இன்றைய தியானம்(Tamil) 15.01.2025
இன்றைய தியானம்(Tamil) 15.01.2025
கண்களின் பார்வை
"...சமாரியன் ஒருவன் பிரயாணமாய் வருகையில், அவனைக் கண்டு, மனதுருகி" - லூக்கா 10:33
ராஜூ, விமல் இருவரும் காரில் வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது ரயில்வே கேட் போடப்பட்டிருந்ததால் நீண்ட தூரத்திற்கு கார், பைக், பஸ் எல்லாம் நின்றுகொண்டிருந்தது. இவர்களது காரும் நின்றது. அப்போது ஒரு வாலிபன் பைக்கில் வளைந்து, நெளிந்து முன் நோக்கிச் சென்றான். அதைப் பார்த்த ராஜூ, வீட்டில் சொல்லிவிட்டு வந்துவிட்டான் போல, சாவுகிராக்கி என்றான். விமல், இல்லை அவன் எவ்வளவு ஞானமாய் செல்கிறான். இன்றைய வாலிபர்களுக்கு எவ்வளவு ஞானம். அவனுக்கு என்ன அவசரமோ தெரியவில்லை. கர்த்தர் அவனைக் காப்பாராக என்றான்.
எனக்குப் பிறன் யார் எனக் கேட்ட நியாயசாஸ்திரிக்கு தேவன் இதைப் போலொத்த ஒரு பதிலை உவமையைக் கூறுகிறார். கள்ளரால் அடிபட்டு, குற்றுயிராய் ஒரு மனிதன் வழியில் கிடக்கிறான். ஆசாரியனும், லேவியனும் தனித்தனியே அவ்வழியில் வருகின்றனர். அவனைக் கண்டு விலகிச் செல்கின்றனர். ஆனால் அவ்வழியே வந்த சமாரியன் அவனைக் கண்டு, மனதுருகி, அவன் காயங்களில் திராட்சரசமும், எண்ணெயும் வார்த்து, தன் வாகனத்தில் ஏற்றி சத்திரத்துக்குக் கொண்டு போய் பராமரித்தான். மறுநாளில் தான் பிரயாணப்படும் முன் சத்திரத்தான் கையில் இரண்டு பணத்தைக் கொடுத்து, இவனை விசாரித்துக்கொள், அதிகமாய் செலவானால் திரும்பி வரும் போது தருகிறேன் என்றான். ஒரே காட்சியை மூவர் காண்கின்றனர். ஆனால் அதில் ஒருவனுக்கு மட்டும் அக்காட்சி மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதனால் அவன் செயல்பட்டான். இன்றும் நாம் அநேக காட்சிகளை வழியில் காண்கிறோம். ஆனால் அவைகள் வெறும் பார்வையாக இருக்கிறதா? நம் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துகிறதா? என சிந்திப்போம்.
தேவனுடைய மகத்தான இரண்டு கட்டளை முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழுபலத்தோடும் உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் அன்பு கூர வேண்டும். இரண்டாவது உன்னிடத்தில் நீ அன்பு கூருவது போல பிறனிடத்திலும் அன்புகூர வேண்டும் என்பதே. இந்த அன்பு நம் உள்ளத்தில் இருந்தால் கண்களில் காணும் காட்சி நம் உள்ளத்தை உருக்கும், செயல்படத் தூண்டும். தேவையோடு இருக்கும் நபர்களுக்கு நாம் உதவி செய்யாமல் இருந்தால் நம் உள்ளத்தில் அன்பில்லை. நம் பெயர், புகழுக்காக பிறர் காண நாம் செய்யும் உதவிகள் அன்பினால் விளைந்தவை அல்ல. தேவன் நம்மிடம் எதிர்பார்ப்பதே அன்பு தான். அவரிடமும், மனிதரிடமும் அன்பு செலுத்த வேண்டும்.
அன்பரே, இந்த ஆண்டு நம் உள்ளத்தை செப்பனிட்டு தேவ அன்பினால் நிரப்புவோம். நாம் காணும் காட்சி மனதினை உடைத்து, அது செயலில் வெளிப்படவில்லையானால் கிறிஸ்துவின் அன்பை மக்கள் உணர முடியாது. தேவனின் ராஜ்ஜியம் கட்டப்பட முடியாது. இயேசு கிறிஸ்து இதே மாதிரியைத் தானே காண்பித்துச் சென்றார். வியாதியோடிருந்தவர்களைக் கண்டு மனதுருகி சொஸ்தமாக்கினார். கண்ணீரைக் கண்டு மனதுருகி மரித்தவர்களை உயிரோடு எழுப்பினார். வார்த்தையைக் கேட்க ஆவலோடு இருந்த ஜனங்களை மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போல தவித்து இருப்பதாக கண்டு உபதேசம் பண்ணினார். நாம் செயல்பட வேண்டும் என்பதற்காகவே தேவன் நம் கண்கள் காண வைத்திருக்கிறார் என்பதை அறிந்து செயல்படுவோம்.
- Mrs. அன்புஜோதி ஸ்டாலின்
ஜெபக்குறிப்பு:
கைப்பிரதி ஊழியங்கள் மூலம் கைப்பிரதியை பெற்றவர்கள் கிறிஸ்துவின் அன்பில் சேர்க்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864