Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 12-08-2022

இன்றைய தியானம்(Tamil) 12-08-2022

 

வெட்கம் 

 

“தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கும் அவன் மனைவிக்கும் தோல் உடைகளை உண்டாக்கி அவர்களுக்கு உடுத்தினார்.” – ஆதி. 3:21

 

சாலையோரங்களில் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் சரியான உடையணியாமல் செல்கிறதைப் பார்த்திருக்கிறோம். இரக்கப்பட்டு சிலர் உடைகளைக் கொடுத்தாலும் அதை அவர்கள் அணிவதில்லை. அணிய வேண்டுமென்ற எண்ணமும் தோன்றுவதில்லை. இப்படிப்பட்டவர்களுக்காக நாம் கண்ணீரோடு ஜெபிப்போம். ஒரு மனிதனின் சீரான ஆடை அலங்காரம் அவனது சரியான மனநிலையைக் காட்டுகிறது. ஆகவே வெட்கம் என்னும் ஒரு அம்சம் ஆரோக்கியமுள்ள ஒரு மனநிலையின் வெளிப்பாடு.

 

இப்பொழுது நம் பார்வையை வேறு பகுதிக்கு திருப்புவோம். தொலைக்காட்சி செய்திகளில் சில நேரங்களில் குற்றமிழைத்த கைதிகளை பார்த்திருக்கிறோம். இவர்களை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும்போது நடந்துகொள்ளும் விதத்தைக் கொண்டு அவர்களை இருவகையாகப் பிரிக்கலாம். முதல் வகையினர் டி.வி. கேமராவைப் பார்த்தவுடன் தங்கள் முகத்தை கைக்குட்டையைக் கொண்டோ, சட்டையைக் கொண்டோ மூடுவர். இன்னொரு வகையினர் கேமராவை பார்த்தவுடன் தாங்கள் ஏதோ ஒன்றை மனுக்குலத்திற்காக சாதித்தது போல புன்முறுவலோடு கையசைப்பர். இவ்விரு வகையினருக்கிடையே கடலளவு வித்தியாசம் உண்டு. முதல் வகையினர் தாங்கள் செய்தது தவறென்று உணர்ந்து அதினிமித்தம் வெட்கப்பட்டு முகத்தை மறைக்கின்றனர். இவர்கள் நல்வழி செல்ல வாய்ப்புண்டு. இரண்டாம் வகையினர் தாங்கள் செய்த குற்றத்தினிமித்தம் வெட்கமடையவில்லை. “இவ்வகை குற்றவாளிகள் நிறைந்த சமுதாயம் பரிதாபத்திற்குரியது” என்று Deliver us from Evil என்ற புத்தகத்தின் ஆக்கியோன் குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும் இன்றைய சினிமா, டி.வி. மட்டுமல்ல சமுதாயத்திலும் உடல் அவயங்கள் தெரியும்படி ஆடையணிவது நாகரீகம் என்று கருதப்படுகின்றது. கொஞ்சம் யோசித்துப்பார்த்தால் மனநிலை பாதிக்கப்பட்ட அரை நிர்வாணிகளுக்கும் இவர்களுக்கும் என்ன பெரிய வித்தியாசம் இருக்கிறது? நம்மைச் சுற்றியுள்ள வெட்கமற்ற சமுதாயம் இரட்சிப்பின் ஆடையைக் கண்டுகொள்ள ஜெபிப்போம்.

- J.சந்தோஷ் 

 

ஜெபக்குறிப்பு:

எழுப்புதல் விரும்புவோர் முகாமில் பங்குபெற்ற ஒவ்வொரு தேவபிள்ளைகளும் வைராக்கியமாய் எழும்பிப் பிரகாசிக்க ஜெபியுங்கள்.

 

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250


Comment As:

Comment (0)