By Village Missionary Movement
Tuesday, 20-Apr-2021இன்றைய தியானம்(Tamil) 20-04-2021
நீ யாருக்காக வாழ்கிறாய்?
“மேலும் காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு,… அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது.” – 2 கொரிந்தியர் 4:17
இரட்சண்ய சேனை சபையின் ஸ்தாபகர் சகோ. வில்லியம் பூத் அவர்கள் எழுதிய ஒரு செய்தியில் தான் கண்ட ஒரு கனவை பற்றி எழுதியிருக்கிறார். அக்கனவில் தன்னை ஒரு சாதாரண விசுவாசியாகவே கண்டார். அதில் தான் மரித்து பரலோகத்தில் நுழைவதை போன்ற காட்சிகளையும் கண்டார். அங்கே பரலோகத்தில் வில்லியம் பூத் ஜீவ புஸ்தகத்தை கண்டார். அந்த ஜீவ புஸ்தகத்தின் பதிவேட்டில் “மன்னிக்கப்பட்டான்” என்ற வார்த்தை மட்டும் பெரிதாக எழுதப்பட்டிருப்பதை கண்டார். முதலில் அவர் தான் மன்னிக்கப்பட்டு இப்போது பரலோகத்தில் இருப்பதாக பேரானந்தம் கொண்டார்.
ஆனால் பரலோகத்தில் வேறொரு விசுவாசிகளின் குழுவையும் கண்டார். அவர்களோ சொல்லி முடியாத விசேஷித்த மகிமை கொண்டவர்களாய் இருந்தார்கள். யார் இவர்கள்? இந்த பூமியில் தங்கள் சொந்த ஜீவனை அருமையாய் எண்ணாதவர்கள், இவர்களின் சொல்லி முடியாத மகிமையை கண்ணுற்ற பூத் அவர்களின் மீது பொறாமை கொண்டார். இயேசு அருகில் வந்து, “பூத் நீ காணும் இந்த சொல்லி முடியாத மகிமையில் ஜொலிக்கும் இந்த ஜனங்களோடு ஒன்றாய் சேர்ந்து கொள்வதற்கு உன்னால் ஒரு போதும் முடியாது. ஏன் தெரியுமா? நீ இந்த மகிமையான ஜனங்கள் போல் அல்லாமல் இந்த பூமியில் உனக்காகவே ஒரு வாழ்க்கையை வாழ்ந்தாய்” என மனம் வருந்தி கூறினார். வில்லியம் பூத் விழித்து கொண்டார். அப்போது தான் இன்னமும் உயிரோடிருப்பதையும், தான் கண்டது கனவு என்றும் அறிந்தார். அன்றிலிருந்து எஞ்சியுள்ள தன் முழு வாழ்வையும் சுயநலமின்றி தன் ஆண்டவருக்கே வாழ்ந்து விட தீர்மானம் எடுத்தார்.
நம்மில் அநேகர் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டுள்ளோம், இரட்சிக்கப்பட்டுள்ளோம், அபிஷேகம் பெற்றுள்ளோம், ஆலயத்திற்கு செல்கிறோம், காணிக்கை கொடுக்கிறோம், பரலோகம் சென்று விடுவோம் என்ற நிச்சயமும் உண்டு. அவற்றையும் தாண்டி ஒரு கருகலான கிறிஸ்தவ சத்தியம் உண்டு. அது என்ன? “ஒருவன் என் பின்னே வர விரும்பினால் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக் கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்” என்பதே. கிறிஸ்து எனக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று சொல்லியும் இன்னும் சுயத்தை சார்ந்தவர்களாகவும் நம்மை வெறுக்காதவர்களாகவும் காணப்படுகிறோம் என்பதே பொருள்.
பிரியமானவர்களே! நமது இருதயத்தில் இம்மைக்குரிய ஆசீர்வாதங்களைத் தாண்டி கிறிஸ்துவின் சிந்தை உண்டா? நமக்காகவே நாம் வாழ்ந்தது போதும், சுயநலமின்றி கிறிஸ்துவின் சிந்தையோடு வாழ்வோம். அந்த சொல்லி முடியாத மகிமையுள்ள கூட்டத்தாரோடு நாமும் காணப்பட பிரயாசப்படுவோம். ஒரே ஒரு வாழ்வு அதை நமக்காகவே வாழ்ந்து, நாம் சம்பாதிப்பதை நாமே அனுபவித்து பிறரது மதிப்பையும் பாராட்டையும் பெற்று வாழ்ந்த வாழ்வைவிட்டு, தியாகத்தோடு கிறிஸ்துவின் சிந்தை நிறைந்த வாழ்வை வாழ்ந்து முடிப்போம். ஆமென் அல்லேலூயா!
- Mrs. சசிகலா பரமசிவம்
ஜெபக்குறிப்பு:
தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா ஆகிய 7 மொழிகளில் வெளிவரும் நமது தியான செய்தி மூலம் அநேகர் உயிர்ப்பிக்கப்பட ஜெபியுங்கள்.
இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app:
தமிழில் பெற - +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250