By Village Missionary Movement
Monday, 03-Jun-2024இன்றைய தியானம்(Tamil) 03.06.2024
நேர்மை
"கர்த்தருக்கு முன்பாக மாத்திரமல்ல, மனுஷருக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுகிறோம்" - 2 கொரி.8:21
ரேவொயிட் என்பவர் கோல்ப் விளையாட்டில் மிகச்சிறந்த வீரராவார். இவர் ஒருமுறை கோல்ப் விளையாட்டில் பந்தை அடிக்க ஆயத்தமானபோது பந்து சற்று அசைவதைக் கண்டார். போட்டி விதிகளின்படி பந்து நகர்ந்தால் விளையாட்டு வீரர் தண்டமாக ஒரு அடியை (Stroke) விட்டுக்கொடுக்கவேண்டும். ரேவொயிட் அப்போட்டியில் பங்குபெற்ற முன்னணி வீரர்களில் ஒருவர். அப்போட்டியின் பரிசுத்தொகை 1,08,000 டாலர்கள் ஆகும்.
டேவிட் கொலாகன் என்னும் விமர்சகர் கோல்ப் வீரர்கள் அச்சந்தர்ப்பத்திலிருந்து தப்பிக்க என்னவெல்லாம் செய்வார்கள் எனக் கூறும்போது, "ஒரு விஷக்குழவி தன்னை கொட்டவருவதைப் போல் வீரர்கள் தன் தலையை குனிந்து கைகளை அங்குமிங்குமாக உதறுவார்கள். அல்லது பந்தை விட்டு சற்று அப்பால் போய், கண்களில் தூசி விழுந்ததைப் போல் கண்களை கசக்கிக்கொண்டு, அதேவேளை யாராவது பந்து அசைவதைக் கவனித்தார்களா? என மெதுவாக கண்ணோட்டமிடுவர். ஒருவரும் கவனிக்கவில்லையென்றால் மீண்டும் வந்து பந்தை அடிப்பார்கள்." ஆனால் ரேவொயிட் அப்படிச் செய்யவில்லை. மாறாக தனது ஒரு ஸ்ட்ரோக்கை விட்டுக்கொடுத்து அடுத்த நகர்வுக்கு சென்றார். எல்லோருடைய கண்களையும் ஏமாற்றி உண்மைக்கு மாறாக இவர் செயல்பட்டிருக்க வாய்ப்புகள் இருந்தன. ஆனாலும் நேர்மையை பின்பற்றுகிற ரேவொயிட் தவறுக்கு துணை போகவில்லை. வேதாகமத்தில் தாவீது ராஜா சங்கீதத்தில் கூறும் அழகான வார்த்தையைக் கவனியுங்கள். "அவர் முன்பாக நான் மனவுண்மையாயிருந்து, என் துர்க்குணத்துக்கு என்னை விலக்கிக் காத்துக்கொண்டேன்" (சங். 18:23) என்கிறார். இந்த "மனவுண்மை" என்பது தேவன் என்னைப் பார்க்கிறார் என்ற நிச்சயத்தை உடையவர்களிடம் அதிகம் காணப்படும். மனவுண்மை என்ற சுபாவம் இல்லாதவர்களிடம் நேர்மையை எதிர்பார்ப்பதும் வீணான ஒன்றாகும்.
இன்றைய வேதப்பகுதியில் யோபு தன் நேர்மையைப் பற்றி விளக்கமாக கூறுகிறதை வாசிக்க முடிகிறது. யோபை பற்றி ஆண்டவர் சாட்சி கொடுக்கும்போது, "அவன் உத்தமனும், சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனும்" எனக் கூறுகிறார். இதை வாசிக்கின்ற நம்மைப் பற்றி ஆண்டவர் என்ன சாட்சி கொடுப்பார் என்பதை நாம் ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். உத்தமமும் நேர்மையும் என்னைக் காக்கக்கடவது என தாவீது ஜெபிக்கிறார். இதைப்போன்றதொரு ஜெபம் செய்ய நம்மில் எத்தனைபேர் ஆயத்தமாய் இருக்கிறோம். நேர்மையை நேசிப்போம். இதற்காக பிரயாசப்படுவோம். கர்த்தர் நம்மை வழி நடத்துவார்.
- P. ஜேக்கப் சங்கர்
ஜெபக்குறிப்பு:
VBS ஊழியங்கள் மூலம் சந்திக்கப்பட்ட சிறுவர்கள் கர்த்தருக்குள் நிலைத்திருக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864