Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 13-09-2021

இன்றைய தியானம்(Tamil) 13-09-2021

 

சொஸ்தமாக விரும்புகிறாயா? 

 

“...சொஸ்தமாகவேண்டுமென்று விரும்புகிறாயா...” - யோவான் 5:6 

 

இயேசு கிறிஸ்து பண்டிகைக்காக எருசலேம் வந்தபோது ஆட்டுவாசலருகே இருந்த பெதஸ்தா என்ற குளத்துக்குச் சென்றார். அங்கே 38 வருடங்களாய் வியாதியில் படுத்திருக்கிற ஒரு மனுஷன் இருந்தான். இயேசு அவனிடம், “சுகமாக வேண்டுமென்று விரும்புகிறாயா?” என்று கேட்டதை வேதத்தில் வாசிக்கிறோம். குணமாக வேண்டும் என்று விரும்பாமலா அவன் அங்கே படுத்திருப்பான்? இது என்ன கேள்வி என்று நினைக்கத் தோன்றுகிறதல்லவா! இவன் 38 வருடங்கள் அங்கே படுத்திருந்ததால், வாழ்க்கையில் நம்பிக்கையற்றவனாய், மரணம்வரை இந்த இடம்தான் நமக்கு என்ற விரக்தியுடன், வேதனையுடன் இருந்திருக்கலாம். அந்த மனவேதனையை, விரக்தியை மாற்றவும் அவன் தன் நிலையைத் தானே அறிந்து கொள்ளவும் இந்தக் கேள்வியைக் கேட்டார். 

 

இவராவது தன்னை அந்தப் பெதஸ்தா குளத்தில் முதலாவது இறக்கி விடுவாரா என்று யோசித்திருப்பான். தன்னிடம் கேள்வி கேட்டவர் இயேசு என்று அவன் அறியவில்லை. தன் மனக் குறையை அவரிடம் கூறுகிறார். இயேசுவும் உடனே “எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக் கொண்டு நட” என்று கூறியவுடன் உடனே கீழ்ப்படிந்து எழுந்தான், நடந்தான், சொஸ்தமானான். என்ன அற்புதம் பாருங்கள்! இயேசு, அவனிடம் அந்தக் கேள்வியைக் கேட்காமல் சும்மா, எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்று கூறியிருந்தால், அவன் உடனே கீழ்ப்படிந்து எழுந்து சுகமாயிருப்பான் என்பது சந்தேகமே. அவனைக் குணப்படுத்தும் முன் அவன் சுகம் பெற்றுக் கொள்ள அவனை ஆயத்தம் செய்வதற்காகவே அந்தக் கேள்வியை கேட்டார். 

 

இன்றைக்கும் நம் ஆண்டவராகிய இயேசு நம் ஒவ்வொருவரையும் பார்த்துக் கேட்கிறார். “நீ சொஸ்தமாக வேண்டுமென்று விரும்புகிறாயா?” என்று! முதலாவது, நாம் என்ன நிலைமையிலிருக்கிறோம் என்பதை உணர வேண்டும். நம் ஆத்துமாவில் பலவீனம், சுகவீனமாய் இருக்கலாம், குடிப்பழக்கம், போதைப்பொருட்கள், சிகரெட் மற்றும் பல தவறான தீய பழக்கங்களுக்கு அடிமையாகி விட முடியாமல் தவித்துக்கொண்டிருக்கலாம் அல்லது அதை விட்டுவிட வேண்டும் என்ற எண்ணம் கூட இல்லாதவர்களாய் இருக்கலாம். இதை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் இது ஆண்டவரின் அழைப்பாக வருகிறது. ஆண்டவரே, நான் சொஸ்தமடைய விரும்புகிறேன். உம் இரத்தத்தால் என் பாவங்களைக் கழுவி, சுத்திகரித்து, என்னையும் விடுதலையாக்கும் என்று உடனே ஆண்டவரிடம் கேளுங்கள். “கேட்கிற எவனும் பெற்றுக் கொள்கிறான்” என்ற வசனத்தின்படி உடனே பாவத்திலிருந்து விடுதலையடைவீர்கள், நோயிலிருந்தும் சொஸ்தமடைவீர்கள். அவரது அன்பின் குரலுக்குக் கீழ்ப்படிந்தால் உடனே விடுதலையும், ஆசீர்வாதமும் பெறலாம். நீ சொஸ்தமடைய விரும்புகிறாயா? இயேசுவிடம் வந்துவிடு! ஆமென்! 

- Mrs. புவனா தனபாலன்

 

ஜெபக்குறிப்பு:

தோழமை ஊழியர்கள் மூலம் சந்திக்கப்படும் ஆலயமில்லாத கிராமங்களில் ஆலயம் கட்டப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250


Comment As:

Comment (0)