By Village Missionary Movement
Wednesday, 08-May-2024இன்றைய தியானம்(Tamil) 08.05.2024
எழுப்புதலுக்கு முன்னானது தாழ்மை
"…தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்" - லூக்கா 18:14
பலவிதமான தத்துவங்கள் உலகத்தில் வாழும் எல்லா தரப்பட்ட மக்களாலும் பேசப்படுவதுண்டு. வேதத்திலும் சில அடைமொழிகள் உண்டு. "அழிவுக்கு முன்னானது அகந்தை" (நீதிமொழிகள் 16:18) "விழுதலுக்கு முன்னானது அகந்தை" இதற்கு லூசிபர் ஒரு அடையாளமாக இருக்கிறான். பெருமையினால் விழுந்தவன், நம்மையும் பெருமையினால் விழ வைக்க பல தந்திரங்களை செய்து கொண்டேயிருக்கிறான்.
யூதா, இஸ்ரவேலை ஆண்ட ராஜாக்கள் தங்களைத் தாழ்த்திய போது உயர்ந்தார்கள். மேட்டிமையாக ஆட்சி செய்த போது தாழ்த்தப்பட்டு அழிந்தார்கள். இவையெல்லாம் நமக்கு திருஷ்டாந்தமாக எழுதப்பட்டுள்ளது.
எழுப்புதலை நாம் காண வேண்டுமானால் கிறிஸ்தவர்களாகிய நாம் சீஷர்களாக மாற வேண்டும். இயேசுவுக்காக செயலாற்ற வேண்டும். தேவனுடைய ராஜ்ய கட்டுமான பணியில் ஈடுபட்டிருக்கிற நாம் அந்தஸ்து, பேர், புகழ் பார்க்காமல் இயேசுவின நாமம் உயர்த்தப்பட வேண்டுமென்று உழைக்க வேண்டும்.
உலக மக்கள் எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை, என் எதிரிக்கு இரண்டு கண்ணும் போக வேண்டுமென்று போட்டி பொறமையோடு செயல்படுகிறார்கள். ஆனால் நாம் யோவானைப் போல "நான் சிறுகவும் அவர் பெருகவும்" வேண்டுமென்று உழைத்தால் மாத்திரமே எழுப்புதலைக் காண முடியும். இயேசுவின் முதல் வருகைக்கு முன் மக்கள் உள்ளத்தைப் பண்படுத்திய யோவான் போல் இரண்டாம் வருகைக்கு உலக மக்களை நமது உழைப்பினாலும், ஜெப ஐக்கியத்தினாலும் ஆதாயப்படுத்தும் யோவான் ஸ்நானகனைப் போல நாம் மாற முடியும்.
அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டன் முதல் ஜனாதிபதியாகவும், முதல் தர ஜனாதிபதியுமாக விளங்கக் காரணம் என்ன? அவர் ஜனாதிபதி ஆகும் முன் அமெரிக்காவின் தலைமை தளபதியாக இருந்தார். அவர் ஒருநாள் படை வீரர்களின் பயிற்சிகளையும், அவர் செய்யும் வேலைகளையும் மாறுவேடத்தில் சென்று பார்வையிட குதிரையில் சென்றார். அப்போது ஒரு போர்வீரன் தனது கீழ் இருக்கும் வீரர்களை கடுமையாக வேலை வாங்கிக் கொண்டிருந்தார். ஒரு பெரிய உருட்டுக்கட்டையை உருட்ட முடியாமல் தவித்த வீரனுக்கு உதவ வாஷிங்டன் இறங்கினார். வேலை வாங்கும் வீரனையும் உதவி செய்வோம் வாருங்கள் என்றார். அதற்கு வேலை வாங்கும் வீரன், நான் வேலை வாங்குபவன், வேலை செய்பவன் இல்லை என்றான். உடனே ஜார்ஜ் வாஷிங்டன் உருட்டுக் கட்டையை உருட்டி உதவி செய்து விட்டு செல்லும் முன் இதுபோல் வேலைக்கு உதவி தேவைப்பட்டால் என்னை அழையுங்கள் என்றார். நீ எங்கே இருக்கிறாய்? நீ யார்? என்று கேட்டான். அதற்கு நான் ஜார்ஜ் வாஷிங்டன் தலைமை தளபதி என்றார். வேலை வாங்கிய வீரன் முகம் குப்புற விழுந்து வணங்கி மன்னிப்பு கேட்டான். இயேசுவும் நம்மை பார்க்கிறார். எழுப்புதலுக்கு தடையாக இருக்கும் நமது பெருமையை அகற்றி தாழ்மையாக இருக்க, உழைக்க, ஜெபிக்க, தியாகமாக கொடுக்க அழைக்கிறார். நீங்கள் ஆயத்தமா?
- D. செல்வராஜ்
ஜெபக்குறிப்பு:
இம்மாதம் நம்முடைய ஊழியர்களின் பணியிட மாற்றத்தில் தேவகரம் உடனிருக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864