Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 11-07-2022

இன்றைய தியானம்(Tamil) 11-07-2022

 

கண்மணியே கேள் 

 

“ஆலோசனையினால் எண்ணங்கள் ஸ்திரப்படும்; நல்யோசனை செய்து யுத்தம்பண்ணு.” – நீதிமொழிகள் 20:18

 

முதியவர் ஒருவர் பலமாடி கட்டிடம் ஒன்றில் உள்ள அலுவலகத்தில் வேலை பார்க்கும் தன் மகனைப் பார்க்க வந்தார். எதிர்பாராத விதமாக அன்று லிப்ட் வேலை செய்யாத காரணத்தினால் மிகவும் கஷ்டப்பட்டு மனதில் மகனைப் பார்க்கும் ஆசையோடு, கையில் சுமையோடு மாடிப்படியில் ஏறத் தொடங்கினார். 3 வது மாடிக்கு ஏறி வந்தவுடன் மூச்சு வாங்கினபடி நின்றார். அதைப் பார்த்து அங்கு வந்த வாலிபன் ஒருவன் ஐயோ! கையில் பையோடு எப்படி வயதான இவர் இறங்க முடியும் என்று நினைத்து சட்டென்று பையை வாங்கிக்கொண்டு வேகமாக கீழே இறங்கி சென்றான். பெரியவர் எவ்வளவோ கூப்பிட்டும் நிற்காமல் கீழே கொண்டு போய் பையை வைத்துவிட்டு, என்னால் முடிந்த உதவியை பெரியவருக்கு செய்தேன் என்று தன்னைத்தானே மெச்சிக் கொண்டு சென்று விட்டான். கீழே வந்த பெரியவரோ நொந்துபோய் மீண்டும் பையை தூக்கிக் கொண்டு மேலே ஏறத் தொடங்கினார். மூச்சிரைக்க 2வது மாடி வந்தவர் சற்று நிற்க, அப்பொழுது அங்கு வந்த வாலிபப் பெண் ஒருத்தி, “ஐயா! என்னால் முடிந்த உதவியை நான் உங்களுக்கு செய்கிறேன்” என்று சொல்லி பையை வாங்கிக்கொண்டு கீழே இறங்கத் துவங்கினாள். பெரியவர் தன் நிலைமையை சொல்லியும் அவள் அதை புரிந்து கொள்ளாமல் கீழே கொண்டு போய் பையை வைத்துவிட்டு சென்றுவிட்டாள். பக்குவமில்லாதவர்களின் செயலை எண்ணி, என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தவர் மேற்கொண்டு செல்ல மனதில்லாமல் நின்றுவிட்டார். இதற்கு காரணம் என்ன? ஒரு காரியத்தை சரியாக விளங்கிக் கொள்ள முடியாததின் விளைவு இதுதான். 

 

1 இராஜாக்கள் 12ல் அதுவரை தாவீதும், சாலொமோனும், அரசாண்ட ஒன்றாய் இருந்த இஸ்ரவேல் ராஜ்யம் இரண்டாய் பிரிந்த சம்பவம் கூறப்பட்டுள்ளது. காரணம் என்ன? அனுபவமிக்கவர்களின் ஆலோசனையைத் தள்ளிவிட்டு தன் வயது நண்பர்களுடைய ஆலோசனையைக் கேட்டு முதிர்ச்சியில்லாத அவர்கள் சொன்னபடி “என் தகப்பன் உங்கள் நுகத்தை பாரமாக்கினார். நான் உங்கள் நுகத்தை அதிக பாரமாக்குவேன். என் தகப்பன் உங்களைச் சவுக்குகளினாலே தண்டித்தார். நான் உங்களைத் தேள்களினாலே தண்டிப்பேன்” என்று ஜனங்களுக்குக் கடினமான உத்தரவு கொடுத்தான். இதனால் ஒரு பிரிவினர் யெரொபெயாமைத் தங்கள் ராஜாவாக தேர்ந்தெடுத்ததினால் இஸ்ரவேல் தேசம் யூதா, இஸ்ரவேல் என்று இரண்டாகப் பிளவுபட்டது.

 

அன்பு வாலிபப்பிள்ளைகளே, உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கடந்து செல்கிற சூழ்நிலைகளில், பிரச்சனைகளில் யாருடைய ஆலோசனையைக் கேட்டு நடக்கிறீர்கள். அனுபவமில்லாத, முதிர்ச்சியில்லாதவர்களிடம் ஆலோசனையைக் கேட்டால் அவர்கள் தங்கள் மனதிற்கு சரியென்று தோன்றியதைக் கூறி உங்களை சிக்கலில் மாட்டி விடுவார்கள். ஆலோசனை இல்லாத இடத்தில் ஜனங்கள் சீர்கெட்டுப் போவார்கள் என்று வேதம் சொல்லுகிறது. தாவீது தனக்கு ஆலோசனை தந்த கர்த்தரைத் துதிப்பேன் என்று கூறுகிறார். எந்த ஒரு காரியத்திலும் “நான் உனக்குப் போதித்து நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்” என்று சொன்ன கர்த்தரிடம் முதலாவது ஆலோசனை கேட்க வேண்டும். பின்னர் உன்னை நல்வழிப்படுத்துகிற ஆவிக்குரிய பெரியோர்களிடம் ஆலோசனை கேட்டு அதன்படி நடக்க முயற்சிக்க வேண்டும். அவ்வாறு செய்யும் போது உன் வாழ்க்கை ஸ்திரப்பட்டு சபைக்கும் சமுதாயத்திற்கும் நீ ஆசீர்வாதமாகக் காணப்படுவாய்.

- Mrs. வசந்தி ராஜமோகன்

 

ஜெபக்குறிப்பு:

ஒரு மிஷனெரி அறை கட்ட தேவைப்படும் ரூ.2 இலட்சம் சந்திக்கப்பட. மிஷனெரிகளை தாங்குகிற மிஷனெரிப் பங்காளர்கள் எழும்ப ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250


Comment As:

Comment (0)