By Village Missionary Movement
Wednesday, 21-Apr-2021இன்றைய தியானம்(Tamil) 21-04-2021
தேவனை நம்புங்கள்
“கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களே, கர்த்தரை நம்புங்கள்;…” - சங்கீதம் 115:11
உலகப்பிரசித்தி பெற்ற D.L . மூடி பிரசங்கியார் ஒருமுறை ஓய்வுநாள் பள்ளியில் வேதபாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். திடீரென்று தனது கையில் கட்டியிருந்த தங்க கடிகாரத்தை கழற்றி “இது யாருக்கு வேண்டும்” என கேட்டார். எல்லா மாணவர்களுக்கும் சந்தேகம். யாராவது தங்க கடிகாரத்தை இலவசமாக தருவார்களா? என்று ஒரு மாணவன் கூட அதை பெற்றுக்கொள்ள முன்வரவில்லை. தமாஷீக்குத்தான் கேட்கிறார் என்று நினைத்தனர். கடைசியில் ஒரு ஆறு வயது சிறுவன் எழுந்து வந்து அதைப் பெற்றுக்கொண்டான். மூடி பிரசங்கியார், “இந்த கடிகாரம் எனக்கு எப்படி பிரயோஜனமாக இருந்ததோ அதேப்போன்று உனக்கும் பிரயோஜனமாக இருக்கட்டும்” என்று அவனை வாழ்த்தி அதைக் கொடுத்தார். இதை பார்த்த மற்ற மாணவர்களுக்கு ஒரு ஆச்சரியம். அவர்கள் பிரசங்கியாரை நோக்கி “நீங்கள் இதை உண்மையிலே அவனுக்குக் கொடுத்துவிட்டீர்களா?” என்று கேட்டனர். அதற்கு அவர், “ஆம், அது அவனுக்குத்தான். ஏனெனில் அவன் நான் சொன்னதை நம்பினான். இப்போது அந்த கடிகாரம் அவனுடையது” என்று கூறினார். அவன் அந்த கடிகாரத்தை மற்ற மாணவர்களிடம் காட்டி மகிழ்ந்தான்.
இப்படி வேதத்திலே ஆண்டவர் சொன்னதை சிறுபிள்ளையைப் போன்று நம்பினவர்கள் உண்டு. உலகத்தை தேவன் ஜலத்தினால் அழிப்பேன் என்று எச்சரித்தார், அதை யாரும் நம்பாத போது நோவா அதை நம்பினார். அதனால் நோவாவும், அவனுடைய குடும்பமும் காப்பாற்றப்பட்டது. தேவன் ஆபிரகாமிடம் உன் சந்ததி இவ்வளவாயிருக்கும் என்று சொல்லியபடியே, தான் அநேக ஜாதிகளுக்கு தகப்பனாவதை நம்புகிறதற்கு ஏதுவில்லாதிருந்தும் அதை நம்பிக்கையோடே விசுவாசித்தான். அது அவருக்கு நீதியாக எண்ணப்பட்டது. தேவன் கொடுத்த வாக்குத்தத்தங்களை ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்ற நம் முற்பிதாக்கள் நம்பினார்கள். அதினிமித்தம் ஆசீர்வாதத்தை சுதந்தரித்துக் கொண்டார்கள்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! ஒவ்வொரு நாளும் ஆண்டவர் உங்களோடும் பேசிக்கொண்டேயிருக்கிறார். வாக்குத்தத்தங்களை கொடுத்துக்கொண்டேயிருக்கிறார். நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதிப்பேன். நான் உன்னில் மகிமைப்படுவேன். கடைசி கால எழுப்புதலில் உன்னை பயன்படுத்தப்போகிறேன், உன்னைக் கொண்டு பாவக்கட்டில், வியாதியில், பிசாசின் பிடியில் உள்ளவர்களை விடுதலையாக்க போகிறேன் என பேசிக்கொண்டே இருக்கிறார். நீங்கள் அவருடைய வார்த்தையை அப்படியே நம்பும் போது உங்களை கொண்டு பெரிய காரியங்களை செய்வார். உங்களைக் கொண்டு அவர் செய்யும் காரியம் பயங்கரமாய் இருக்கும் என்று தேவன் சொல்லுகிறார். ஆபிரகாம் போல விசுவாசியுங்கள். நிச்சயம் தேவன் சொன்ன வார்த்தைகள் அப்படியே உங்கள் வாழ்வில் நிறைவேறுவதைக் காண்பீர்கள்.
- Mrs. சூசன்னாள் மேத்யூ
ஜெபக்குறிப்பு:
மோட்சப்பயணம் தியான இதழுக்கு எழுதிக்கொடுக்கும் தேவ பிள்ளைகளை தேவன் வல்லமையாய் எடுத்து பயன்படுத்த ஜெபியுங்கள்.
இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app:
தமிழில் பெற - +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250