Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 22.05.2024
Share:

By Village Missionary Movement

Wednesday, 22-May-2024

இன்றைய தியானம்(Tamil) 22.05.2024

 

கவனமாயிரு

 

"…நீ கர்த்தரிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றும்படி கவனமாயிருப்பாயாகவென்று சொல்லுங்கள்" - கொலோசெயர் 4:17

 

தேவன் தம் பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் ஊழியம் வைத்திருக்கிறார். இந்த தியானத்தை வாசிப்பவர்களில் சிலர் என்ன ஊழியம் செய்வது என்ற கேள்விக்குறியோடு இருக்கலாம். கர்த்தரிடம் கேளுங்கள், தேவன் உங்களுக்கு வழிகாட்டுவார். சூழ்நிலைகள், உள் உணர்வுகள், வேதவசனங்கள், ஊழியர்கள் மூலம் பேசுவார். ஏதாவது ஒரு ஊழியம் உங்களைத் தேடி வரும்படி செய்வார். ஜெப ஊழியம் எல்லோரும் எவ்விடத்திலும் எந்ந நாளிலும் செய்யலாம். இந்த தியான இதழில் ஒவ்வொரு நாளுக்காகவும் கொடுக்கப்பட்டுள்ள ஜெபக்குறிப்புகளுக்கு தவறாமல் ஜெபிக்க ஒப்புக்கொடுப்பீர்களா? கர்த்தர் நமக்குக் கொடுத்த ஊழியத்தை தியாகத்தோடு உண்மையாக நிறைவேற்ற கவனமாயிருக்க வேண்டும்.

 

தமஸ்கு வீதியிலே தன்னை சந்தித்த இயேசுவிடம் "நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர்" என்று சவுல் கேட்ட போது, புறஜாதிகளுக்கும், இஸ்ரவேலருக்கும், ராஜாக்களுக்கும் சுவிசேஷம் அறிவிக்கும் ஊழியத்தைப் பெற்று அதை நிறைவேற்ற மிகவும் கவனமாயிருந்தார் பவுல். கொர்நேலியு வீட்டில் நிறைவேற்றும்படி கர்த்தர் கொடுத்த ஊழியத்தை பேதுரு நிறைவேற்ற கவனமாயிருந்ததால் புறஜாதியார் மத்தியில் எழுப்புதல் ஏற்பட்டது. பிலிப்பு பெற்ற ஊழியத்தை நிறைவேற்ற கவனமாயிருந்த போது எத்தியோப்பிய மந்திரி இரட்சிக்கப்பட்டார். அப்போஸ்தலர்கள் தங்கள் ஊழியத்தில் கவனமாயிருந்த போது திரளான ஆத்துமாக்கள் இரட்சிக்கப்பட்டு சபை அனுதினமும் வளர்ந்தது.

 

பழைய ஏற்பாட்டில் ஒபதியா மூலம் ஆகாப் ராஜாவை சந்திக்க வாய்ப்பு பெற்ற எலியா, கர்மேல் பர்வதத்தில் எழுப்புதல் ஏற்பட அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டார். கர்த்தர் கொடுத்த ஊழியத்தை கவனமாக நிறைவேற்றுபவர்களை கர்த்தர் வெறுமனே விட்டு விடுவதில்லை. எலியாவைப் பராமரிக்க கட்டளை பெற்ற சாறிபாத் விதவை அதை நிறைவேற்றிய போது பஞ்சகாலம் முழுவதும் கர்த்தர் அவளையும், அவள் மகனையும் ஆதரித்தார். அவள் மகன் மரித்த போது உயிரோடு எழுப்பி அவளை மகிழச் செய்தார்.

 

பிரியமானவர்களே! கர்த்தா கொடுத்த ஊழியத்தை நிறைவேற்றும்படி கவனமாயிருங்கள். எழுப்புதலில், தேவன் உங்களை வல்லமையாய் பயன்படுத்துவார். உங்கள் தேவைகளை சந்திப்பார். முழுநேர, பகுதி நேர ஊழியம் எதுவாயிருந்தாலும் எல்லோருக்கும் ஒரே கூலி கொடுப்பவர் நம் தேவன். ஊழியம் செய்ய நீங்கள் ஆயத்தமா?

- Mrs. கீதா ரிச்சர்ட்

 

ஜெபக்குறிப்பு:

நமது ஊழியத்தில் பழுதாகிக் காணப்படும் நான்கு சக்கர வாகனங்கள் சரி செய்யப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al