By Village Missionary Movement
Saturday, 01-Jun-2024இன்றைய தியானம்(Tamil) 01.06.2024
பரிந்து பேசு
"…தேவரீர் அவர்கள் பாவத்தை மன்னித்தருளுவீரானால் மன்னித்தருளும்; இல்லாவிட்டால் நீர் எழுதின உம்முடைய புஸ்தகத்திலிருந்து என் பேரைக் கிறுக்கிப் போடும் என்றான்" - யாத்திராகமம் 32:32
நிலத்தை நன்கு பண்படுத்தி விதைத்து, நீர்பாய்ச்சி, பக்குவமாய் மரங்களை வளர்த்தார் ஒரு எஜமான். அதற்கென்று ஒரு வேலைக்காரனை நியமித்தார். ஒரு குறிப்பிட்ட மரத்திலே கனிக்காகக் காத்திருந்தார். ஆனால் கனி இல்லை. கனியை எதிர்பார்த்த எஜமான் மனம் நொந்தார். பின்னும் காத்திருந்து கனி இல்லாததினால் கோபமடைந்து மரத்தை வெட்டிப் போடச் சொல்கிறார். அப்போது பணிவான குரலில் இந்த வருஷம் இருக்கட்டும். சுற்றி கொத்தி எருபோடுவேன் என்று கூறுகிறார் வேலைக்காரன்.
எஜமான் வெட்டச் சொன்னதும் வேலைக்காரன் பரிந்து பேசுகிறான். இந்தப் பகுதி என் மனதை உடைத்தது. இன்றும் மக்கள் அழிவை நோக்கிச் செல்கின்றனர். அவர்களுக்காக பரிந்து பேசி ஜெபிப்பவர்கள் யார்? இன்று அநேகர் தங்களுக்காகவும் தங்கள் குடும்பங்களுக்காகவும் ஜெபிக்கின்றனர். தன் ஜனத்திற்காக, தேசத்து மக்களுக்காக ஜெபிப்போர் குறைந்து விட்டனர். நெகேமியா தன் ஜனத்தின் நிலையறிந்து ஜெபித்தார். அவரைக் கொண்டே தேவன் அலங்கத்தைக் கட்டச் செய்தார். எஸ்தர் தன் ஜனத்தின் மீட்புக்காக ஜெபித்தாள். தேவன் எஸ்தரைக் கொண்டே தேசத்தை மீட்டெடுத்தார். பேதுருவின் சிறையிருப்பு மாற சபையார் கூடி ஜெபித்தார்கள். அப்பொழுதே பேதுருவின் விடுதலையை அவர்கள் காணும்படி செய்தார். நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள். இது நமக்காக ஜெபிப்பதற்கு மட்டுமல்ல பிறருக்காக ஜெபிப்பதற்காகவும் தான். தன் வேலைக்காரனுக்காக விசுவாசத்தோடு வந்த நூற்றுக்கதிபதியின் விசுவாசத்தைப் பாராட்டினார். திமிர்வாதக்காரனை அழைத்து வந்த நான்கு பேரின் விசுவாசத்தைக் கண்டு திமிர்வாதக்காரனுக்கு சுகம் கொடுத்தார். இப்படியாய் பாவ, சாப கட்டுகளில் இருப்பர்வர்களை அவரண்டை அழைத்து வரக்கூடிய விசுவாசிகள் இன்று தேவை. இந்நாட்களிலே, சுயநலமாய் ஜெபிக்கிறவர்கள் பெருகிவிட்டனர்.
என்னைக் கேளும், அப்பொழுது ஜாதிகளை உமக்குச் சுதந்தரமாகவும், பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன்; (சங்கீதம் 2:8) என்று தேவன் சொல்கிறார். அவரிடம் கேட்கும் மக்கள் தேவை, நம்முடைய விசுவாசம் உலகத்தை ஜெயிக்கிற ஜெயம் எனவும் வேதம் கூறுகிறது. விசுவாசிகள் என்றால் உலகத்தில் உள்ளவர்களுக்காக ஜெபிக்க மறவாதீர்கள். தேசத்தின் ஜனங்களை அழிவிலிருந்து மீட்டுக் கொண்டு வரக்கூடிய, பரிந்து பேசி எஜமானனிடம் வேண்டிக் கொள்ளுகிறவர்கள் தேவை. நீங்கள் அப்படி ஜெபிக்க இன்று உங்களை ஒப்புக் கொடுங்கள். அப்படி ஜெபக்குறிப்புகளைச் சொல்லி ஜெபிக்கத் தெரியாது என்றால் எங்களைத் தொடர்பு கொண்டால் நாங்கள் பரிந்து பேசி ஜெபிக்கும் மிஷனெரிகளுக்கான ஜெபக்குறிப்புகளைத் தினமும் அனுப்பி வைப்போம். இணைந்து ஜெபிப்போம்! ஜெயம் பெறுவோம்!!
- K. டேவிட் கணேசன்
ஜெபக்குறிப்பு:
இம்மாதத்தில் நடைபெறும் நமது ஊழியங்களுக்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864