Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 04-08-2022

இன்றைய தியானம்(Tamil) 04-08-2022

 

வெறுப்பு

 

“சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும்... மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களை விட்டு நீங்கக்கடவது” – எபேசியர் 4:31

 

ஜிம்மி புக்நெர் 16 வயது நிரம்பிய சுவீடன் நாட்டு இளைஞன். பள்ளியில் படித்துக்கொண்டிருந்த அவன், நண்பர்களின்றி தனிமையில் காணப்பட்டான். அவனுடன் படித்த கருப்பு இன மாணவர்களில் சிலர் இவனை கேலியும் கிண்டலும் செய்து கீழே தள்ளிவிட்டு வேடிக்கையாக்கினர். அது அநேக முறை நிகழ்ந்தது. ஆரம்பத்தில் இவர்களை மட்டும் வெறுத்த ஜிம்மி நாளடைவில் பள்ளியிலுள்ள கருப்பு இன மாணவர்கள் அனைவரையுமே வெறுக்கத் தொடங்கினான். பின் அவர்கள் வாழும் தேசத்தின் மீதே வெறித்தன வெறுப்பு வந்தது.

 

நாளடைவில் “National Socialist Front” என்னும் வெள்ளையனே உயர்ந்தவர்கள் என்ற கூட்டத்தில் ஜிம்மி இணைந்தான். இவ்வியக்கத்தாரின் நோக்கம் என்னவென்றால், சுவீடன் தேசத்திலுள்ள சரியாகப் படிக்காத, வேலை வாய்ப்பில்லாத இளைஞர்களை இணைத்து உங்களின் பரிதாப நிலைக்குக் காரணம் பிற நாடுகளிருந்து வேலைக்கு வந்தவர்களே என்பர். இவர்கள் தங்கள் நாட்டவரைத் தவிர மற்றவர்களைக் கண்டால் அடிப்பது, பயமுறுத்துவது போன்ற கடுமையான காரியங்களில் ஈடுபடுவர். ஹிட்லர் போன்றவர்கள் எழுதிய நாசிசக் கொள்கைகள் அடங்கிய புத்தகங்களே இவர்களுக்குப் பிரியம்.

 

ஒருமுறை இவ்வியக்கத்தார் ஆசியாவிலிருந்து வந்த ஒரு நபரை அடித்து துன்புறுத்தியதை அறிந்த காவல் துறையினர் ஜிம்மியுடன் சிலரையும் கைது செய்தனர். இதில் அவமானமடைந்ததால் ஜிம்மி தன்னை இக்கூட்டத்திலிருந்து விடுவித்துக் கொண்டான். இச்சம்பவம் Readers Digest என்ற பத்திரிகை ஒன்றில் வெளியானது.

 

மேற்கண்ட சம்பவத்தில் ஒரு சிலர் மீது ஏற்பட்ட வெறுப்பு அந்த இனமக்களின் மீது ஏன் அந்த தேசத்தையே வெறுக்குமளவிற்கு கசப்பாய் வேரூன்றிவிட்டது. இப்படி மனிதர்கள் ஒருவரையொருவர் விரோதித்து அழிப்பதும் பிசாசானவனின் தந்திரமே.

 

பிரியமானவர்களே! ஒரு குறிப்பிட்ட ஊரிலிருந்து மணப்பெண்ணாக வந்த பெண்ணின் சரியில்லாத குணநலன்களால் அவ்வூர் பெண்களே திமிர்பிடித்தவர்கள், அங்கு பெண்ணே எடுக்கக்கூடாது என்று சிலர் கூறுவர். அந்நிய பாஷை பேசும் ஒருவர் செய்த தவறினால் அந்நிய பாஷை பேசுபவர்களே அயோக்கியர்கள் என்பர் சிலர். ஒரு குறிப்பிட்ட மிஷனெரி ஸ்தாபனத்தில் ஒரு ஊழியர் சரியில்லையென்பதால் நூற்றுக்கணக்கான மிஷனெரிகள் அடங்கிய அந்த ஸ்தாபனமே சரியில்லை என்பர் இப்படிப்பட்ட கணக்கீடு முற்றிலும் தவறானதே. எதையும் சிந்தித்து, நிதானமாய் முடிவெடுப்பதே நல்லது. இப்படிப்பட்ட கசப்புணர்வு யாதொரு நபர்மீதோ, கூட்டத்தின் மீதோ வராதபடிக்கு நம்மைக் காத்துக்கொள்வோம் . இது நம் சமுதாயத்தையே சீரழித்துவிடும் ஆகவே சகலத்தையும் நிதானியுங்கள்.

- J.சந்தோஷ்

 

ஜெபக்குறிப்பு:

வீடுகள் தோறும் நடைபெறுகின்ற ஜெபக்குழுக்களில் பங்குபெறுகிற ஒவ்வொருவரும் தேவ ஆவியினால் நிரப்பப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250


Comment As:

Comment (0)