இன்றைய தியானம்(Tamil) 14.01.2025
இன்றைய தியானம்(Tamil) 14.01.2025
சரி செய்தல்
"உன் கால் நடையைச் சீர்தூக்கிப் பார்; உன் வழிகளெல்லாம் நிலைவரப்பட்டிருப்பதாக" - நீதிமொழிகள் 4:26
அமெரிக்காவை சேர்ந்தவர் லூவாலஸ். இவர் இயேசு கிறிஸ்து என்று ஒருவர் வாழ்ந்ததே இல்லை என்று எழுதத் துணிந்தார். அதற்குப் போதுமான ஆதாரங்கள் திரட்ட தமது செல்வத்தின் பெரும்பகுதியை செலவளித்தார். அதற்காக ஒரு புத்தகத்தை எழுதத் தொடங்கினார். ஆனால் ஒரு சில வரிகளுக்கு மேல் அவரால் எழுதவே முடியவில்லை. ஏனெனில் அவருக்குக் கிடைத்த ஆதாரங்கள் அனைத்துமே இயேசு கிறிஸ்து பிறந்தது, வாழ்ந்தது, அற்புதங்கள் செய்தது, சிலுவையில் மாண்டது, மூன்றாம் நாள் உயிரோடெழுந்தது ஆகிய அனைத்தும் உண்மையென்றே உரைத்தன. இவர் மனந்திரும்பி, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மனிதனை மீட்க மனிதனாய் பிறந்து, பாவமற்ற புனிதராய் வாழ்ந்தார் என்பதை உலகத்திற்கு எடுத்துக்காட்ட பென்ஹர் என்னும் சிறந்த நூலை எழுதினார். அந்நூல் பின்பு நான்கு முறை திரைப்படமாக எடுக்கப்பட்டு புகழடைந்தது. லூவாலஸ் வாழ்க்கையில் தேவன் சரிசெய்ய வேண்டிய காரியங்களை சரி செய்ததின் விளைவாக ஒரு பெரிய காரியம் நடந்தது.
இதே போலதான் புதிய ஏற்பாட்டில் அசுத்த ஆவியுள்ள ஒரு மனுஷனைக் குறித்து எழுதப்பட்டுள்ளது. அந்த மனிதனுடைய குடியிருப்பு கல்லறைகளிலே இருந்தது. அப்படியென்றால் அந்த மனிதனுடைய வாழ்வு வெளிச்சம் இல்லாமல் இருளாக இருந்திருக்கக்கூடும். மேலும் அவன் தன்னை காயப்படுத்திக் கொண்டிருந்தான். இந்நிலையில் அவன் இயேசுவைத் தூரத்திலே கண்டபோது ஓடி வந்து, அவரை பணிந்து வேண்டிக் கொண்டான். இயேசுவானவர் இந்த மனுஷனுக்குள் இருந்த அசுத்த ஆவிகளை துரத்தினார். அவன் விடுதலை பெற்றபின்பு, இயேசுவானவர் தனக்கு செய்தவைகளையெல்லாம் பிரசித்தம் பண்ணத் தொடங்கினான்.
இதை வாசிக்கின்ற பிரியமானவர்களே! தேவன் இல்லை என்று எழுதத் துணிந்தவருடைய வாழ்க்கையை தேவனே சரி செய்தார். சிலுவைக்கு தூரமான லேகியோனை இயேசு சரி செய்து, அவரை பிரசித்தம் பண்ணும்படியாகவும் மாற்றினார். நம்முடைய வாழ்க்கையை சரி செய்த இயேசுவுக்கு நாம் இன்று என்ன செய்து கொண்டிருக்கிறோம்? சற்று சிந்திப்போம்! அவருடைய கடைசி சொட்டு இரத்தம் வரை சிந்தினது எதற்காக? உங்களையும், என்னையும் சரி செய்வதற்குதானே! இயேசுவின் இரத்தத்தினால் சரி செய்யப்பட்ட நாம் இயேசுவே இல்லாமல், இயேசுவுக்கு தூரமாயிருக்கின்ற ஜனங்களுக்கு அறிவிக்க ஒன்றிணைந்து செயல்படுவோம். தேவன் நம்மைக் கொண்டு பெரிய காரியங்களைச் செய்வார்.
- Mrs. சக்தி சங்கர்ராஜ்
ஜெபக்குறிப்பு
இந்தியாவின் 15 மாநிலங்களில் மிஷனெரி பணித்தளம் ஆரம்பிக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864