Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 15.10.2024

இன்றைய தியானம்(Tamil) 15.10.2024

 

ஜெயிக்கப் பிறந்தவர்கள்

 

"…நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே" - ரோமர் 8:37

 

ஒரு மாபெரும் படைத்தலைவன் ஒருவன் தன் நாட்டுக்கு அருகில் இருந்த தீவைக் கைப்பற்ற திட்டமிட்டிருந்தான். ஒரே ஒரு பாலம் தான் அத்தீவை அவனுடைய சொந்த நாட்டுடன் இணைத்திருந்தது. ஒரு நாள் இரவோடு இரவாக தன் படை வீரர்களை அப்பாலத்தின் வழியாக அத்தீவை அடையக் கட்டளை பிறப்பித்தான். அப்படியே அத்தீவையும் சென்று அடைந்தார்கள். தன் வீரர்களிடம் அந்த படைத்தலைவன், அப்பாலத்தை முழுவதும் தகர்த்து விட கட்டளையிட்டான். படைவீரர்கள் திகைத்தபோது ஒரு வீரன் எழுந்து, “நாம் தப்பிச் செல்வதற்கு இந்த ஒரு பாலத்தைத் தவிர வேறு வழி இல்லையே, இதையும் தகர்த்து விட்டால் நாம் தப்பித்து செல்வது எப்படி?” என்று கேட்டான். அதற்கு அந்தத் தலைவன், “நாம் தப்பிச் செல்வதற்காக வரவில்லை; வெற்றி பெறுவதற்காகவே வந்திருக்கிறோம்” என்றார். பாலம் தகர்க்கப்பட்டது, வெற்றியும் கிடைத்தது. அந்தப் பாலம் வெற்றியின் பாலமாய் மீண்டும் கட்டப்பட்டது.

 

இதை வாசிக்கும் தேவனுடைய பிள்ளைகளே, ஒரு காரியத்தைச் செய்யத் தொடங்கும் போதே, இது நடக்காவிட்டால், இது முடியாவிட்டால், இது வாய்க்காவிட்டால் என்று எதிர்மறையாகச் சிந்திக்கக் கூடாது. அப்படி சிந்திக்கும்போது நாம் எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்காது. “என்னைப் பலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ் செய்ய எனக்குப் பெலனுண்டு” என்ற வசனத்தின்படி விசுவாசத்தை நம் இதயத்தின் ஆழத்தில் பதித்துக் கொள்ள வேண்டும்.

 

மோட்சத்தை நோக்கிப் பயணப்படுகிற நம் கிறிஸ்தவ ஓட்டத்தில் நாம் திரும்பிப் பார்க்கவே கூடாது. மேகம் போன்ற திரளான சாட்சிகள், தங்கள் விசுவாச ஓட்டத்தில் ஓடி முடித்ததை நாம் வேதத்தில் பார்க்க முடியும். எபிரேயர் 11: 15, 16 ல், நம் முற்பிதாக்கள் தாங்கள் விட்டு வந்த தேசத்திற்குத் திரும்பிப் போக விரும்பாமல், பாடுகள், போராட்டங்கள், பிரச்சனைகளின் மத்தியிலும் பரமதேசத்தையே விரும்பி, தேவனிடம் நற்சாட்சி பெற்றார்கள்.

 

எலியா, எலிசாவை அழைத்தபோது எலிசா தன் ஏரையும், காளைகளையும் அழித்துவிட்டுத்தான் வந்தார். தன் மனம் தான் செய்த பழைய வேலைக்குத் திரும்பி விடக்கூடாதென இப்படிச் செய்திருக்கலாம். ஆண்டவர் இயேசுவும் “கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல” என்று சொன்னார். இன்றைய வேதபகுதயில் நம்மை நேசிக்கிற இயேசு கிறிஸ்து, நம்மை முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாக மாற்றுகிறார். ஆகையால் சோர்ந்து போகாமல், பின்னிட்டுத் திரும்பாமல், நம் இலக்கை நோக்கி ஓடி வெற்றி பெறுவோமாக!

- Mrs. பிரிசில்லா தியோஃபிலஸ்

 

ஜெபக்குறிப்பு:

இவ்வாண்டிற்குள் ஒரு லட்சம் சிறுவர்கள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864


Comment As:

Comment (0)