Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 12.10.2024

இன்றைய தியானம்(Tamil) 12.10.2024

 

விடுவிக்கும் தேவன்

 

"தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள். அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை விடுவித்தார்" - சங்கீதம் 107:6

 

ஒரு குழந்தைக்கு பசி எடுக்கும் போதோ, ஏதேனும் வலி, பிரச்சினைகளை உணரும் போதோ தன் தாயின் முகத்தை மாத்திரம் பார்த்து அழ ஆரம்பிக்கும். வேறு யாரையும் தேடாது. விளையாட்டுப் பொருளின் மீதும் சிந்தை இருக்காது. தன் தேவைகளைப் பூர்த்தி செய்வது தன் தாய் மட்டுமே. தாயும் குழந்தையின் அழுகையைக் குறிப்பால் உணர்ந்து அதன் தேவையை பூர்த்தி செய்கிறாள். அதைப்போலவே ஆண்டவரால் உருவாக்கப்பட்ட ஜனமாகிய நாமும் நமக்கு துன்பங்கள், பிரச்சனைகள், தேவைகள் வரும்போது கர்த்தரையே நோக்கிப் பார்க்க வேண்டும். 

 

என்னுடைய வாழ்க்கையில் பல பிரச்சனைகள் ஏற்பட்ட போதெல்லாம் கர்த்தரையே நோக்கி கூப்பிட்டேன், அவர் என்னை விடுவித்து, இரட்சித்தார். இரண்டு முறை சாலை விபத்தில் சிக்கி இருக்கிறேன். 2009 -ல் மகளுடன் டூவீலரில் சென்றபோது, அடிபட்டதில் இருவரும் காயம் அடைந்தோம். தண்டுவடத்தின் கீழ் பகுதி எலும்புகளில் அடிபட்டு, உட்கார முடியாமல், நடக்க இயலாமல் ஒன்றரை மாதம் படுக்கையில் இருந்தேன். எழுந்து பணிக்கு திரும்ப முடியுமா? என்ற நிலை இருந்தது. ஆண்டவரிடம் முழு சுகத்திற்காக மன்றாடினேன். மகளும் பூரணமாக குணமடைந்தாள். நானும் எழுந்து பணிக்கு திரும்ப உதவி செய்தார். அடுத்த முறை 2017 ஆம் ஆண்டு பஸ்ஸில் சென்றபோது பஸ் விபத்துக்குள்ளாகி தலை, காலில் அடிபட்டு, இரத்தம் சிந்தியது. மண்டை ஓட்டில் லேசான க்ராக் ஏற்பட்டு 48 மணி நேரம் சென்ற பிறகுதான் சொல்ல முடியும் என்றார் டாக்டர். நான் ஆண்டவரை நோக்கிக் கூப்பிட்டபோது எனக்கு உயிர் திரும்ப கொடுத்தார்.   

 

ஆம், என் வாழ்க்கையில் ஆபத்தில் தேடின போதெல்லாம், தேவனே விடுவித்தார். சங்கீதம் 107-ல் நான்கு விதமான மனிதர்களைப் பார்க்கலாம். முதலாவதாக தாபரிக்கும் ஊரைக் காணாமல், வனாந்தரத்தில் அவாந்தர வழியாய், பசியாகவும், தாகமாகவும், ஆத்துமா தொய்ந்தவர்களாகவும் அலைந்து திரிந்தவர்கள். இரண்டாவதாக அந்தகாரத்திலும், மரணஇருளிலும் வைக்கப்பட்டிருந்து ஒடுக்கத்திலும், இரும்பிலும் கட்டுண்டவர்கள். மூன்றாவதாக தங்கள் பாதகமார்க்கத்தாலும், அக்கிரமங்களாலும், நோய் கொண்டு ஒடுங்கியவர்கள். நான்காவதாக கப்பலேறி, கடல்யாத்திரை பண்ணி, திரளான தண்ணீர்களிலே தொழில் செய்கிறவர்கள். இந்த நான்கு விதமான கூட்டத்தாருக்கும் ஆபத்துகள் ஏற்படுகிறது. அந்த ஆபத்தில் கர்த்தரை நோக்கி கூப்பிட்டார்கள், இக்கட்டில் இருந்து விடுவித்தார். அவர்கள் தேவனை மகிமைப்படுத்தினார்கள்.  

 

அன்பு சகோதர, சகோதரிகளே! ஒவ்வொருவரும் வெவ்வேறு ஆபத்துகளில் தேவைகளில் இருப்பீர்கள். சிலருக்கு திருமணம் ஆகவில்லை, சிலருக்கு திருமண வாழ்வே பிரச்சனை தான். சிலருக்கு குழந்தை இல்லை. சிலருக்கு வேலை வேண்டும் சிலருக்கு சரீரத்திலே கொடிய நோய் என்றெல்லாம் கலங்கி கொண்டிருக்கிறீர்களா? எல்லாருக்கும் ஒரே தீர்வு சங்கீதம் 107:6 தான். நீங்கள் யாவரும் கர்த்தரை நோக்கி கூப்பிடுங்கள். எனக்கு அற்புதம் செய்த ஆண்டவர் உங்களுக்கு செய்ய மாட்டாரா? எபிரேயர் 13: 8 ல் அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார். ஆமென். 

- Mrs. புவனா தனபாலன்

 

ஜெபக்குறிப்பு:  

கிராமங்களை தத்தெடுத்துள்ள பிள்ளைகளின் ஆசீர்வாதத்திற்காக ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864


Comment As:

Comment (0)