Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 30-01.2023

இன்றைய தியானம்(Tamil) 30-01.2023

 

இரண்டு காசு

 

“அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்துப் போட்டார்கள்; இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டு விட்டாள் என்றார்.” - மாற்கு 12:44

 

தேவனுக்குக் கொடுப்பது என்பது மிகச் சிறந்த காரியம். இது தேவன் நமக்கு கற்றுக் கொடுத்த காரியம். அவர் பூமியையும் அதிலுள்ள அனைத்தையும் படைத்து அதையெல்லாம் மனிதன் ஆளுகை செய்யும்படி மகிழ்ச்சியாய் ஒப்படைத்தார். அதிலிருந்து நாம் அவருக்குக் கொடுக்கும் காணிக்கையைக் கண்டு மகிழ்ச்சியடைகிறார். 

 

இன்று நாம் தியானிக்கும் பெண் வயது முதிர்ந்த ஏழை விதவைப் பெண். அன்றைய நாட்களிலே இப்படிப்பட்டவர்களை ஆலயமே பொறுப்பெடுத்து பராமரித்து வந்தது. இந்த ஏழை விதவைப் பெண்ணும் ஆலயம் கொடுக்கும் எளிய பணத்தைக் கொண்டே தன் வாழ்க்கையை நடத்தி வந்தாள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இப்பெண்ணால் போடப்பட்ட காணிக்கை இயேசுவால் கவனிக்கப்பட்டது. அப்பெண் போட்ட இரண்டு காசு என்பது அந்நாட்களில் மிகச்சிறிய தொகையாக இருந்தாலும், அதை மிகுந்த சந்தோஷத்தோடு கொடுத்தாள். தன்னிடமிருந்த அனைத்தையுமே தேவனுக்கு அர்ப்பணித்து விட்டாள். ஏனெனில் தேவன் மீது அவளுக்கு பூரண விசுவாசம் இருந்தது. ஆண்டவர் இதுவரை தன்னை கிருபையாய் போஷித்து வருவதை அனுபவப்பூர்வமாய் அறிந்திருந்தாள்.

 

இயேசு அவள் போட்ட தொகை எவ்வளவு என்பதைப் பார்க்கவில்லை. அவளது உள்ளான மனநிலையைப் பார்த்தார். அநேக ஐசுவரியவான்கள் 

இதைவிட அதிகமாகப் போட்டதையும் இயேசு கவனித்துக்கொண்டிருந்தார். அவர்கள் தங்கள் சம்பூரணத்திலிருந்து கொடுத்தார்கள். ஆனால் இவளோ தன் ஜீவனத்திற்குரியதையே கொடுத்துவிட்டாள் என்று இயேசு கூறினார். தன்னை தாங்கும் ஆலயத்தை அவள் தாங்க விரும்பினாள். எத்தனை சுயநலமற்ற செயல் பார்த்தீர்களா? நம்மிடம் உள்ள மிகச் சிறியவற்றைக் கொண்டு நாம் தேவனை மகிமைப்படுத்த முடியும் என்பதற்கு இத்தாய் ஒரு உதாரணம்!

 

அன்பானவர்களே! இது என்னுடையது, என் வாழ்க்கைக்கு உதவும், என் தேவைக்கு வேண்டுமே! என அவ்விதவை யோசித்திருந்தாலும் அதில் தவறே இல்லை. ஆனால் அவளோ தனக்கு என்று எதையும் வைக்காமல், நாளைக்கு என்ன செய்வோம் என்று யோசனை கூட செய்யாமல், சுயநலமின்றி கொடுத்தாள். அந்த சின்ன காணிக்கை ஆண்டவர் பார்வையில் எவ்வளவு பெரிதாய் காணப்பட்டது. அவருக்கென்று கொடுத்த ஒருவரையும் அவர் தவிக்க விடமாட்டார். தரித்திரராய் ஆகவும் விடமாட்டார். ஏழை விதவைத் தாயே தன்னிடத்திலிருந்ததை ஆண்டவருக்காக கொடுக்கும் போது நாம் ஆண்டவருக்காக நம்மிடத்தில் உள்ளதை நம்மால் இயன்றதைக் கொடுக்கலாமே! எனக்கொரு தாயாரைத் தெரியும். இவர்கள் ஆண்டவருக்கு கொடுக்கும்படி வாஞ்சிப்பார்கள். இவர்கள் கணவருக்கு தெரியாமல்தான் கொடுக்கமுடியும். மருத்துவ செலவுக்கென அவர்கள் கணவர் கொடுக்கும் பணத்தை ஊழியத்திற்கு கொடுத்துவிட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்வார்கள். இதுதான் அவர்களால் இயன்றது.

- K.M. பிரசாத்

 

ஜெபக்குறிப்பு:

புதிதாக கட்டப்பட்டு வரும் மருத்துவமனைக்கு அனுபவமிக்க, அர்ப்பணிப்புள்ள மருத்துவர்கள் கிடைக்க ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864


Comment As:

Comment (0)