Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 16-08-2022

இன்றைய தியானம்(Tamil) 16-08-2022

 

ஒரு வேளை உணவை... 

 

“நீ போஜனப் பிரியனாயிருந்தால், உன் தொண்டையிலே கத்தியை வை” - நீதி.23:2 

 

ஊழியர் பில்லிகிரஹாமிடம் தொலைபேசி மூலம் ஒரு பெண் இவ்வாறு கூறினாள். “இரவும் பகலும் என்னை வாட்டிப் பிழியும் ஒரு பயங்கர காரியம் என்னை அடிமைப்படுத்தியிருக்கிறது. அதிலிருந்து விடுதலை பெறமுடியாமல் நான் தவித்துக்கொண்டிருக்கிறேன். எண்ணிறந்த தடவைகள் நான் வருந்தி முயன்றும் எனக்கு இதன் மீது வெற்றி கிடைக்கவில்லை. இவ்வாறு என்னை ஆட்கொண்டிருக்கும் காரியம் பெருந்தீனியே. இதிலிருந்து நான் விடுதலை அடைய வழியுண்டா?“ என்றாள். அதற்கு பில்லிகிரஹாம், இதற்கும் ஒரே வழி இறைவனாகிய இயேசு இரட்சகரே! வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே, நீங்களெல்லாரும் என்னிடத்தில் வாருங்கள் என்று சொன்ன இயேசுவே உங்களை விடுதலை செய்ய முடியும் என்றார்.  

 

இந்த பெருந்தீனி குறித்து பில்லிகிரஹாம் கூறிய காரியங்களைக் காண்போமா? உலகில் எண்ணிறந்த மக்கள் பட்டினியால் செத்துக்கொண்டிருக்கும்போது நாம் மட்டும் உணவை நிதானத்தோடு பயன்படுத்தாமல், மிதமிஞ்சி சாப்பிட்டு நம் உடலையும் பிறரையும் சாகடித்துக்கொண்டிருப்பது நியாயமா? மற்றவர்கள் பசி பிணியால் வாடுவதைக் குறித்து சிறிதும் அக்கறை இன்றி சுகபோகமாய் வாழ்பவர்களைக் குறித்து வேதம் கூறுவதென்ன? ஒருவன் இவ்வுலக ஆஸ்தி உடையவனாயிருந்து தன் சகோதரனுக்குக் குறைச்சலுண்டென்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால் அவனுக்குள் தேவஅன்பு நிலை கொள்ளுகிறதெப்படி? (1யோவான் 3:17).

 

இந்நாட்களில் பட்டினி சாவுகளை விட பெருந்தீனி சாவுகளே அதிகம். தற்கால உலகில் தலைவிரித்தாடும் பெரும்பாலான பயங்கர நோய்களுக்குக் காரணம் பெருந்தீனியே. பெருந்தீனி மனிதனைக் கொன்றுவிடும். இதைக் குறித்து வேதம், “பெருந்தீனிக்காரருடைய முடிவு அழிவு, அவர்களுடைய தேவன் வயிறு“ என்று கூறுகிறது. நம்மில் அநேகர் பெருந்தீனியை ஒரு பாவமாக கருதுகிறதில்லை. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் என்பதை அவர்கள் சிந்திப்பதில்லை. கிறிஸ்தவர்களிடையே உலாவும் பெருந்தீனியைத் தடுப்பதற்குத் தேசத்தில் சட்டமில்லையானாலும், அதை எதிர்த்து எச்சரிப்பதற்கு சத்திய வேதாகமத்திலே வசனங்கள் உண்டு. 

 

பிரியமானவர்களே! தேவன் நமக்குத் தரும் ஆகாரத்தை ஸ்தோத்திரம் பண்ணி ரசித்து தேவையான அளவு சாப்பிட்டு, பெலன் கொண்டு ஆரோக்கியமாய் வாழ்வோம். உணவு உண்ணும்பொழுதெல்லாம் நம்மைச் சுற்றி பட்டினியால் வாடிக் கொண்டிருக்கும் மக்களையும் நினைத்துக்கொள்ளுங்கள். சமயம் கிடைக்கும் பொழுதெல்லாம் அவர்களுக்கு உதவுங்கள். நாம் அதிகம் உண்ணும் உணவை மாத்திரம் மற்றவர்களுக்குப் பகிர்ந்தளிப்போமானால் அதுவே நம் மனதிற்கு சந்தோஷமும் ஏதோ நாமும் நல்லது செய்கிறோம் என்ற எண்ணமும் உண்டாகும். இந்த எண்ணமே வரும் நாட்களில் பெரும் உதவிக்கரங்களாய் மாறும். பசியோடிருக்கும் நம் சமுதாயத்தைப் பசியாற்றுவோம். அல்லேலூயா!.

- T.சாமுவேல்

 

ஜெபக்குறிப்பு:

“இராக்லாந்து மிஷனெரி பயிற்சி மையம்” பிரதிஷ்டை ஆராதனையை கர்த்தர் ஆசீர்வதித்துத் தர ஜெபியுங்கள். 

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250


Comment As:

Comment (0)