Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 14.10.2024

இன்றைய தியானம்(Tamil) 14.10.2024

 

சந்தோஷம் வேண்டுமா?

 

"…உம்முடைய இரட்சிப்பினாலே சந்தோஷப்படுகிறேன்" - 1 சாமுவேல் 2:1

 

அமெரிக்க தேசத்திலே ஒரு செல்வந்தன் இருந்தார். ஆனால் அவருக்கோ பலவிதமான பிரச்சனைகள் மற்றும் உள்ளத்தில் பலவிதமான கலக்கங்கள், மரண பயம் அவரை வாட்டி வதைத்தது. அவர் சம்பாதித்த செல்வத்தை சந்தோஷமாக அனுபவிக்க முடியவில்லை. ஒரு நாள் அவர் ஒரு ஊழியரைப் பார்த்து, உங்கள் சந்தோஷத்தின் இரகசியம் என்ன என்று கேட்டார். ஊழியர் அவரை அன்போடு சிலுவை அண்டை நடத்தினார். அவர் மனந்திரும்பி பாவ மன்னிப்பையும், இரட்சிப்பின் சந்தோஷத்தையும் பெற்றுக் கொண்டார். உலகத்தில் உள்ள அனைத்தும் புதிதாய் மாறிவிட்டதைப் போன்ற உணர்வு வந்தது.    

 

இந்த உலகத்திலே மூன்று வகையான சந்தோஷங்கள் இருக்கின்றன. முதலாவதாக, உலகப் பிரகாரமான காரியங்களில் வெற்றி பெறும்போது உள்ளத்தில் உண்டாகிற சந்தோஷம். இது இயற்கையானது, பொதுவானது. இரண்டாவதாக, சாத்தான் கொண்டு வருகிற சந்தோஷம் அது பாவ சந்தோஷம். அது உண்மையான சந்தோஷம் அல்ல. அநித்தியமான பாவ சந்தோஷம். முடிவிலே அது நம்மைப் பாதாளத்திலே, அக்கினி கடலிலே தள்ளி, நம்மை நித்திய ஜீவனை இழந்து போகச் செய்து விடும். மூன்றாவதாக கர்த்தரால் வருகிற சந்தோஷம். இதை இந்த உலகம் கொடுக்கவும், எடுக்கவும் முடியாது. நம் பாவங்கள் மன்னிக்கப்படும் போது இரட்சிப்பின் சந்தோஷம் வருகிறது. கர்த்தரைத் துதித்து, ஆராதிக்கும் போது பரலோக சந்தோஷம் நமக்குள் வருகிறது. இயேசு கிறிஸ்து தருகிற பிரதானமான சந்தோஷம்தான் இரட்சிப்பின் சந்தோஷம். என் பாவங்களை எல்லாம் மன்னித்து விட்டார். என்னை அவருடைய பிள்ளையாக ஏற்றுக் கொண்டார். என் உள்ளத்தில் வாசம் செய்கிறார் என்று எண்ணும்போது, பெரிய சந்தோஷம் நம் உள்ளத்தை நிரப்புகிறது. இரட்சிக்கப்படுவதால் நாம் தேவனுடைய பிள்ளைகளாக, அவரை அப்பா பிதாவே என்று அழைக்கும் புத்திரசுவிகார ஆவியைப் பெற்றுக்கொள்கிறோம். அவர் நமக்குத் தருகிற எல்லா சுதந்திரங்களையும் அனுபவிக்கிறோம். நம்முடைய பெயர் பரலோகத்தில் ஜீவ புஸ்தகத்தில் எழுதப்படுகிறது. கர்த்தர் புதிய ஜீவனைத் தருகிறார். இன்றைய வேத பகுதியில் சகேயுவைக் குறித்து வாசிக்கிறோம். "சகேயுவே , நீ சீக்கிரமாய் இறங்கி வா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்க வேண்டும்" என்று இயேசு சொன்னபோது, சகேயு சீக்கிரமாய் இறங்கி, சந்தோஷத்தோடே இயேசுவை அழைத்துக்கொண்டு போனான். என்று வாசிக்கிறோம் (லூக்கா 19 : 6 ) சகேயுவின் உள்ளத்தில் மாற்றம் உண்டானது. அவருடைய வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது. 

 

பிரியமானவர்களே! இன்றைய நாகரீக, தொழில்நுட்ப உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிற நாம் எங்கெங்கோ சந்தோஷத்தையும், சமாதானத்தையும், நிம்மதியையும் தேடி ஓடிக்கொண்டிருக்கிறோம். இலவசமாய் உங்களுக்கு சந்தோஷத்தையும், சமாதானத்தையும் கொடுக்கக் கூடிய இயேசுவிடம் வாருங்கள். அவர் உங்கள் உள்ளத்தையும், இல்லத்தையும் சந்தோஷத்தினாலும், சமாதானத்தினாலும் நிரப்ப ஆயத்தமாய் இருக்கிறார். அவரிடம் உங்கள் வாழ்வை அர்ப்பணியுங்கள். 

- Mrs. ஜெபக்கனி சேகர்

 

ஜெபக்குறிப்பு:

ஒவ்வொரு மாநிலத்திலும் 500 மிஷனெரிகள் எழும்ப ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864


Comment As:

Comment (0)