியம் என்று வந்தால் ஒன்றுபோல் தானே இருக்க வேண்டும். இது என்ன புதிய உபதேசம் என எனக்குள் யோசனைகள் உண்டாயின.
கர்த்தருக்கு வழியை ஆயத்தம் பண்ணுங்கள் என்று வனாந்தரத்தில் கூப்பிடுகிற கர்த்தருடைய சத்தமாயிருந்த யோவான், மத்தேயு 3-ம் அதிகாரத்தில் இயேசு கிறிஸ்துவைப் பற்றி மிக அற்புதமாய் பேசுவார். அதே யோவான் மத்தேயு 11ம் அதிகாரத்தில் இயேசு கிறிஸ்துவைப் பற்றி மிகவும் தடுமாற்றமடைந்தவராய் பேசுகிறார். தமக்கு தலைமையாயிருந்த இயேசுவைப் பற்றி யோவானுக்குள் சந்தேகங்களும் புரிந்து கொள்ளாமையும் உண்டாகி வார்த்தைகளிலும் எண்ணங்களிலும் இடறிக் கொண்டிருந்தார். சிறைச்சாலையில் இருந்த தன்னை இயேசு சந்திக்கவுமில்லை, விடுதலை செய்வதற்கான எந்த முயற்சியையும் இயேசு செய்யவில்லை என்பது யோவானுடைய சிந்தையாக இருந்திருக்கலாம்.
அநேக காரியங்களில் நாம் எதிர்பார்க்கிறபடி சில கட்டமைப்புகள் இருக்கிறதில்லை. ஒரு குடும்பத்தில் ஐந்து பேர் என்றால் ஐந்து பேரும் ஒன்றுபோல் சிந்திப்பது இல்லை, செயல்படுவதுமில்லை. குடும்பத்தில் உள்ள தலைமைத்துவ செயல்பாடுகளை ஏற்றுக்கொள்வதற்கு மனமுமில்லை. அதுபோல் தலைமைத்துவத்தை புரிந்துகொள்ள வைப்பதென்பது சற்று கடினமாகவே உள்ளது. இதில் விசேஷம் என்னவென்றால் சில நேரங்களில் வேதவசனங்களே நமக்கு முரண்பாடாக தோன்றுகிறது. உதாரணத்திற்கு ஏசா, யாக்கோபைக் குறித்து தேவனுடைய வழிநடத்துதலைப் பாருங்கள்.
(ரோமர் 9:10-16)
பரி. வேதாகமம் சொல்லுகிற கூற்றின்படி புரிந்து கொள்ளுதல் என்பது விசுவாசத்திலும், கீழ்ப்படிதலிலும்தான் உள்ளது. தேவன் அருளிய வேதம் குறைவற்றது என்று நாம் விசுவாசிக்கும்போதுதான் அதில் முரண்பாடுகள் இல்லை என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும்.
- P. ஜேக்கப் சங்கர்
ஜெபக்குறிப்பு:
ஒடிசா கும்மா பிளாக்கில் ஒரியாவில் புதிதாக ஊழியம் ஆரம்பிக்கப்பட, ஒத்த தரிசனமுள்ள ஊழியர்கள் எழும்ப ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250