By Village Missionary Movement
Saturday, 04-May-2024இன்றைய தியானம்(Tamil) 04.05.2024
அன்பு யார் மேலே
"…நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே” - கலாத்தியர் 1:10
1961ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இங்கிலாந்தின் மகாராணியாகிய எலிசபெத் நேபாளத்தின் தலைநகரமான காத்மாண்டுக்கு வந்திருந்தார். அப்பொழுது எவரெஸ்ட் சிகரத்தின் அருகிலுள்ள கிராமத்தில் வசிக்கும் குஞ்சோவுக்கும் அவரது மனைவியாகிய சும்பிக்கும் மகாராணியை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. சும்பி அப்போது நிறைமாத கர்ப்பிணியாகவும் இருந்தாள். அவர்கள் நீண்ட தூரம் கரடுமுரடான பாதை வழியாக 180 மைல் தூரத்தைப் பத்து நாட்களில் கடந்தனர். வழியில் பிரசவம் ஏற்பட்டது. ஒரு மணி நேரம் மட்டுமே ஓய்வு எடுத்துவிட்டு மறுபடியும் கையில் குழந்தையுடன் பயணம் செய்து மகாராணியை சந்தித்தனர். மகாராணியைக் காணவேண்டும் என்ற ஆர்வமே கரடு முரடான பாதைகளை கடந்து செல்லத் தூண்டியது.
அதுபோல தானியேலுக்கு ஆண்டவர் மேலிருந்த பக்திவைராக்கியம் தடைகளைத் தாண்டி செயல்பட தூண்டியது. ராஜாவைத் தவிர யாரையும் பணிந்து கொள்ளக்கூடாது என பத்திரத்தில் ராஜா கையெழுத்திட்டது தெரிந்தும் தான் முன்பு செய்து வந்தபடியே ஜெபித்தார். தேவனை சந்திக்கும் நேரத்திற்கு தடைகள் வந்தாலும் தேவன் மீதுள்ள அன்பினிமித்தம் தொடர்ந்து செய்கிறார். சிங்கங்களின் கெபி பரிசாக கிடைத்தாலும் தயங்காமல் அங்கும் செல்கிறார். ஆனால் இன்று கிறிஸ்தவர்களாகிய நம்மில் அநேகர் இயேசுவை நேசிக்கிறேன் என சொல்லுகிறோம். ஆனால் சிறு கஷ்டம், சோர்வு, தோல்விகள் வந்ததும் துவண்டு கிறிஸ்துவை விட்டு பின் வாங்கி விடுகிறோம். கிறிஸ்துவின் மீது அன்பிருந்தால் கஷ்டங்கள், சோர்வுகள், தோல்விகள் ஒரு பொருட்டாகத் தெரியாது. சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ தேவன் மீதுள்ள அன்பினால் அக்கினிச் சூளையில் போடப்பட்ட போதிலும் அவரை விட்டு விடவில்லை.
பிரியமானவர்களே! நம் அன்பு யார் மீது உள்ளது? மனிதர்களை திருப்திபடுத்த வேண்டும் என்றா? தேவனைப் பிரியப்படுத்த வேண்டும் என்றா? உங்கள் அன்பு தேவன் மீது இருந்தால் அவருக்காக எவற்றை சகித்தீர்கள்? எதை விட்டுக் கொடுத்தீர்கள்? என சிந்தியுங்கள். அவர் மீதுள்ள அன்பு சகலத்தையும் சகிக்கத் தேவையான பெலனையும் நமக்குத் தரும். நம் முதல் அன்பும் முழு அன்பும் அவர் மீது இருந்தால் போதும். தேவனுக்காக பாடுகள் மற்றும் கஷ்டங்களின் மத்தியிலும் நிலைத்திருக்க முடியும். அவரும் இதற்கான பெலனையும் உங்களுக்குத் தந்தருளுவார். அன்பு செலுத்துங்கள், அவருக்காக வாழுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக!
- Mrs. அனிதா அழகர்சாமி
ஜெபக்குறிப்பு:
ஆந்திரா மாநிலம் விஜயநகரம் பணித்தளத்தில் கட்டப்படும் புதிய ஆலய கட்டுமான பணிகளுக்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864